;
Athirady Tamil News

அடிமைத்தனத்தால் பூத்த அடையாளங்கள் !! (கட்டுரை)

0

கடல் தாண்டி ‘கள்ளத் தோணிகள்’ என முத்திரை குத்தப்பட்டு, கள்ளம் கபடமில்லா மனதோடு உறவுகளையும் இழந்து, காடுகளை நாடுகளாக செதுக்கிய சிற்பிகளுக்கு ‘தோட்டக்காட்டான்’ எனும் புனைப்பெயர் குறியீடாக கொள்ளப்பட்டது.

இப்புனை பெயரோடு தமக்கான சரித்திரங்களை படைத்தவர்கள், எண்ணில் அடங்காதவர்கள். இற்றைக்கு 200 வருட கால முடிவில் நின்று திரும்பி பார்த்தால், மனதாலும் உழைப்பாலும் உயர்வடைந்தோரின் தலைகள், ஆங்காங்கே நிமிர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.

கொத்தடிமைகளாக உள் நுழைந்து, கொத்தடிமைகளாகவே வெளியேறப் பிறந்தவர்கள் அல்ல; மாறாக, அடிமைகள் எனும் விதையிலிருந்து ஆல விருட்சமாக உருவான சனக் கூட்டமே, ‘மலையகத்தான்’ என்பதில் கர்வம் கொள்வதே மேலானது.

1818இல் தலைமன்னாரில் தரையிறங்கி, தமக்கான எவ்வித உடைமைகளும் இன்றி, உருக்குலைந்து சிதறி, நடைபோட்ட கூட்டம் மலையகத்தில் தஞ்சமடைந்தது. இவ்வாறு தஞ்சமடைந்த இடங்களைத் தாமே கொத்தடிமைகளாக இருந்து, காடுகளையும் மேடுகளையும் வளமாக்கினர். மலைகளாலும் இறப்பர், கோப்பி,தேயிலை போன்ற பயிர்ச்செய்கைகள் மூலமாகவும் மலையக மண்ணை விளைநிலங்களாக மாற்றிய பெருமை இவர்களுக்கே உண்டு.

இலங்கைக்கு குடி வரவுகளாக வந்த இவர்கள், தமது பழக்கவழக்கங்கள், சம்பிரதாயங்கள், கூத்துக்கள், குலதெய்வ வழிபாடுகள் என்பவற்றையும் தம்மூடனேயே அழைத்து வந்தனர். ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில், அடிமைகளாக இருந்தாலும் தமக்கான தனித்துவத்தை ஆங்காங்கே பதித்துக் கொண்டுதான் வந்தனர். கொத்தடிமைகளாகவே தன் வாழ்வை நகர்த்தாமல், கல்வியாலும் ஜீவனோபாய தொழிலாலும் தம்மை மெருகேற்றிய வண்ணம், கால ஓட்டத்துக்கு ஏற்ப நடை போடத் தொடங்கினர்.

1947ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் இந்திய வம்சாவளி மலையகத்தவர்களின் பிரதிநிதித்துவம் ஏழு ஆக காணப்பட்டது. ஆனால், இதற்கு மாறாக 1948 இற்கு பிற்பட்ட காலங்களில், மலையக மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டு, பிரஜா உரிமை சட்டம் மூலம் ‘நாடற்றவர்களாக’ மாற்றப்பட்டனர். இவ்வாறாக தமக்கான எவ்விதமான உரிமைகளும் இன்றி, அடையாளப்படுத்தப்படாத பிரஜைகளாக அன்றாட வாழ்வை இவர்கள் நகர்த்திச் சென்றனர்.

1964ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ‘ஸ்ரீமா – சாஸ்த்ரி’ ஒப்பந்தத்தின் விளைவாக, 1967ஆம் ஆண்டு கொத்தடிமைகளாக வந்த சிலர், இந்தியாவுக்கே மீள அனுப்பப்பட்டனர். இவ்வாறு அனுப்பப்பட்ட சூழ்நிலைகள் இன்றளவிலும் பிரிவுகளின் துயரங்கள், மக்களின் மனதில் மாறா வடுக்களாகவே பதிந்துள்ளன. தமது சொந்த பந்தங்களை இழந்து, தமக்கான குடியுரிமையும் இல்லாது அரசாங்கத்தின் பிடியிலிருந்து விடுபட முடியாமலும், பல இன்னல்களுக்கு ஒரே சமயத்தில் முகம் கொடுக்க நேரிட்டாலும், தமது ‘மலையகத்தான்’ என்ற அடையாளத்தை விட்டு விலகவே இல்லை.

மலையகப் பெருந்தோட்டப் புறத்தைப் பொறுத்தவரையில், கல்விச் செயற்பாடுகளில் படிப்படியாக முன்னேறி, பாரிய மாற்றங்களை மலையகம் உள்வாங்கத் தொடங்கியது. இதன் ஆரம்ப காலகட்டத்தில் ‘1930ஆம் ஆண்டு), இலங்கையின் கல்வி தேசிய மயமாக்கப்பட்டது.ஆனால், 1960ஆம் ஆண்டே பெருந்தோட்டப் பகுதிகளின் கல்வி தேசிய மயமாக்கலில் இணைக்கப்பட்டது. இவ்வாறான காலம் பிந்திய இந்நடவடிக்கை, மலையக சமூகத்தின் வளர்ச்சிக்கு தடையாகவே இருந்தது. இவ்வாறான தடைகளையும் நம் மக்கள் பெரிதாக பொருட்படுத்தவே இல்லை.

தொழிலின் நிமித்தம் மேலைத்தேயரால் அழைத்துவரப்பட்ட நம் சமூகத்தினரிடம், அவர்களது கட்டளைகளை மொழிபெயர்க்க நம்மில் ஒருவர் அவர்களது மொழியை கற்க வேண்டிய தேவை ஏற்பட்டது. இதற்காக ‘பெரியாங்கங்காணி’ என அழைக்கப்பட்ட தலைமை கங்காணிமார்களுக்கு ஆங்கில மொழியை கற்பிப்பதன் வழியில், மலையக கல்வி வளர்ச்சி அடையத் தொடங்கியது.

அதன் பிற்பட்ட காலங்களில், மலையக மக்கள் மத்தியில் தமது மதத்தைப் பரவச் செய்வதற்காக, ஆங்கில கல்வியை இவர்களுக்குள் உள்நுழைத்தமை மலையக மாணவர்களிடத்தில் ஆரம்பக் கல்வியாகவும் தொடர்ந்தது.

இவ்வாறானதோர் ஆரம்பம், மலையகப் பகுதிகளின் பெற்றோர்களது துன்பம் நிறைந்த அடிமை தொழில், தமது பிள்ளைகளுக்கும் ஏற்படக்கூடாது என்ற எண்ணப்பாடு, மலையக கல்வியை தூண்டி விட ஒரு தீப்பொறியாக அமைந்தது.

ஆங்கில கல்வி மூலமாக தொழிலுக்கான அடிப்படை கல்வியைப் பெற்று, படிப்படியாக கல்வித்துறையில் மலையக மானவர்களே அரசசார் தொழிலுக்கும் சேவை நிலை தொழிலுக்கும் அதிகமாக உள்ளீர்க்கப்பட்டனர். கல்வித்துறையில் ஏற்பட்ட அதிவேக வளர்ச்சியால் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டு, அங்கு மாணவர்கள் வயது அடிப்படையில் வகுப்பினர்களாக பிரிக்கப்பட்டு, நாட்டின் ஏனைய பிரதேச பாடசாலைகளுக்கு நிகராக மலையக பாடசாலைகளும் பயணிக்க ஆரம்பித்தன.

மேலும், மலையகத்தைப் பொறுத்தவரை எழுத்தாளர்கள் உருவாகி, உலகளாவிய ரீதியில் பிரபல்யம் அடைந்தவர்களாகவே வலம் வந்தனர். அன்டனி ஜீவா, கோ. நடேசய்யர், சாரல் நாடன், சீ.வி வேலுப்பிள்ளை, மல்லிகை சி. குமார், சிவனு இலட்சுமனனன், மீனாட்சியம்மாள் போன்ற பல எழுத்தாளர்களை மலையக மண் பிரசவித்தது.

மலையக எழுத்தாளர்கள் மத்தியில் தெளிவத்தை ஜோசப் முக்கிய இடம் பெறுகின்றார்.இவர் இலங்கையின் சிறந்த சிறுகதை மற்றும் நாவலாசிரியராக விளங்குவதுடன் சிறந்த ஆய்வாளராகவும் வலம் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும். இவரைப் போலவே மலையக மண்ணுக்கும் அதன் தனித்துவத்துக்கும் உணர்வுகளுக்கும் உயிர் கொடுத்த எழுத்தாளர்கள் இன்று வரை உருவாகிய வண்ணமே உள்ளனர். அது மாத்திரமன்றி, கல்விமான்களின் உருவாக்கம் அதிகரித்து, தேசிய கல்வியியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகிச் செல்லக் கூடியவர்களின் எண்ணிக்கை மலையகப் பகுதிகளில் அதிகரித்து வந்துள்ளமை நாம் பெருமிதம் கொள்ள வேண்டிய முக்கிய விடயமாகும்.

இவ்வாறாக, கல்வி செயற்பாடுகளில் மாத்திரமன்றி விளையாட்டு, இசை, அரசியல், சினிமா, அழகியல் போன்ற துறைகளிலும் தமக்கான தனித்துவ அடையாளங்களைப் பதித்த வண்ணம் இளைஞர் சமுதாயம் முன்னேறிய வருகின்றமையும் பிறருக்கு எடுத்துக்காட்டாகவும் விளங்குகின்றது.

கொத்தடிமைகளாக வந்த தடத்தை அழித்து, தம்மைத் தாமே புதிய மனிதர்களாக செதுக்கிய வண்ணம், இன்றைய மலையக மைந்தர்கள் வீர நடை போடுகின்றனர்.

பல்வேறுபட்ட துறைகளில் தடம் படித்த ‘மலையகத்தான்’, அரசியல் துறையிலும் தமது செல்வாக்கை ஓரளவு வௌிப்படுத்தி வந்தனர். அதாவது, நம் மலையக அரசியலின் ஆரம்ப கர்த்தாவாக 1947இல் இலங்கை பாராளுமன்றம் சென்று குரல் கொடுத்த சி.வி வேலுப்பிள்ளை முக்கியமானவராவார். இதனோடு இலங்கை வாழ் மலையகத் தமிழர்களின் நலனுக்காக குரல் கொடுத்த கோ. நடேச ஐயர் முதல் மலையகத் தமிழர்களின் துயர் துடைக்க முனைந்தவர்களான அப்துல் அசீஸ் வரையிலும் கடந்த 50 ஆண்டுகளாக அரசியல் களத்தில் தவிர்க்க முடியாத தலைவராக விளங்கிய சௌமியமூர்த்தி தொண்டமான், கே.ராஜலிங்கம், பி. வைத்தியலிங்கம் போன்ற தலைவர்களும் முக்கியமான இடத்தை வகிக்கின்றனர். இவ்வாறாக, இன்றளவிலும் மலையக அரசியலிலும் ஆங்காங்கே சில வெற்றித்தடங்களும் வரலாறுகளும் படைக்கப்பட்ட வண்ணமே உள்ளன.

இந்திய வம்சாவளிகளாக வந்து, ‘மலையகத்தான்’ என அடையாளப்படுத்தப்பட்டு, கொத்தடிமைகள் என்ற போர்வைக்குள்ளே நம் வாழ்வை நகர்த்தாமல், கொத்தடிமைகள் எனக் கொள்ளப்பட்ட அறியாமை என்ற போர்வையை கல்வி,விளையாட்டு, அரசியல், அழகியல், கவியாற்றல், இசை, சினிமா போன்ற பல்வேறு துறைகளில் கொண்டு தகர்த்தெறிந்து, தமக்கான ஒரு தனித்தன்மையை அடையாளப்படுத்தி, நம் சமூகம் மிளிர்ந்த வண்ணமே உள்ளது.

இவற்றோடு மாத்திரம் நம் சாதனைகள் ஒடுங்கிவிடாது. இன, மத, மொழி ரீதியாக புறக்கணிக்கப்பட்ட நாம், இன்றளவில் பெரும்பாலாக பேசப்படுவதற்கு மலையகத்தின் புத்திஜீவிகள் உலகளாவிய ரீதியில் தடம் பதித்து காணப்படுவதும் முக்கிய அம்சமாகும்.

1000 ரூபாய் சம்பளத்துக்காக ஒருபுறம் போராடிக் கொண்டிருந்தாலும் மறுபுறம், நாம் நமக்கான முன்னேற்றப் பாதையை நாமே உருவாக்கி, நடைப்போட எத்தனித்துச் செல்வதே, நமது எதிர்கால இலட்சியமாக என்றுமே கொள்ள வேண்டும். இவ்வாறான முற்போக்கான சிந்தனையோடு பயணிக்க, ‘மலையகத்தான்’ என்ற அடையாளத்துடனேயே களம் காண்போம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.