செம்மணி மண்ணுக்குள் புதைந்திருக்கும் மௌன சாட்சியங்கள்!
செம்மணி மண்ணுக்குள் புதைக்கப்பட்டவர்களின் நீதிக்காக 30 ஆண்டுகள் தாண்டியும் ஏங்கிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் மாறி மாறி வந்த அரசாங்கங்கள் உள்ளக விசாரணைப் பொறிமுறைகள் என காலத்தை இழுத்தடித்து, எமக்கு ஏமாற்றத்தை மட்டுமே பரிசளித்துள்ளனர், அதனால்தான் உண்மையை வெளிக்கொணரவும், குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தவும் சர்வதேச நீதிப் பொறிமுறையே அவசியம் எனக் கோரி வருகிறோம் என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். செம்மணி சிந்துபாத்தி இந்து மாயான பகுதியில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியில், மூன்று கட்டங்களாக 110 நாட்கள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
செம்மணிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் 583 எழும்புக்கூடுகள் மீட்கப்பட்டமை தொடர்பில், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா நீதிமன்றத்தில் சமர்ப்பித்த மூன்றாவது இடைக்கால அறிக்கை பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த மனிதப் புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட உடல்கள் தொற்றுநோய் அல்லது இயற்கைப் பேரழிவுகளால் உயிரிழந்தவர்களுடையதாக இருக்கலாம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பல தசாப்தங்களாக நீதிக்காகக் காத்திருக்கும் பாதிக்கப்பட்ட மக்களின் நீண்ட கால வேதனைக்கும் சந்தேகங்களுக்கும் மத்தியில் வெளியாகியுள்ள இந்த மதிப்பீடு, அவர்களது ஆறாத வடுவில் பேரிடியாக இறங்கியுள்ளதாக மனித உரிமை ஆர்வலர்களும் உறவினர்களும் கவலை தெரிவிக்கின்றனர்.
நீதிமன்ற விசாரணைகளும் அறிவியல் பூர்வமான தடயவியல் ஆய்வுகளும் மட்டுமே இந்த மரணங்களின் உண்மையான பின்னணியை வெளிக்கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இடைக்கால அறிக்கையின் இந்த முடிவுகள் சமூக மட்டத்தில் தீவிர விவாதங்களை உருவாக்கியுள்ளன.அந்த அறிக்கையை தாம் முற்றாக நிராகரிப்பதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும் தமிழ் அரசியல் தலைவர்களும் தெரிவித்தனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணைகள் தேவை எனவும், தொல்லியல் பேராசிரியரின் இடைக்கால அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிவஞானம் சிறிதரன் ஆகியோரின் பங்கேற்புடன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கம் போராட்டத்தை முன்னெடுத்ததுடன், போராட்டத்தின் முடிவில் ராஜ் சோமதேவாவின் கொடும்பாவியையும், அவரது இடைக்கால அறிக்கையின் நகலையும் தீயிட்டுக் கொளுத்தினர். நாளைய தினம் வியாழக்கிழமை செம்மணி புதைகுழி தொடர்பான நிர்வாகக் கூட்டம், யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதவான் தலைமையில் நடைபெறவுள்ளது. அதில் தொல்லியல் பேராசிரியரின் அறிக்கை தொடர்பில் காரசாரமான கருத்துகளை பாதிக்கப்பட்டவர்கள் நலன் சார்ந்து முன்னிலையாகவுள்ள சட்டத்தரணிகள் முன் வைக்கும் சாத்தியம் உண்டு. அதேவேளை கடந்த மாதம் 19ஆம் திகதி நடைபெற்ற செம்மணி மனித புதைகுழி வழக்கில், செம்மணி புதைகுழி தொடர்பான முக்கிய சாட்சியமாக கருதப்படும் கிரிசாந்தி கொலை வழக்கின் மரண தண்டனைக் கைதியான லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்சவிடம் விசாரணைகளை மேற்கொண்டு, வாக்கு மூலங்களை பெற்றுக்கொள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்று அனுமதி வழங்கியிருந்தது. அதேவேளை மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் இறுதிக் கட்டங்களில், புதைகுழி தவிர்ந்த ஏனைய 14 இடங்களில் எழுமாறாக அகழப்பட்ட சோதனைக்குழிகளில், 05 சோதனைக் குழிகளுக்குள், 08 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு, அவை அகழ்ந்தெடுக்கப்பட்டன. மேலும் குறித்த பகுதிகளில் என்புக்கூடுகள் காணப்படலாம் எனும் சந்தேகம் நிலவுவதனால் , நான்காம் கட்ட அகழ்வு பணிகளை முன்னெடுப்பது தொடர்பிலும், நாளைய கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம். இவ்வாறாக நாளைய தினம் வியாழக்கிழமை செம்மணி மனித புதைகுழி தொடர்பிலான நிர்வாகக் குழுக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முக்கிய கோரிக்கைகளையும் முன் வைத்துள்ளனர். பேராசிரியர் ராஜ் சோமதேவா, அனுஷா வன்னிநாயக்க ஆகியோரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையை இறுதியான தடயவியல் முடிவாக ஏற்றுக்கொள்ளக் கூடாது. அதன் குறைபாடுகள் சுயாதீனமாக மதிப்பீடு செய்யப்பட வேண்டும். சர்வதேச அங்கீகாரம் பெற்ற தடயவியல், தொல்லியல் நிபுணர்கள், தடயவியல் மருத்துவர்கள், மனித என்பியல் நிபுணர்கள், மரபணு ஆய்வாளர்கள் மற்றும் மனித உரிமைகள் சார்ந்த நிபுணர்கள் அடங்கிய சுயாதீன சர்வதேச நிபுணர் குழு நியமிக்கப்பட வேண்டும். அத்தரப்பினர் செம்மணி – சித்துப்பாத்தி தொடர்பான ஆய்விலும், அகழ்விலும் பார்வையாளர்களாக அல்லாமல் நேரடிப் பங்கேற்பாளர்களாக ஈடுபடல் வேண்டும். அகழ்ந்தெடுக்கப்பட்ட அனைத்து மனித எச்சங்களும் சர்வதேச தரத்திலான தடயவியல் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக மரணத்திற்கான காரணம், காயங்களின் தன்மை, மரணத்தின் காலப்பகுதி மற்றும் புதைக்கப்பட்ட சூழ்நிலைகள் தொடர்பில் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்களை அடையாளம் காண்பதற்காக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களிடமிருந்து DNA மாதிரிகள் பெறப்பட்டு, சர்வதேச தரத்திலான மரபணு ஒப்பீட்டு ஆய்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். செம்மணி – சித்துப்பாத்தி அகழ்வாய்வின் அனைத்து கட்டங்களும் முழுமையான காணொளி, புகைப்படம், வரைபடம், ஆவணப்படுத்தல் மூலம் வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ளப்பட வேண்டும். அனைத்து ஆதாரங்களும் பாதுகாக்கப்பட வேண்டும். அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள், அவற்றுடன் தொடர்புடைய பொருட்கள், ஏனைய ஆதாரங்கள் அனைத்தும் உரிய சட்டப் பாதுகாப்புடன் பேணப்பட வேண்டும். அவை அழிக்கப்படுவதையோ, மாற்றப்படுவதையோ, ஆதாரங்கள் பாதிக்கப்படுவதையோ தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் முன்னர் வெளிப்படுத்தப்பட்ட சாட்சியங்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பதிவுகள், நீதிமன்ற ஆவணங்கள், வரலாற்று ஆதாரங்கள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு சர்வதேச விசாரணைக்கு கொண்டுசெல்லப்படல் வேண்டும். இதுபோன்று அறிக்கைகளில் விளையாடும் உள்ளக நீதிவிசாரணையை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம். அகழ்வாய்வுப் பகுதியிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மேலதிக மனிதப் புதைகுழிகள் உள்ளனவா என்பதைக் கண்டறிய விரிவான அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். உதாரணமாக மாணவி கிருஷாந்தி உள்ளிட்டவர்களை படுகொலை செய்த குற்றவாளியான சோமரத்ன ராஜபக்ச 1998ஆம் ஆண்டில் செம்மணிக்கு வெளியே தாம் புதைத்ததாக அடையாளம் காட்டிய 21 இடங்களும் அகழ்வு செய்யப்படல் வேண்டும் போன்ற முக்கிய கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் கோரிக்கைகள், நாளைய, செம்மணி புதைகுழி தொடர்பான நிர்வாகக் குழுக் கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டு முக்கியமான முடிவுகள் எடுக்கப்படக் கூடிய சாத்தியங்கள் உண்டு. எதுவாக இருந்தாலும், செம்மணி மண்ணுக்குள் புதைக்கப்பட்டவை வெறும் மனித எலும்புக்கூடுகள் மட்டுமல்ல, அவை படுகொலைகளின் மௌன சாட்சியங்கள் ஆகும். எனவே செம்மணிக்கு வழங்கப்படும் நீதியே, எதிர்காலத்தில் இவ்வாறான மனிதப் பேரவலங்கள் மீண்டும் நிகழாதிருப்பதற்கான உத்தரவாதமாக அமையும்.
சோமரத்ன ராஜபக்சவிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் பெற்றுக்கொண்ட வாக்குமூலங்கள், நாளைய தினம் (வியாழக்கிழமை) நடைபெறவுள்ள நிர்வாகக் கூட்டத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், குறித்த புதைகுழியின் கால எல்லையைக் கண்டறிவதற்கான கார்பன் (C-14) பரிசோதனைகளை முன்னெடுப்பதற்குக் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கடந்த 19ஆம் திகதி நீதிமன்றில் அனுமதி கோரியிருந்தனர். இவ்விடயம் நாளை நவம்பர் 19ஆம் திகதி நடைபெறும் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் ஆராயப்படும் என மன்று அறிவித்திருந்த நிலையில், நாளைய கூட்டத்தில் அது தொடர்பிலான இறுதித் தீர்மானங்களும் எடுக்கப்படவுள்ளன.