;
Athirady Tamil News

பெண் கர்ப்பமானதை உறுதி செய்யும் சிறுநீர் கூறு எது? 4,000 ஆண்டுக்கு முன் கண்டுபிடித்தது எப்படி?!! (கட்டுரை)

0

4,000 ஆண்டுகளுக்கு முன் ஒரு பெண் கர்ப்பம் தரித்திருப்பதைக் கண்டறிய என்னென்ன பரிசோதனை செய்தார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?

இன்று, நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்றால் மிகவும் எளிதாக உங்கள் வீட்டிலேயே கர்ப்பம் கண்டறியும் கருவியை வாங்கி அதில் கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் சிறுநீர் கழித்து சோதனை செய்து கண்டறிய முடியும். அக்கருவி, சுமார் ஒரு ஐந்து நிமிடங்களில் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா இல்லையா என உறுதிப்படுத்தும்.

இத்தகைய கர்பப் பரிசோதனை கருவிகள் 1960களிலிருந்து தான் சந்தைப்படுத்தபட்டன.

சிறுநீரில் உள்ள ‘ஹ்யூமன் கோரியோனிக் கோனாடோட்ரோபின்’ (எச்.சி.ஜி – Human chorionic gonadotropin) ஹார்மோனைக் கண்டறிவதன் மூலம் இந்தப் பரிசோதனைகள் செயல்படுகின்றன. இது முக்கியமாக கர்ப்ப காலத்தில் நஞ்சுக்கொடியில் (placenta) உள்ள செல்களால் உற்பத்தி செய்யப்படுகிறது.

கருத்தரித்து 11 நாட்களுக்குப் பிறகு இரத்தப் பரிசோதனைகள் மூலமாகவோ, அல்லது சில நாட்களுக்குப் பிறகு சிறுநீர் பரிசோதனைகள் மூலமாகவோ கர்ப்பத்தைக் கண்டறிய முடியும்.

வீட்டில் பரிசோதனை செய்து கர்ப்பத்தை உறுதிசெய்த பிறகும் மருத்துவர்களை அணுக வேண்டியது கட்டாயம். ஏனெனில் ஐந்து கர்ப்பங்களில் ஒன்று கருச்சிதைவில் முடிகிறது.

ஆனால், பண்டைய காலங்களில் கர்ப்பம் கண்டறியும் பரிசோதனை எப்படி நடந்திருக்கும் என்று யோசித்திருக்கிறீர்களா?

அந்தக் காலத்திலும் சில பரிசோதனைகள் இருந்திருக்கின்றன. வெளிப்படையான அறிகுறிகளாகத் திகழ்ந்தவை மாதவிடாய் தாமதம் மற்றும் அதிக பசி மட்டுமே. ஆனால் கருவுற்று பல மாதங்கள் ஆகும் வரை, இந்த அறிகுறிகள் கர்ப்பத்தினாலா, அல்லது வேறு நோய்களாலா என்பதை அறிந்துகொள்ள வழி இல்லாமல் இருந்தது.

பண்டைய கிரேக்க காலத்திலிருந்து, பெண்கள் தாங்கள் கர்ப்பமாக இருப்பதை தாங்களே அறிந்துகொள்வார்கள் என்று நம்பப்பட்டது. உடலுறவுக்குப் பின் கருப்பையை அவர்கள் நெருக்கமாக உணர்வார்கள் என்று கருதப்பட்டது. ஆனால் இது சாத்தியமற்றது.

ஏனெனில் அப்போது கருத்தரித்தல் அல்லது கரு பொருத்துதல் நடைபெற்றிருக்காது.

கி.மு. 4-ஆம் நூற்றாண்டினை சேர்ந்த ஹிப்போகிராட்ஸ் எழுதிய மருத்துவ நூலான ‘அஃபோரிசம்ஸ்’, படுக்கைக்குச் செல்வதற்கு முன் மீட் (Mead) என்ற ஒயின், தண்ணீர், மற்றும் தேன் கலந்து செய்யப்படும் ஒருவகை பானத்தை எடுக்கப் பரிந்துரைத்தது. ஒரு பெண் கருத்தரித்திருந்தால், இந்த வயிற்றில் வலி மற்றும் சத்தத்தை ஏற்படுத்தும், என்று கருதப்பட்டது.

13-ஆம் நூற்றாண்டின் மருத்துவ நூலான ‘பெண்களின் ரகசியங்கள்’ என்ற நூலை ஆய்வு செய்த ஆக்லாந்து பல்கலைக்கழகத்தின் வரலாற்றுப் பேராசிரியரான கிம் பிலிப்ஸ், அதில் ஒரு பெண்ணின் மார்பகம் கீழ்நோக்கி இருந்தால் அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்று கூறப்பட்டிருப்பதாகக் கூறுகிறார்.

கருவுற்ற நேரத்தில் மாதவிடாய் காலத்தின் இரத்தம் மார்பகங்களுக்கு உயர்கிறது அதனால் இது இப்படியாக நம்பப்பட்டது, என்கிறார் அவர்.

இன்று கருத்தரித்திருப்பதை அறிந்துகொள்ள, சிறுநீர் பரிசோதனை ஒன்றுதான் உறுதியான முடிவைப் பெறும் வழியாக உள்ளது.

கர்ப்ப காலச் சிறுநீர் பரிசோதனைகள் தற்போது மிகவும் நவீனமயமாக தெரியலாம். ஆனால் உண்மையில், சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முன்னரே எகிப்தில் இம்முறை பயன்படுத்தப்பட்டதாகச் சில ஆவணங்கள் காட்டுகின்றன.

இந்த ஆவணம், கருத்தரிக்க விரும்பும் ஒரு பெண்ணோ, கர்ப்பமாக இருக்கும் ஒரு பெண்ணோ கோதுமை மற்றும் பார்லி விதைகளில் பல நாட்களுக்கு சிறுநீர் கழிப்பதை விவரிக்கிறது.

அதன்பிறகு, பார்லி விதைகள் முதலில் முளைத்தால் அது ஆண் குழந்தை, கோதுமை முதலில் முளைத்தால் அது பெண் குழந்தை. இரண்டுமே முளைக்காவிடில் அப்பெண் கர்ப்பமாக இல்லை என்று கருதப்பட்டது.

சிறுநீரை வைத்துப் பல வகையான பரிசோதனைகள் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இடைக்கால வரலாற்றிலில் சில மருத்துவப் பரிசோதனைகள் குறிப்பிடப்படிருக்கின்றன. அதில், ஒரு பெண்ணின் சிறுநீரில் ஊசி வைக்கப்பட்டும். அவள் கர்ப்பமாக இருந்தால் அது சிவப்பு அல்லது கருப்பு நிறத்திற்கு மாறும்.

16-ஆம் நூற்றாண்டில் ஊசி என்ற வார்த்தை தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது. ஆங்கிலத்தில் ஊசி (Needle) என்று குறிப்பிடப்படுவது, ‘Nettle’ என்று தவறுதலாகப் புரிந்து கொள்ளப்பட்டது. இது ஒரு குழப்பத்திற்கு வித்திட்டது.

Nettle என்பது ஒருவகை காட்டுச்செடி. இச்செடியின் சில வகைகள் உடல் மீது படும்போது தோல் சிவந்து வலி உண்டாகும். பின்னர், எரிச்சல் ஏற்படும். இந்த வகை செடியைச் சிறுநீரில் ஒரு இரவு முழுவதும் விட்டுவிட வேண்டும் அப்படி காலையில் அதில் சிவப்பு புள்ளிகள் ஏதேனும் இருந்தால் அவள் கர்ப்பமாக இருக்கிறாள் என்பது பொருள், என்று நம்பப்பட்டது.

இந்தச் சோதனைகள் மருத்துவரின் மேற்பார்வையின் கீழோ அல்லது தனியாகவோ செய்யப்படலாம். 1518-இல் லண்டனில் உள்ள ராயல் கல்லூரி ஆஃப் பிசிஷியன்ஸ் நிறுவப்பட்டதிலிருந்து, பெண் செவிலித்தாய்கள் மருத்துவம் செய்வதைத் தடை செய்துள்ளது.

இதில் யூரோஸ்கோப்பிகள் (சிறுநீரின் மருத்துவ பரிசோதனை) அடங்கும், ஆனால் சில பெண்கள் அதைத் தொடர்ந்தனர்.

17-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், ‘திருமதி. பிலிப்ஸ்’ என்று அழைக்கப்படும் ஒரு பெண் அவர் கர்ப்பத்தைக் கண்டறிய யூரோஸ்கோபியைப் பயன்படுத்தியதற்காக நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இவர் ஒரு மருத்துவச்சியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

1590-களில், லண்டனில் சட்டவிரோதமாக மருத்துவம் பழகி வந்த கேத்தரின் சேர் என்ற பெண் தனக்கென்று தனியே ஒரு முறையும் பின்பற்றினார். “சோப்பு மற்றும் சிவப்பு ரோஸ் வாட்டரைக் கொண்டு துணிகளைத் துவைப்பதன் மூலம் கர்ப்பத்தைக் கண்டறிய முடியும்,” என்று அவர் கூறினார்.
பல கர்ப்ப சோதனைகளில் சிறுநீரில் கவனம் செலுத்துவது, அறிவியல் முன்னேற்றமாகும்.

17-ஆம் நூற்றாண்டு வரையிலான மருத்துவ ஆவணங்களில் சிறுநீர் அடிப்படையிலான சோதனைகளின் மாறுபாடுகள் அடிக்கடி வருகின்றன.

ஒரு பெண்ணின் சிறுநீரைச் சீல் செய்யப்பட்ட ஒரு பாத்திரத்தில் சில நாட்கள் வைத்தால் அதில் ‘சில உயிரினங்கள்’ இருப்பதைக் காணலாம் என்று 1656-ஆம் ஆண்டு வெளியான ‘மருத்துவச் சினையாவார்களுக்கான முழுமையான பயிற்சி’ என்ற புத்தகம் கூறுகிறது.

மற்றொன்று சிறுநீரைக் கொதிக்க வைப்பது. அதில் வெள்ளை கோடுகள் தோன்றினால் பெண் கர்ப்பமாக இருக்கிறாள் என்று குறிப்பிடுகிறது.

பண்டைய எகிப்தியர்கள் விவரிக்கும் விதைச் சோதனைகளிலும் உண்மை இருக்கலாம் எனும் ஆரம்பக்கால வாதங்கள் 1930-களில் செய்யப்பட்டன.

கருவுற்றிருக்கும் பெண்களின் சிறுநீரினால் விதைகள் 70% வரை முளைக்கலாம், என்று ஒரு ஆய்வு கூறுகிறது. ஆனால் குழந்தையின் பாலினத்திற்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை.

கர்ப்பமாக இல்லாத பெண்களின் சிறுநீரைப் பயன்படுத்தினால், அது எந்த விளைவையும் ஏற்படுத்தாது.

கர்ப்பிணிப் பெண்களின் சிறுநீரில் நிச்சயமாக ஒரு சிறப்புக் கூறு இருந்தது.

20-ஆம் நூற்றாண்டில் நடத்தப்பட்ட ஆய்வுகள் பழங்கால சோதனைகள் அனைத்தும் விதைகள் மற்றும் ஊசிகளை பயன்படுத்தும் சோதனைகள், சிறப்பு கலவைகளைப் பயன்படுத்துவது, ரோஸ் வாட்டரில் துணி துவைப்பது ஆகிய முறைகளை விட மிகவும் நம்பகமான முடிவுகளை அளித்தன.

கர்ப்பப் பரிசோதனைகளுக்குச் சிறுநீரைப் பயன்படுத்துவதற்கான மற்றொரு வழி 1920கள் மற்றும் 1930களில் தோன்றியது.

எலிகள் அல்லது முயல்களின் உடலில் முதலில் கர்ப்பிணிப் பெண்களின் சிறுநீர் உட்செலுத்தப்படுகிறது. பின்னர் அவற்றைக் கொன்று அவற்றின் கருப்பைகளில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பது சோதிக்கப்பட்டது.

பின்னர், பெண்களின் சிறுநீர் உயிருள்ள ஆப்பிரிக்கத் தேரைகளுக்குள் செலுத்தப்பட்டது. பெண் கர்ப்பமாக இருந்தால், தவளை முட்டையிடும், என்று நம்பப்பட்டது.

1950களில் இச்சோதனைகளைப் பற்றி மேலும் ஆராய்ச்சிகள் செய்யப்பட்டன. ஆனால் இந்த அணுகுமுறைகள் ஒவ்வொன்றும் அதிக பொருட்செலவைக் கோருபவை, மேலும் முற்றிலும் நம்பகமானவை அல்ல.

இப்போது நாம் பயன்படுத்தும் சோதனைகள் புதிய ஆன்டிபாடி ஆராய்ச்சியின் விளைவாக 1960களில் உருவாக்கப்பட்டன.

கருத்தரித்தல், பெண்களின் வரலாற்றில் எப்போதும் ஒரு பெரும் தாக்கத்தைக் கொண்டிருந்தது.

ஒரு குடும்பத்தின் வாரிசு மற்றும் பரம்பரை பற்றிய விஷயங்களில் பெண்கள் கருத்தரிப்பது. இதையே கர்ப்ப பரிசோதனைகளின் வரலாறும் நமக்குக் கூறுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.