நயினாதீவு நாகபூஷணி அம்மன் கோவில் உயர் திருவிழா: முன்னேற்பாடுகளை நேரில் ஆய்வு செய்த அரசாங்க அதிபர்

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் உயர் திருவிழா – முன்னாயத்த கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கமைய எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை அரசாங்க அதிபர் நேரில் ஆராய்வு
நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் உயர் திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் அரசாங்க அதிபர் தலைமையில் 17.06.2025 அன்று யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்று பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
அத் தீர்மானங்களுக்கமைவாக எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளை ஆராய்வதற்காக அரசாங்க அதிபர் நேற்று( 22.06.2025 ) நயினாதீவுக்கு விஜயம் செய்தார்.
இதன்போது வீதி திருத்துவதற்கான துரித நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொண்டதுடன், கோவிலுக்கு முன்னாள் உள்ள தற்காலிக கடைகளை அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் பொருத்தமான நடவடிக்கைகளை 24.06.2025 ஆம் திகதிக்கு முன்னர் எடுக்குமாறு அரசாங்க அதிபர் தெரிவித்தார். மேலும், கோவில் புனிதத்தன்மையினை பேணும்முகமாக திண்மக்கழிவகற்றல் முறைமை, குடிநீர் வழங்கல், போக்குவரத்து ஒழுங்குகள், பாதுகாப்பு போன்றவை தொடர்பாகவும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அறிந்து கொண்டார்.
இதன் போது வேலணை பிரதேச சபையின் தவிசாளர், வேலணை பிரதேச செயலாளர், பிரதேச சபையின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய அறங்காவலர் சபை உறுப்பினர்கள் ஆகியோரும் உடனிருந்தார்கள்.