;
Athirady Tamil News

பிரித்தானியாவில் ஓராண்டு உச்சத்தைத் தொட்ட பணவீக்கம்

0

பிரித்தானியாவில் பணவீக்கம் கடந்த ஓராண்டில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், அடுத்த மாதமும் இங்கிலாந்து மத்திய வங்கி வட்டி வீதத்தை அதிகரிக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு வலுப்பெற்றுள்ளது.

பிரித்தானியாவின் தேசிய புள்ளிவிவர அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, முந்தைய மாதத்தில் 3.5 சதவீதமாகக் காணப்பட்ட வருடாந்தப் பணவீக்க வீதம், ஒக்டோபர் மாதத்தில் 3.6 சதவீதமாக அதிகரித்துள்ளது.

சர்வதேச எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் எரிசக்தி விலைகளின் அதிகரிப்பு ஆகியன இந்தப் பணவீக்க உயர்வுக்கு முக்கிய காரணங்களாகக் குறிப்பிடப்படுகின்றன.

குறிப்பாக, ஈரான் போர் மற்றும் அதனைத் தொடர்ந்து ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெருக்கடிகளால் சர்வதேச சந்தையில் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக எரிபொருள் நிரப்பு நிலையங்களி Tyல் விலைகள் அதிகரித்துள்ளன.

மேலும், வீடுகளுக்கான எரிசக்திக் கட்டணங்களும் அதிகரிக்கவுள்ளதால், எதிர்வரும் மாதங்களில் பணவீக்கம் இங்கிலாந்து மத்திய வங்கியின் இரண்டு சதவீத இலக்கையும் தாண்டி உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் டிசம்பர் மாதத்திலும் வட்டி வீதத்தை மீண்டும் அதிகரிப்பதைத் தவிர்ப்பது கடினமாக இருக்கலாம் என இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் தலைமைப் பொருளாதார நிபுணர் சுரேன் திரு தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், இங்கிலாந்து மத்திய வங்கி இந்த மாதத் தொடக்கத்தில் தனது பிரதான வட்டி வீதத்தை 3.75 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக உயர்த்தியிருந்தது.

மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட இந்த அதிகரிப்பு, பிரித்தானியாவின் கடன் பெறும் செலவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளை, எதிர்வரும் வாரங்களில் எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் தொடர்ந்து குறைந்தால், அடுத்த கோடைகாலத்தில் வட்டி வீதம் ஐந்து சதவீதத்தை எட்டும் என்ற மத்திய வங்கியின் கணிப்பு மாற்றமடையக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

எரிசக்தி விலைகளின் போக்கு பிரித்தானியாவின் பணவீக்கத்திலும் வட்டி வீதத் தீர்மானங்களிலும் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, சர்வதேச எரிசக்தி விலைகள் குறைவடைந்தால், பிரித்தானியா மட்டுமன்றி ஏனைய நாடுகளின் மத்திய வங்கிகளும் வட்டி வீதங்களை உயர்த்த வேண்டிய அழுத்தம் குறையக்கூடும் எனப் பொருளாதார வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.