சர்வதேச நீதி கேட்டு சகலரும் வீதிக்கு இறங்குவோம் – தவிசாளர் நிரோஸ்

ஐ.நா. மனித உரிமைச் செயலாளர் நாட்டிற்கு வரும் நிலையில் எமது இனத்திற்கு எதிராக இலங்கை அரசு மேற்கொண்ட இனப்படுகொலைக்கு எதிராக சர்வதேச நீதி ஒன்றே ஏற்றுக்கொள்ளக்கூடியது என்ற உண்மையினை வெளிப்படுத்தி நாம் வீதிக்கு இறங்கவேண்டும் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஸ் தெரிவித்தார்.
அணையா விளக்கு மற்றும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள ஏனைய போராட்டங்களை மையப்படுத்தி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தமிழ் மக்கள் மீது அவர்களின் பூர்வீகத் தாயகத்தில் அரச பயங்கரவாதத்திற்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை உள்ளிட்ட பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் போரின் பின்பாக 15 ஆண்டுகள் நிறைவடைந்த போதும் எமக்கான நீதி உள்நாட்டில் வழங்கப்படவில்லை. உரிய விசாரணைகளுக்கான நீதிப் பொறிமுறை ஏனும் ஏற்படுத்தப்படவில்லை. அரசாங்கங்கள் மாறி மாறி ஆட்சி பீடம் ஏறிய போதும் தமிழ் மக்களின் பிரச்சினையினை திட்டமிட்டு காலம் தாழ்த்தி நீ;ர்த்துப் போகச் செய்யும் உத்தியே கடைப்பிடிக்கப்படுகின்றன. இந் நிலையில் அணையா விளக்கு உள்ளிட்ட பல போராட்டங்கள் தாயகத்தில் ஏற்பாடாகி நடைபெற்று வருகின்றன.
ஆட்சியில் உள்ள அரசாங்கம் கூட தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளின் கடந்தகால பங்காளிகளாகள் தான். அவ் அரசாங்கம் சர்வதேச விசாரணைக்கு இடமில்லை என்ற நிலைப்பாட்டினை வெளிப்படையாவே சொல்லியுள்ளது. இவ்வாறான அபாயமிக்க நிலையில் ஐக்கிய நாடுகள் சர்வதேச மனித உரிமை ஆணையாளர் இலங்கை வரவுள்ளார். அவருக்கு உண்மை நிலவரங்கள் சென்றடையக்கூடாது என்பதில் ஆட்சியாளர்கள் சிரத்தையாகவுள்ளனர். அரசின் தகவல்களை மாத்திரம் பகிர்வதற்கான உத்திகளை அரசு மேற்கொள்கின்றது.
ஏற்கனவே எமது மண்ணில் பல மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டன. அவை உள்ளிட்ட படுகொலைகள், அரசால் வலிந்து மேற்கொள்ளப்பட்ட ஆட்கடத்தல்கள், என சகல அடக்குமுறைகள், ஒடுக்குமுறைகளையும் வெளிப்படுத்தி அதற்கு நீதிகேட்டு தமிழ்த் தேசமாக நாம் ஒன்றுதிரள்வோம் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஸ் தெரிவித்துள்ளார்.