;
Athirady Tamil News

எந்தத் தேர்தல் இப்போது சாத்தியம்? !!

0

தேர்தல்களைப் பற்றிப் பேசிப்பேசியே, இலங்கை மக்களின் பெரும்பகுதிக் காலம் கழிந்து கொண்டிருக்கின்றது. தேர்தல் நடைபெறுமா, ஒத்திவைக்கப்படுமா, எந்தத் தேர்தல் முதலில் நடக்கும், அதில் யார் வெற்றி பெறுவார் என்று ஊகிப்பதில் அதிக நேரத்தை செலவிட்டுக் கொண்டிருக்கின்றோம்.

தேர்தல் என்பது மக்களது ஜனநாயக உரிமை. அது உரிய காலத்தில், நேர்மையான முறையில் நடத்தப்பட வேண்டும். ஆயினும், கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களின் ஊடாக, மக்களுக்கு என்ன பலன் கிடைத்தது? குறைந்தபட்சம் ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டதா என்பது மிகப் பெரிய கேள்விதான்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, தேர்தல் பிரசாரங்கள் ஆரம்பிக்கப்பட்ட பிற்பாடு, தேர்தலானது கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டு இருக்கின்றது.

ஒரு தேர்தலை நடத்துவதற்கு ஏதுவான பொருளாதார நிலையோ, மக்களின் மனநிலையோ இல்லை என்பது ஏற்கெனவே நன்றாகத் தெரிந்திருந்த சூழ்நிலையில், “இதோ தேர்தலை நடத்தப் போகின்றோம்” என்று ஒரு ‘படம்’ காட்டப்பட்டு, கடைசியில் அந்தக் காட்சி ‘ஒப்’செய்யப்பட்டுள்ளது.

நடக்கின்ற சம்பவங்களை தொகுத்து நோக்கினால், உள்ளூராட்சி தேர்தல் மிகக் கிட்டிய காலத்தில் நடப்பதற்கான நிகழ்தகவுகள் மிகக் குறைவாகவே தெரிகின்றன. இந்தப் பின்னணியில், இப்போது ஜனாதிபதி தேர்தல் பற்றியும் மாகாண சபைகளுக்கான தேர்தல் பற்றியும் அரசியல் அரங்கில் ஊடாட்டங்கள் வெளிப்படத் தொடங்கியுள்ளன.

அடுத்த வருட முற்பகுதியில் ஜனாதிபதி தேர்தலை நடத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மந்திர ஆலோசனைகளை மேற்கொண்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மறுபுறத்தில், இந்தியாவின் அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால், மாகாண சபைத் தேர்தல் நடைபெறலாம் என்ற ஊகங்கள் வெளியாகி இருக்கின்றன.

உள்ளூராட்சித் தேர்தலே ஒத்திவைக்கப்பட்டுள்ள தருணத்தில், திடுதிடுப்பென இன்னுமொரு தேர்தலுக்கு அகலக் கால் விரித்துப் பாய்வது அவ்வளவு சுலபான காரியமல்ல.

ஆனால், இப்படியே தேர்தல்கள் எதுவுமின்றி அரசாங்கத்தை நீண்டகாலத்துக்கு இழுத்துச் செல்ல முடியாது என்ற அடிப்படையில், அடுத்ததாக ஒரு தேர்தல் நடக்கும் என்றால் அது எந்தத் தேர்தலாக இருக்கும் என்பதே இந்தக் கருத்தாடலின் உள்ளர்த்தம் எனலாம்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை எடுத்துக் கொண்டால், இதற்கு முன்னர் பலமுறை பிரதமராக இருந்த போதும் ஜனாதிபதியாவதற்கான மக்கள் ஆணை கிடைத்திருக்கவில்லை. கோட்டாபய ராஜபக்‌ஷ அதிகாரத்தில் இருந்து விரட்டப்பட்ட பிறகு, ரணில் விக்கிரமசிங்கவை காலம், அக்கதிரையில் அமர்த்தி அழகு பார்த்துக் கொண்டிருக்கின்றது.

இப்போது, நாட்டின் வீழ்ச்சிநிலை மாறி வருகின்றது. பல குறிகாட்டிகளில் நிரந்தரமாகவோ, தற்காலிகமாகவோ முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதான தோற்றப்பாடு தெரிகின்றது. ரணில்தான் இந்த மீட்சிக்கு காரணமானவர் என்பதை, அரசியல்வாதிகளும் மக்களும் பொதுவெளியிலேயே பேசுகின்றனர்.

இருப்பினும், மக்களின் மூலம் நேரடியாக தெரிவு செய்யப்படாத ஜனாதிபதி என்றும், மொட்டுவின் முட்டின் துணையோடு நிற்பவர் என்றும் அவர் மீதான விமர்சனங்கள் அடிக்கடி முன்வைக்கப்படுகின்றன.

இந்தப் பின்னணியிலேயே, அவர் ஒரு ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான சாத்திய வாய்ப்புகள் குறித்து ஆராய்வதாக தெரிகின்றது. இப்போது, தனக்கு கிடைத்திருக்கின்ற மக்கள் ஆதரவை, வேறு ஒரு தேர்தலை நடத்தி குழப்பி விடாமல், நேரடியாகவே ஜனாதிபதி தேர்தல் என்ற கூடைக்குள் கொட்டிக் கொள்ளும் ஓர் எதிர்பார்ப்பின் வெளிப்பாடுதான் இது.

இந்தப் பதவிக்காலத்தோடு அவர் ஜனாதிபதி கதிரையில் இருந்து இறங்கி விடுவார். எனவே, அதனை வைத்து மக்கள் ஆணையைப் பெறுவதற்காக இன்னுமொரு தடவை முயன்று பார்க்க நினைப்பது இயல்பானது.

ஏனெனில், அவருக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. ஜனாதிபதி பதவிகூட அவருக்கு அடித்த அதிர்ஷ்டம்தான். இப்போது கிடைத்தால் இலாபம்; கிடைக்காவிட்டால் எந்த நட்டமும் வந்து விடப் போவதில்லை என்ற நிலையில்தான் ரணில் விக்கிரமசிங்க இருக்கின்றார் எனலாம்.

அது வெற்றியளித்தால், அவருக்கு வரலாற்று வெற்றி கிடைப்பது மட்டுமன்றி, அதன்மூலம் ஐக்கிய தேசிய கட்சியை மீளக் கட்டியெழுப்பவும் வாய்ப்பும் கிடைக்கும்.

இது இவ்வாறிருக்க, மாகாண சபைத் தேர்தல் பற்றிய கதைகளும் மீள எழுந்திருக்கின்றன. பல அரசியல்வாதிகள் இதுபற்றி கருத்துகளை முன்வைத்துள்ளனர். குறிப்பாக, இந்தியாவின் அழுத்தத்தின் காரணமாக மிகக் கிட்டிய காலத்தில் மாகாண சபைத் தேர்தல் நடக்கலாம் என பசில் ராஜபக்‌ஷ கூறியுள்ளதாக செய்தியொன்று கூறுகின்றது.

மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்துமாறு, பல தரப்பினர் அழுத்தம் கொடுத்து வருகின்ற சமகாலத்தில், மாகாண சபை முறைமையையே முற்றாக நீக்க வேண்டும் என்று இன்னொரு தரப்பு கூறி வருகின்றது. அரசாங்கத்துக்கும் இந்தியாவுக்கும் இதற்குப் பின்னால் பல சாதக, பாதக விளைவுகள் உள்ளன.

இலங்கையில் உள்ள 09 மாகாண சபைகளின் ஆயுட்காலமும் முடிவடைந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. மாகாண சபை என்ற அரச கட்டமைப்பு இயங்குகின்றது. ஆனால், மாகாண அரசாங்கத்தில் முதலமைச்சர் இல்லை. எல்லா வேலைகளையும் ஆளுநர்களைக் கொண்டு மத்திய அரசாங்கம் செய்து கொண்டிருக்கின்றது.

மாகாண சபை தேர்தலை நடத்துமாறும் 13ஆவது திருத்தத்தை அமல்படுத்துமாறும் இந்தியா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றது. இதேகோரிக்கையை தமிழ்த் தரப்பு முன்வைத்து வருகின்றது. குறிப்பாக காணி, பொலிஸ் அதிகாரங்களை வலியுறுத்துகின்றது.

முஸ்லிம் தரப்புக்கும் இது விடயத்தில் ஒரு தெளிவான நிலைப்பாடு இருக்க வேண்டும். ஆனால், மாகாண அரசியலை நம்பி இருக்கின்றவர்கள், முதலமைச்சர் மற்றும் மாகாண அமைச்சர் கனவுடன் இருப்பவர்கள் தேர்தல் நடக்க வேண்டும் என்ற எண்ணத்திலும், ஏனைய முஸ்லிம் எம்.பிக்கள் தேர்தல் நடக்காவிட்டாலும் நல்லது என்ற நிலைப்பாட்டிலும் இருப்பதாகவே தெரிகின்றது.

அதாவது, மாகாண சபை மற்றும் அதனூடான அதிகாரங்கள் என்ற விடயத்தை வழக்கம் போல தமது சுயஅரசியல் என்ற புள்ளியில் நின்று கொண்டுதான் முஸ்லிம் அரசியல்வாதிகள் நோக்குகின்றனர். அதற்கப்பால் சமூகம் சார்ந்த தெளிவான நிலைப்பாடுகள் எதுவும் கிடையாது.

உண்மையில், மாகாண சபைக்கு தேர்தல் ஒன்றை நடத்துவது அரசாங்கத்துக்கப் பெரிய விடயமே இல்லை. ஆனால், தேர்தலை நடத்தினால் அமைகின்ற புதிய மாகாண ஆட்சியில் 13ஆவது திருத்தத்தை அமல்படுத்த வேண்டும் என்று இந்தியா ஒற்றைக்காலில் நிற்கும்.

குறிப்பாக காணி, பொலிஸ் அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்க வேண்டி ஏற்படும். இன்னும் சொல்லப் போனால், நாட்டுக்குள் இன்னுமொரு சிறிய பிரகடனப்படுத்தப்படாத தனி இராச்சியம்போல மாகாணங்கள் அதிலும் குறிப்பாக வடக்கும், கிழக்கும் செயற்படலாம் என்ற அச்சம் உள்ளது.

மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் இருந்தே கணிசமான சிங்கள அரசியல்வாதிகள் இதற்கு எதிராக பல போராட்டங்களை முன்னெடுத்தனர். மாகாண சபைகள் திருப்திப்படுமளவுக்கு வினைத்திறனாக செயற்படத் தவறிய பின்புலச் சூழலில், மாகாண சபை முறைமை ஒரு ‘வெள்ளை யானை’ என்ற கருத்து தென்னிலங்கையில் வலுப் பெற்றுள்ளது.

இந்தியாவும் தமிழ்த்தரப்பும், ஏன் ஒருசில பெருந்தேசிய அரசியல்வாதிகளும் மாகாண சபை தேர்தல் அவசரமாக நடத்தப்பட வேண்டும் என்று கோரி வருகின்ற போதிலும், மறுபுறத்தில் மாகாண சபை முறைமையை முற்றாகவே ஒழிக்க வேண்டும் என்ற கருத்தை கணிசமான சிங்கள அரசியல் தரப்புகள் முன்வைத்து வருகின்றன.

எனவே, மாகாண சபை தேர்தலை நடத்துவது என்ற முடிவை ஜனாதிபதியோ அரசாங்கமோ எடுத்தால், 13ஆவது திருத்தத்தை அமல்படுத்துவதா? எந்தளவுக்கு அமலாக்கம் செய்வது என்ற முடிவை அதற்கு முன்னரே எடுத்திருக்க வேண்டும். அது அவ்வளவு இலகுவான காரியமல்ல. அதனாலேயே தேர்தல் இழுத்தடிக்கப்படுகின்றது எனலாம்.

ஒருவேளை ஜனாதிபதி தேர்தலில் அல்லது அதற்கு அடுத்ததாக நடைபெறவுள்ள தேர்தலில் இந்தியாவின் ஆதரவைப் பெற்றுக் கொள்ளும் நோக்கமிருந்தால், அதற்காக தேர்தலை நடத்தும் முனைப்புகளைச் செய்யலாம் என்று கருதினாலும், இலங்கையில் உறைநிலையில் இருக்கின்ற களநிலைமைகள் அதற்குச் சாதகமானவையாக தெரியவில்லை.

எது எவ்வாறிருப்பினும், அரசாங்கம் இந்தியாவை சமாளிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள் என்பது வெள்ளிடைமலை. அதிகாரப் பகிர்வு, 13ஆவது திருத்தத்துக்கான தனது விருப்பத்தை ஜனாதிபதி ரணில் பகிரங்கமாகவே கூறி வருகின்றார் என்பது இதில் முக்கியமானது.

அதுமட்டுமன்றி, வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு இரு தமிழர்கள் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதுவும் குறிப்பாக, மலையகத்தைச் சேர்ந்த, இந்தியாவின் பின்புலமும் ஆதரவும் உள்ள செந்தில் தொண்டமான் கிழக்கு மாகாணத்துக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டமை இங்கு முக்கியமான ஒரு நகர்வாகும்.

உள்ளூராட்சி தேர்தலையே நடத்த முடியாத ஒரு சூழ்நிலையில், வெளி அழுத்தங்களுக்காக, தடை தாண்டிப் பாய்ந்து மாகாண சபை தேர்தல் ஒன்றை அரசாங்கம் மிகக் கிட்டிய காலத்தில் நடத்துவதற்கான நிகழ்தகவுகள் மிகக் குறைவாகவே தெரிகின்றன.

ஆனால், தேர்தலை நடத்தும் வரை அல்லது மாகாண சபை முறைமையையோ 13 இனையோ பெருந்தேசியத்திற்கு விருப்பமான விதத்தில் மாற்றியமைக்கும் வரைக்கும், அழுத்தம் கொடுப்போரை சமாளிக்கும் நகர்வுகள் தொடருமென எதிர்பார்க்கலாம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.