;
Athirady Tamil News

ஜனாதிபதி தேர்தலும் அவசரப்பட்ட சஜித்தும்!! (கட்டுரை)

0

கடந்த மே மாதம் 15ஆம் திகதி, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போது, “ஜனாதிபதி தேர்தலை திட்டமிட்ட காலத்துக்கு முன்னதாக நடத்துவதற்கான அரசாங்கத்தின் பிரேரணைக்கு, ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவளிக்கும்” என அறிவித்தார்.

அதேநேரத்தில், அரசாங்கம் தனது வசதிக்காக, தேர்தல் நடைமுறைகளை கையாளும் முயற்சியை விமர்சித்த அவர், இது ஜனநாயகத்தை மீறுவதாகும் என்றும் கூறினார்.

ஜனாதிபதியின் அல்லது அவரது ஆதரவாளர்களின் பணிப்புரையின் பேரில் மாத்திரம், ஜனாதிபதி தேர்தலை திட்டமிடுவது அடிப்படையில் பிழையானது எனவும் வலியுறுத்தினார். விரைவானதும் ஜனநாயகத் தேர்தலை உறுதி செய்வதற்காக நியாயமானதும் வெளிப்படையான ஒழுங்குமுறைகளும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தைப் பற்றியும் அவர் குறிப்பிட்டார்.

2019 நவம்பரில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில், கோட்டாபய ராஜபக்‌ஷ வெற்றி பெற்று ஜனாதிபதியானார். அவரது பதவிக்காலம் 2024 வரை உள்ளது. கோட்டா, பதவி விலகியதன் பின்னர், கோட்டாவின் எஞ்சிய பதவிக் காலத்துக்கு, அரசியலமைப்பின் அடிப்படையில் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டார்.

இந்தநிலையில், மேற்சொன்ன கருத்தை சஜித் பிரேமதாஸ கூறிய மறுநாளே, அதாவது மே மாதம் 16ஆம் திகதி, இன்னொரு செய்தி ஊடகத்தில், ‘16ஆம் திகதி நடந்த ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழுக் கூட்டத்தில், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக, சஜித் பிரேமதாஸ முன்னிறுத்தப்படுவார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது’ என்று, செய்தி பிரசுரமாகி இருந்தது.

இது தொடர்பில், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும், சஜித்தின் நம்பிக்கைக்கு உரியவருமான ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான சுஜீவ சேனசிங்க ஆகியோர் சமர்ப்பித்த மேற்சொன்ன யோசனைக்கு, செயற்குழு கூட்டத்தில் ஏகமனதாக அங்கிகாரம் வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கூட்டம், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் நடைபெற்றது.

இவ்வளவு அவசர அவசரமாக, பிரதான எதிர்க்கட்சி தன்னுடைய ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரை அறிவிக்க வேண்டிய தேவை என்ன? பொதுவாக, ஜனாதிபதி தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்போ, அல்லது தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரோ ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை உத்தியோகபூர்வமாகக் கட்சிகள் அறிவிக்கும்.

ஆனால், ஜனாதிபதி தேர்தலுக்கு ஒன்றேகால் வருடத்துக்கும் அதிகமான காலம் இருக்கத்தக்கதாக, ஜனாதிபதி வேட்பாளர் இன்னார் தான் என்று, பிரதான எதிர்க்கட்சி தீர்மானிக்க வேண்டிய காரணம் என்ன என்பது சுவாரஷ்யமான கேள்வி.

‘ஐக்கிய மக்கள் சக்தி’ என்பது ஒரு பெருங்கூட்டணியாகத்தான் தொடங்கியது. சஜித் பிரேமதாஸ, சரத் பொன்சேகா, சம்பிக்க ரணவக்க, குமார வெல்கம, ரவூப் ஹக்கீம், திகாம்பரம், இராதாகிருஷ்ணன், மனோ கணேசன், ரிஷாட் பதியுதீன் என பல்வேறு தரப்பினர் கைகோர்த்த பெரும் கூட்டணியாக அது தொடங்கியது.

ஆனால், காலவோட்டத்தில் ஒவ்வொருவராக விடுபட்டு தனிவழி போகத் தொடங்கினார்கள். சரத் பொன்சேகா, ஐக்கிய மக்கள் சக்திக்குள் ஓரங்கட்டப்பட்டார். சம்பிக்க ரணவக்கவுக்கு ஐக்கிய மக்கள் சக்திக்குள் எந்தப் பதவியும் வழங்கப்படவில்லை. அவர், ‘43 படையணி’ என்ற ஒன்றைத் தொடங்கினார். தற்போது ‘ஐக்கிய குடியரசு முன்னணி’ என்ற புதிய கட்சியை ஸ்தாபித்திருக்கிறார்.

குமார வெல்கம, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்கவின் ஆதரவுடன் ‘புதிய லங்கா சுதந்திரக் கட்சி’ என்ற தனிக்கட்சியைத் தோற்றுவித்துவிட்டார். மறுபுறத்தில், ரவூப் ஹக்கீம், திகாம்பரம், இராதாகிருஷ்ணன், மனோ கணேசன், ரிஷாட் பதியுதீன் ஆகியோர் தத்தமது கட்சியின் பெயர்களில் இயங்குகிறார்களேயன்றி, ஐக்கிய மக்கள் சக்தியாக அடையாளப்படுத்துவதை தவிர்த்து வருவதைக் காணக்கூடியதாக உள்ளது. ஆகவே, ஐக்கிய மக்கள் சக்தி என்பது அது ஆரம்பித்தபோதிருந்த பெருங்கூட்டணியாக தற்போது இல்லை.

மாறாக, பெருளவுக்கு முன்னாள் ஐக்கிய தேசிய கட்சியினரைக் கொண்ட கட்சியாகச் சுருங்கிவிட்டது. அதிலும், சஜித் ஆதரவாளர்கள் முன்னிறுத்தப்பட்டு, கட்சியின் முக்கியஸ்தர்களாக நியமிக்கப்படுவதால், கிட்டத்தட்ட சஜித் பிரேமதாஸவின் கட்சியாகவே மாறிவிட்டது.

இதெல்லாம் சரி! சஜித் பிரேமதாஸவின் கட்சியாக மாறிவிட்ட ஐக்கிய மக்கள் சக்தி, அவசர அவசரமாகத் தனது அடுத்த ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக சஜித் பிரேமதாஸவை அறிவிக்க என்ன காரணம்?

கடைசி நிமிடத்தில், தான் ஓரங்கட்டப்பட்டு, ‘எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளார்’ என்ற பெயரில் வேறெவரும் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்டு விடுவாரோ என்ற அச்சம் சஜித் பிரேமதாஸவுக்கு எழுந்திருக்கலாம்.

ஏற்கெனவே, ரணில் எதிர்ப்பாளர்களையும், சஜித் ஆதரவாளர்களையும் தவிர்த்து, ஏனைய ஐக்கிய மக்கள் சக்தியினர் சஜித்தோடு இருப்பதா, ரணில் பக்கம் மீண்டும் தாவுவதா என்று மதில்மேல் பூனைகளாக இருக்கிறார்கள்.

இந்த நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் உபதலைவராக இருந்த பி.ஹரிசன், தனது ஆதரவை ரணிலுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளதுடன், 20ற்கு மேற்பட்ட சிரேஷ்ட ஐக்கிய மக்கள் சக்தியினர் விரைவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

ஆகவே, தனது கட்சியினர் கட்சி தாவப் போகிறார்கள் என்ற அச்சம், சஜித் பிரேமதாஸவை ஒருபுறம் வாட்டிக்கொண்டிருக்க, மறுபுறத்தில் மேற்குல இராஜதந்திரிகள், அரசு சாரா அமைப்புகள் மற்றும் அழுத்தக் குழுக்கள் என்பன, அடுத்த ஜனாதிபதி தேர்தல் பற்றி என்ன திட்டமிடுகின்றனவோ என்ற அச்சமும் சஜித்துக்கு கடுமையாக எழுந்திருக்கக்கூடும்.

குறிப்பாக 2010, 2015ஐப் போல, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் என புதிய எவரையாவது முன்னிறுத்த அனைத்து எதிர்க்கட்சிகளும், மேற்குலக இராஜதந்திரிகளும், அரசு சாரா அமைப்புகளும் அழுத்தக் குழுக்களும் ஆதரவளித்தால், தனக்கான வாய்ப்பு இல்லாமல் போய்விடுமோ என்று சஜித்தும், அவரது ஆதரவாளர்களும் அஞ்சியிருக்கக்கூடும். ஆகவே, அவர்கள் முந்துவதற்கு முன்னர், தாம் முந்திக்கொள்வது என்ற இந்த முடிவை அவர்கள் எடுத்திருக்கக்கூடும்.

இது அவர்களுக்கு நம்பத்தகுந்த சாக்கு ஒன்றை வழங்கும். அதாவது, நாளை மேற்குலகமோ, அரசு சாரா அமைப்புகள் மற்றும் அழுத்தக் குழுக்களோ எதிர்க்கட்சியின் பொது வேட்பாளர் பற்றிய பேச்சை எடுத்தால், “இல்லை! நாம் ஏற்கெனவே பிரதான எதிர்க்கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸதான் என்பதை அறிவித்துவிட்டோம்; இனி மாற்றுவது பொருத்தமல்ல” என நம்பத்தகுந்த சாக்கைச் சொல்ல முடியும்.

மேலும், இன்று ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ளவர்கள் கட்சி தாவுவது பற்றி ஒரு முறைக்கு இரு முறை, அவர்களை இது சிந்திக்கவும் வைக்கலாம் என்பதுகூட அவர்களது கணக்காக இருக்கலாம். அதாவது, அடுத்த ஜனாதிபதி தேர்தல் ரணில் எதிர் சஜித் ஆக அமையப் போகிறது. இதில் மாற்றமில்லை; இதை நாம் தற்போதே அறிவித்துவிட்டோம். பொது வேட்பாளர், புதிய வேட்பாளர் என்று எவரும் வரப்போவதில்லை. வெற்றி பெறப் போவது யாரென்று நீங்களே முடிவெடுத்து அவரோடு நில்லுங்கள். ஒருவேளை நீங்கள் விட்டு விட்டு போய்விட்டால், நாளை சஜித் ஜனாதிபதியானால், உங்களுக்கு எந்தவொரு வாய்ப்புமில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியினருக்கு சொல்லாமல் சொல்கிறார்கள் சஜித்தும், அவரது ஆதரவாளர்களும். அதேவேளை, தம்முடைய கூட்டுக் கட்சியினராக இருந்தவர்களுக்கும் இதே செய்தியை அவர்கள் அனுப்பி இருக்கிறார்கள்.

சஜித் பிரேமதாஸவுக்கான முக்கியத்துவம், அவரது தலைமைத்துவத்தையும், நலன்களையும் பாதுகாத்தல் என்பதைத் தாண்டி, இந்த முடிவுக்கு வேறு முக்கியத்துவமில்லை. இது மக்களை மையப்படுத்திய, மக்கள் நலனை முன்னிறுத்திய முடிவு அல்ல. ரணில் விக்கிரமசிங்கவைத் தோற்கடிக்க வேண்டும்; அதையும் சஜித்தே செய்ய வேண்டுமென்ற தனிநபர் வழிபாட்டு அரசியலைத்தான் இலங்கையின் பிரதான எதிர்க்கட்சி தனது அரசியலாக முன்வைத்துள்ளது. இந்த அரசியல் ராஜபக்‌ஷர்களின் அரசியலிலிருந்து பெரிதும் வேறுபட்ட ஒன்றல்ல.

You might also like

Leave A Reply

Your email address will not be published.