;
Athirady Tamil News

40 ஆண்டுகளின் பின்னர் காரைநகர் வீதிக்கு விடிவு

0
வடக்கு மாகாணத்திலுள்ள வீதிகள் அனைத்தும் மூன்று ஆண்டுகளுக்குள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும்  அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோரின் முழுமையான ஒத்துழைப்புடன் புனரமைக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
காரைநகர் சுற்றுவட்ட வீதியின் புனரமைப்புப் பணிகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
நான் யாழ். மாவட்டச் செயலாளராகப் பணியாற்றிய காலத்தில் இந்த வீதியைப் புனரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் பல தடவைகள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், அன்றைய சூழலில் அதனை நிறைவேற்ற முடியவில்லை.
சுமார் 40 ஆண்டுகளின் பின்னர் இந்த அரசாங்கத்தால் இவ்வீதிக்கு விடிவு கிடைத்து, மக்களின் நீண்டகாலக் கனவு நனவாகியுள்ளமை பெரும் மகிழ்ச்சியளிக்கின்றது.
காரைநகர் பிரதேசம் சுற்றுலாத்துறைக்குப் பிரபல்யமானதொரு இடமாகும். இதுவரை காலமும் இந்த மோசமான வீதியூடாகவே சுற்றுலாவிகள் கசூரினா கடற்கரைக்கு வந்து சென்றனர். இதனால் சுற்றுலாத்துறைக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இவ்வீதி புனரமைக்கப்படுவதன் ஊடாக எதிர்காலத்தில் சுற்றுலாவிகளின் வருகை பலமடங்கு அதிகரிக்கும்.

அமைச்சர் பிமல் ரத்நாயக்க எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்திலேயே எமது மாவட்டத்துக்குப் பன்முகப்படுத்தப்பட்ட நிதியை ஒதுக்கியவர். நான் மாவட்டச் செயலாளராக இருந்தபோது அந்த நிதியின் ஊடான திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளேன்.

அண்மையில் ஏற்பட்ட ‘டித்வா’ பேரிடரால் எமது மாகாண வீதிக் கட்டமைப்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டது. எனினும், அரசாங்கத்தின் புத்திசாதுரியமான நடவடிக்கையால் வீதிகளைத் தற்காலிகமாகச் சீர்செய்வதற்கு உடனடியாக நிதி விடுவிக்கப்பட்டது.
தற்போது அவற்றை நிரந்தரமாகப் புனரமைப்பதற்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாகாண சபையின் ஊடாக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களும் மத்திய அரசாங்கத்தின் நிதியொதுக்கீட்டின் கீழேயே நடைபெறுகின்றன.
 எனவே, அரசாங்கத்தின் முழுமையான ஒத்துழைப்புடன் இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள் வடக்கின் வீதிப் புனரமைப்புப் பணிகளை முழுமையாக நிறைவு செய்ய முடியும் என நம்புகின்றேன், என்றார்.
You might also like

Leave A Reply

Your email address will not be published.