;
Athirady Tamil News

2036 ஒலிம்பிக்ஸ் விளையாட்டுக்களை நடத்தும் வல்லமை இந்தியாவுக்கு இருக்கிறதா?

0

பெரியதொரு சனத்தொகையைக் கொண்ட இந்தியா உலகில் மிகவும் விரைவாக வளர்ந்துவரும் பொருளாதாரங்களில் ஒன்றாகும். ஆனால், நாடு பூராகவும் பிரபல்யமானதாக விளங்கும் கிரிக்கெட்டை தவிர, போட்டிக்குரிய விளையாட்டுக்களை (Competitive sports) மேம்படுத்தும் விடயத்தில் இந்தியா பெரிதாக வெற்றியடையவில்லை.

எவ்வாறெனினும், அண்மைய வருடங்களில் இந்தியாவின் விளையாட்டு சூழல் தொகுதியும் கலாசாரமும் (Sports ecosystem and culture) குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு உள்ளாகியிருக்கிறது.

2020 டோக்கியோ ஒலிம்பிக்ஸிலும் 2022 பேர்மிங்ஹாம் பொதுநலவாய விளையாட்டுக்களிலும் மிகவும் அண்மையில் சீனாவின் ஹாங்ஷூவில் ஆசிய விளையாட்டுப் போட்டகளிலும் அதன் மெய்வல்லுநர்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முன்னேற்றமான செயற்பாடுகளை வெளிக்காட்டிய நிலையில், உலக விளையாட்டு அரங்கில் பெரியதொரு பாத்திரத்தை வகிக்கும் கனவைக் காணத் தொடங்கியிருக்கிறது.

மும்பையில் ஒக்டோபர் 14ஆம் திகதி சர்வதேச ஒலிம்பிக்ஸ் கமிட்டியின் கூட்டத்தொடரின் தொடக்க வைபவத்தில் உரையாற்றிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி 2036 ஒலிம்பிக்ஸ் போட்டிகளை ஒழுங்கு செய்வதற்கு இந்தியா அதனால் இயன்றவரை சகல முயற்சிகளையும் முன்னெடுக்கும் என்று கூறினார்.

உலகில் சனத்தொகையில் மிகப்பெரிய நாடான இந்தியா ஒலிம்பிக்ஸ் போட்டிகளை நடத்துவதற்கான வாய்ப்பைப் பெறுவதற்கு போட்டியிடும் என்பதை அவர் உறுதிசெய்தார்.

“இது 140 கோடி இந்தியர்களின் நீண்டகாலக் கனவு. உங்களின் ஆதரவுடனும் ஒத்துழைப்புடனும் இந்த கனவை நனவாக்க நாம் விரும்புகிறோம். 2029 இளைஞர் ஒலிம்பிக்ஸ் போட்டிகளையும் கூட நடத்துவதற்கு இந்தியா விரும்புகிறது” என்று சர்வதேச ஒலிம்பிக்ஸ் கமிட்டியின் தலைவர் தோமஸ் பாச்சிடம் மோடி கூறினார்.

“விளையாட்டுக்கள் வெறுமனே பதக்கங்களை வெல்வதற்கானவை அல்ல, அவை இதயங்களை வென்றெடுப்பதற்கான சிறந்த வழியும் கூட” என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஒரு பின்னடைவு

ஆனால், 2010ஆம் ஆண்டில் புதுடில்லியில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டு போட்டிகளின்போது இந்தியா ஒரு மடத்தனமான தவறைச் செய்துவிட்டது. 2010 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான வாய்ப்பு 2003ஆம் ஆண்டில் வழங்கப்பட்டபோது அது ஒலிம்பிக்ஸ் போட்டிகளை நடத்தும் வாய்ப்புக்கு போடடியிடுவதற்கு ஒரு முன்னோடியாக ‘இந்தியாவின் முற்போக்கான அரசியல் முறைமையையும் பொருளாதார வளர்ச்சியையும்’ உலகிற்கு காண்பிப்பதற்கு ஒரு சந்தர்ப்பமாக அமையும் என்று கொண்டாடப்பட்டது.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக விளையாட்டு வீரர்களுக்கான கிராமங்கள் தங்கியிருப்பதற்கு உகந்தவை இல்லாமற் போய்விட்டது. ஸ்ரேடியங்களின் நிர்மாணம் தரங்குறைந்ததாக இருந்தது. சில நாடுகளின் விளையாட்டு அணிகள் அவற்றின் வருகையை தாமதித்த அதேவேளை வேறு சில விளையாட்டு வீரர்கள் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு காரணங்களின் நிமித்தம் போட்டிகளில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்தனர். இந்தியாவுக்கு பெரும் அவமானமாகப் போய்விட்டது.

பொதுநலவாய விளையாட்டுக்களின் தாறுமாறான ஏற்பாடுகள் நிருவாகத்திறன் போன்ற துறைகளில் இந்தியா எந்தளவுக்கு சரவதேச தராதரங்களுக்கு குறைவான நிலையில் இருக்கிறது என்பதை வெளிக்காட்டியதாக மேற்குலக ஊடகங்கள் கூறின.

இந்தியாவினால் இயலாமல் இருக்கின்ற அதேவேளை ஒலிம்பிக்ஸ் போட்டிகளை நடத்திக்காட்டியதன் மூலம் சீனாவினால் எவ்வாறு அதன் வல்லமையை வெளிக்காட்டக் கூடியதாக இருந்தது என்ற கேள்வியை இது கிளப்பியது.

ஆனால் அதிர்ஷ்டவசமாக, 2010 பொதுநலவாய விளையாட்டு அனர்த்தத்துக்கு பிறகு ஒலிம்பிக்ஸ் போட்டிகளை நடத்தும் வாய்ப்புக்கு போட்டியிடுவது தொடர்பில் சகல இந்தியர்களும் நம்பிக்கையற்ற உணர்வுடன் இருக்கவில்லை.

“பொதுநலவாய விளையாட்டுக்கள் ஒலிம்பிக்ஸ் போட்டிகளை நடத்தும் வாய்ப்புக்கு இந்தியா போட்டியிடுவதற்கு ஒரு தடையாக அமைந்துவிடக்கூடாது” என்று ‘ஒரு கோடி பேரின் கனவுகள்; இந்தியாவும் ஒலிம்பிக்ஸ் கதையும்’ (Dreams of A Billion; India and Olympics Story) என்ற நூலை எழுதிய போறையா மஜும்தார் கூறினார்.

1951 புதுடில்லியில் நடைபெற்ற ஏசியாட் (Asiad) இந்தியாவில் விளையாட்டு உட்கட்டமைப்பு ஒன்றை உருவாக்கிய அதேவேளை 1982 ஏசியாட் உலகின் மிகவும் பகட்டான ஸ்ரேடியங்களில் ஒன்றுடன் கூடிய ‘நவீன நகராக’ புதுடில்லியை மாற்றியது என்று அவர் கூறினார். றியோ ஒலிம்பிக்ஸ் மூலமாக பிறேசில் ஒரு விளையாட்டு வல்லராக முடிந்தது என்றால் அதே போன்று இந்தியாவினால் ஏன் சாதிக்கமுடியாது என்று மஷும்தார் கேள்வி எழுப்புகிறார்.

பொதுநலவாய விளையாட்டுக்கள் நடந்து முடிந்து பத்து வருடங்கள் கடந்துவிட்டன. இந்தியாவின் 3.5 ரில்லியன் அமெரிக்க டொலர்கள் பொருளாதாரம் பிரிட்டனின் பொருளாதாரத்தையும் முந்திச்சென்று உலகின் ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதாரமாக வந்துவிட்டது.

2030ஆம் ஆண்டளவில் உலகின் மூன்று உச்ச பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா வள்ந்துவிடும் என்று பல முன்னணி நிதித்துறை நிறுவனங்கள் எதிர்வுகூறுகின்றன. இந்தியாவின் துரித பொருளாதார வளர்ச்சி 2036 ஒலிம்பிக்ஸ் விளையாட்டுக்களை நடத்துவது உட்பட அதன் பல உலகளாவிய கனவுகளை தொடர்ந்து ஊக்கப்படுத்துகிறது.

ஒலிம்பிக்ஸ் இந்தியாவின் பொருளாதார வல்லமையை நிரூபிக்கும். அதனால் இந்தியாவின் மென்வலுவை (Soft power) உலகிற்கு வெளிக்காட்டக்கூடியதாக இருக்கும்; உலக அரசியலில் இந்தியாவின் தகுதியை உயர்த்தும்; உலகத்தரம் வாய்ந்த உட்கட்டமைப்புடன் கூடிய விளையாட்டுக் கலாசாரத்தை மேம்படுத்தும்; முதலீட்டையும் சுற்றுலாத் துறையையும் ஊக்கப்படுத்தும்.

எல்லாவற்றுக்கும் மேலாக 2008ஆம் ஆண்டில் பெய்ஜிங்கில் ஒலிம்பிக்ஸ் போட்டிகளை நடத்தியதன் மூலம் இவற்றை சீனா சாதித்துக்காட்டியது.

ஆனால், 2036 ஒலிம்பிக்ஸை நடத்துவதற்கு இந்தியா தயாரா? ஒழுங்குவிதிகளின் பிரகாரம் போட்டிகளை நடத்துவதற்கு இந்திய அரசாங்கத்தினால் தெரிவு செய்யப்படக்கூடிய நகரம் இந்திய ஒலிம்பிக்ஸ் சங்கத்தின் ஊடாக முறைப்படியான விருப்பக்கடிதத்தை அனுப்பும்வரை சர்வதேச ஒலிம்பிக்ஸ் கமிட்டி மதிப்பீட்டு செயன்முறையை தொடங்கப்போவதில்லை.

2025ஆம் ஆண்டு வரையில் 2036 ஒலிம்பிக்ஸை நடத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்படமாட்டாது என்று தெரியவருகிறது.

2036 ஒலிம்பிக்ஸை நடத்துவதற்கான வாய்ப்பை பெறுவதற்கு போலந்து, இந்தோனேசியா, மெக்சிக்கோ மற்றும் வேறு பல நாடுகளும் விருப்பத்தை வெளிக்காட்டியிருக்கின்றன.

அஹமதாபாத் நகரம்

இந்தியாவின் எந்த நகரம் ஒலிம்பிக்ஸ் போட்டிகளை நடத்துவதற்கான வாய்ப்புக்காக போட்டியிடும் என்பது தொடர்பில் இதுவரையில் உத்தியோகபூர்வமான அறிவிப்பு எதுவும் வரவில்லை. ஆனால், பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தின் மிகப்பெரிய நகரமான அஹமதாபாத் நாட்டின் உச்சத் தெரிவாக இருக்கக்கூடிய சாத்தியம் உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

ஒலிம்பிக்ஸை நடத்துவதற்கான பேரார்வமிக்க திட்டங்களை அந்த நகரம் வரைந்திருப்பதாகவும் சில நிர்மாணங்களுக்கான அத்திபார வேலைகள் ஏற்கெனவே இடம்பெற்றி ருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், ஒலிம்பிக்ஸை நடத்தும் வாய்ப்புக்கு போடடியிடும் நகரின் வசதிகள் தீவிரமான பரிசீலனைக்கு உட்படுத்தப்படும் என்று ஆறு ஒலிம்பிக்ஸ் போட்டிகளின்போது செய்தி திரட்டும் பணியில் ஈடுபட்ட அனுபவத்தைக் கொண்ட இந்திய விளையாட்டுத்துறை செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்.

இதுவரையில் ஒலிம்பிக்ஸை நடத்திய நகரங்கள் பெரும்பாலும் தலைநகரங்களாகவே இருந்திருக்கின்றன என்பதை தரவுகள் காட்டுகின்றன. இந்தியாவின் தெரிவாக அஹமதாபாத் வருமேயானால் அது ஒரு விதிவிலக்காக அமையும். அந்த நகரம் இந்தியாவின் தலைநரமும் அல்ல, சனத்தொகை, பரப்பளவு, நிகர உள்நாட்டு உற்பத்தி மற்றும் துப்புரவு ஆகிய காரணிகளைப் பொறுத்தவரையில் தரவரிசையில் முதல் ஐந்து இடங்களில் நகரங்களில் ஒன்றாகவும் அது இல்லை. அதனால் இந்தியாவின் ஒலிம்பிக் நகராக வருவதற்கான அஹமதாபாத்தின் ஆற்றல் குறித்து இந்திய ஊடஙங்கள் சந்தேகம் கிளப்புகின்றன.

“எமது நகரங்கள் குப்பை மேடுகளினால் சூழப்பட்டிருக்கின்றன. மிகையான சனத்தொகையைக் கொண்டவையாகவும் அவை இருக்கின்றன. கட்டட நிர்மாணச் சிதைவுகள் நிலத்தில் பரவிக்கிடக்கின்றன. திறமையற்ற கழிவகற்றல் முகாமைத்துவம் காரணமாக வளி மாசடைந்து மூச்சுத்திணறலை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தும் இருக்கிறது” என்று ஊடகம் ஒன்று கூறியது.

அஹமதாபாத்தினால் 13 வருடங்களில் ஒலிம்பிக்ஸுக்கு தயாராக முடியுமா என்று மக்கள் ஆச்சரியத்துடன் கேட்கிறார்கள். உண்மையில் அதற்காக அந்த நகரம் நீண்டதூரம் செல்லவேண்டியிருக்கிறது. நான்கு ஆயிரத்துக்கும் அதிகமான ஹோட்டல் அறைகளே இருக்கும் நிலையில் ஒலிம்பிக்ஸுக்காக வருகை தரக்கூடிய பெரும் எண்ணிக்கையிலான விருந்தினர்களை தங்கவைப்பதற்கு போதுமான ஆற்றல் அஹமதாபாத்திடம் இல்லை. அதன் ஹோட்டல் மற்றும் தங்குமிட வசதிகள் குறைந்தபட்சம் ஐந்து மடங்காக அதிகரிக்கப்படவேண்டியது அவசியமாகும்.

ஒலிம்பிக்ஸுக்கு பிறகு இந்த ஹோட்டல்களுக்கு போதுமான வாடிக்கையாளர்கள் வருவார்களா என்பது இன்னொரு பிரச்சினை. இந்த கேள்வி ஒலிம்பிக்ஸை நடத்துவதற்கு தெரிவு செய்யப்படக்கூடிய நகரங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை விளையாட்டுகள் முடிந்த பிறகு எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து இந்தியா மதிப்பீடு செய்யவேண்டும் என்று பல நிபுணர்கள் வலியுறுத்தும் நிலைக்கு வழிவகுத்திருக்கிறது.

மேலும், அஹமதாபாத்தின் விளையாட்டு கலாசாரம் போதுமானளவு வலிமை வாய்ந்தது அல்ல என்று நிபுணர்கள் விசனம் தெரிவித்திருக்கிறார்கள்.”

ஒரு இலட்சத்து 30 ஆயிரம் பார்வையாளர் ஆசனங்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய கிரிக்கட் ஸ்ரேடியம் அந்த நகரில் இருந்தாலும், உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் தொடக்க வைபவத்தின்போது கூட ஆசனங்கள் வெறுமையாகவே காணப்பட்டன. ஏனைய பெரும்பாலான போட்டிகளின்போது பத்து சதவீத ஆசனங்களே பார்வையாளர்களினால் நிரம்பியிருந்தன.

ஆனால், இரு நகரங்கள் அல்லது இரு பிராந்தியங்கள் ஒலிம்பிக்ஸ் போட்டிகளை ஒரே நேரத்தில் நடத்துவதற்கு சர்வதேச ஒலிம்பிக்ஸ் கமிட்டியின் புதிய விதிகள் அனுமதித்திருப்பது நல்ல ஒரு செய்தி. இது ஒலிம்பிக்ஸுக்கான நகரை தீர்மானிப்பதில் இந்தியாவுக்கு கூடுதல் தெரிவுகளை கொடுக்கும் என்பது மாத்திரமல்ல, தனியொரு நகர் மீதான நெருக்குதலையும் குறைக்கும். இந்தியா இரு நகரங்களை (அஹமதாபாத்தையும் குஜராத் மாநிலத்தின் தலைநகர் காந்திநகரையும்) தெரிவுசெய்வது குறித்து பரிசீலிக்கும் என்று ஊகங்கள் அடிபடுகிறது.

கடந்தகால வெற்றிகள்

ஒலிம்பிக்ஸில் பங்கேற்பதில் இந்தியா நீண்ட ஒரு வரலாற்றை கொண்டிருக்கிறது. ஒலிம்பிக் பதக்கம் ஒன்றை வென்ற முதல் ஆசிய நாடு இந்தியாவே. துரதிர்ஷ்டவசமாக பல்வேறு காரணங்களின் விளைவாக இந்தியா ஒரு விளையாட்டு வல்லரசாக வளரவில்லை. மிகையான வலிமை கொண்ட கிரிக்கெட் கலாசாரம் ஒலிம்பிக்ஸ் கலாசாரத்தை அமுக்கிவிட்டது என்று பல இந்தியர்கள் நம்புகிறார்கள்.

இதுவரையில் இந்தியா ஒலிம்பிக்ஸில் ஆக 35 பதக்கங்களையே வென்றது. பத்து தங்கப்பதக்கங்களில் எட்டு பதக்கங்கள் ஹொக்கி விளையாட்டுக்காகவே கிடைத்தன.

1972 மூனிச் ஒலிம்பிக்ஸ் போட்டிகளின்போது அன்றைய சர்வதேச ஒலிம்பிக்ஸ் கமிட்டியின் தலைவர் தனக்கு அருகில் நின்ற இந்தியர்களிடம் இந்தியாவின் கோடிக்கணக்கான மக்களினால் ஏன் பதக்கங்களை வென்றெடுக்க முடியவில்லை என்று கேட்டாராம். அதற்கு அவருக்கு கிடைத்த பதில் “விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதே அன்றி பதக்கம் ஒன்றை வெல்வது அல்ல மிகவும் முக்கியம் என்று இந்தியர்கள் நம்புகிறார்கள்”

அந்த நிகழ்வுகளுக்கு பிறகு ஐம்பது வருடங்களுக்கும் அதிகமான காலம் கடந்துவிட்ட நிலையில் இந்தியாவின் சனத்தொகை இரண்டு மடங்கிற்கும் அதிகமாக அதிகரித்திருக்கின்ற போதிலும், சர்வதேச விளையாட்டு அரங்கில் இந்தியாவின் செயற்பாடுகள் நம்பிக்கை தருவதாக இல்லை. 2008ஆம் ஆண்டில் குறிபார்த்துச் சுடும் போட்டியில் அபினவ் பிந்திரா பெற்ற தங்கப்பதக்கமே இந்தியாவின் 108 வருடகால ஒலிம்பிக்ஸ் வரலாற்றில் முதன் முதலாக கிடைத்த தனிநபருக்கான தங்கப்பதக்கமாகும்.

ஆனால் ஒலிம்பிக்ஸில் வெற்றி பெறுவதற்கான நம்பிக்கை ஒளிக்கீற்று ஒரு நிலைபேறான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

“ஒரு இந்திய ஒலிம்பிக்ஸ் நாயகனாக ஒரு சில நாட்களில் பிந்திரா மறக்கப்பட்டுவிடுவார். ஒலிம்பிக்ஸில் கிரிக்கெட் இல்லை என்பதே அதற்கு காரணம். இந்திய ஊடகங்கள் ஒலிம்பிக்ஸில் பெருமளவு கவனத்தைச் செலுத்தப்போவதில்லை. அவர்களுடைய இடப்பரப்பு கிரிக்கெட்டுக்காக ஒதுக்கப்படும். இந்திய மக்களை கவர்ந்த ஒரே விளையாட்டு கிரிக்கெட் மாத்திரமே” என்று இந்திய மாணவர் ஒருவர் இந்த கட்டுரையாளரிடம் கூறினார்.

அந்த மாணவர் உண்மையைத்தான் கூறினார். இந்தியாவில் விளையாட்டுக்கு ஒத்தசொல்லாக கிரிக்கெட் விளங்குகிறது. கிரிக்கெட் இங்கு ஒரு வகையான மதமாக மாத்திரமல்ல வர்த்தகம்,பொழுதுபோக்கு மற்றும் அரசியலுடன் முக்கியமான ஒரு பிணைப்பாகவும் இருக்கிறது.

இந்திய ஊடகங்களில் கிரிக்கெட் வீரர்களுக்கு கொடுக்கப்படும் பிரமாண்டமான முக்கியத்துவம் கிரிக்கெட் விளையாடினால் வசதியான வாழ்க்கை கிடைக்கும் என்று மிகவும் இளம் வயதில் இருந்தே இந்தியர்களுக்கு போதித்துவிட்டது. அதன் காரணத்தினாலேயே இந்தியாவில் சனசந்தடி மிகுந்த நகரங்களில் என்றாலென்ன பின்தங்கிய நாட்டுப்புறங்களில் என்றாலென்ன கிரிக்கெட் நிலையான முதன்மையான ஒரு விளையாட்டாகிவிட்டது.

இந்தியாவில் முக்கியமான கிரிக்கெட் நிகழ்வுகளில் பொலிவூட் நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொள்வதால் கிரிக்கெட் ஒரு பிரதான பொழுதுபோக்காகவும் மாறிவிட்டது. இது ஏனைய விளையாட்டுக்களினால் உருவாக்க இயலாத வலிமைமிக்க “கிரிக்கெட் பொருளாதாரத்தை” தோற்றுவித்திருக்கிறது.

இந்தியாவில் கிரிக்கெட் மீதான ஒரு வழிபாட்டு தன்மையான பற்று ஏனைய எந்தவொரு விளையாட்டையும் குள்ளமானதாக்கிவிட்டது.

“இந்தியாவில் கிரிக்கெட் ஏனைய விளையாட்டுக்களை பெரும்பாலும் கொன்றுவிட்டது. இந்தியாவுக்கு எட்டு ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை பெற்றுக்கொடுத்த ஹொக்கி மீது கூட மக்களின் கவனம் செல்வதில்லை. நாட்டை விட்டு கிரிக்கெட்டை துரத்தும்வரை, வேறு எந்த விளையாட்டும் ஊக்கப்படுத்தப்படப் போவதில்லை” என்று ஒரு இந்திய விளையாட்டு ரசிகர் தனது மனவருத்தத்தை வெளிப்படுத்தி தேசிய செய்திப் பத்திரிகை ஒன்றில் எழுதினார்.

இதுவே உண்மையில் கடுப்பான யதார்த்தமாகும். ஒவ்வொரு நான்கு வருடங்களிலும் ஒலிம்பிக்ஸில் இந்திய விளையாட்டு வீரர்களின் செயற்பாடுகள் தொடர்பில் மகிழ்ச்சியும் கசப்பான உணர்வு வெளிப்பாடுகளையும் காணக்கூடியதாக இருக்கும். ஆனால் மூன்று நிமிட உணர்ச்சி வேகத்துக்கு அல்லது சீற்றத்துக்கு பிறகு எல்லாமே வழமைக்கு திரும்பிவிடும்.

“இந்தியா ஒரு விளையாட்டு வல்லரசாக வர விரும்பினால் ஒலிம்பிக்ஸ் இயக்கத்துக்கு அது முன்னுரிமை கொடுக்கவேண்டியது அவசியமாகும்” என்று 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்ஸில் குறிபார்த்துச் சுடும் போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்ற பிறகு அபினவ் பிந்திரா குறிப்பிட்டார்.

2028 லொஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக்ஸில் கிரிக்கெட் உத்தியோகபூர்வமாக சேர்த்துக்கொள்ளப்பட்டிருப்பதாக சர்வதேச ஒலிம்பிக்ஸ் கமிட்டி அண்மையில் செய்த அறிவிப்பு இந்தியாவைப் பொறுத்தவரை நல்ல செய்தியாகும்.

2036 ஒலிம்பிக்ஸை நடத்துவதற்கான உரிமை இந்தியாவுக்கு வழங்கப்படுமேயானால் இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகளும் இடம்பெறும். தங்களது அன்புக்குரிய கிரிக்கெட் அணி தங்கள் மத்தியில் ஒலிம்பிக்ஸ் பதக்கத்தை வென்றெடுப்பதை கண்டு மகிழ்வதற்கான வாய்ப்பொன்று இந்திய ரசிகர்களுக்கு கிடைக்கவும் கூடும்.

மீட்பதற்கு மோடி

விஞ்ஞானத்துக்கும் கல்விக்கும் ஜவஹர்லால் நேரு கொடுத்த முக்கியத்துவத்தின் செல்வாக்கு காரணமாக இருக்கலாம் இந்திய அரசாங்கங்கள் விளையாட்டுகளுக்கு ஒருபோதும் முனானுரிமையைக் கொடுத்ததில்லை. ஆனால் ஒரு பெரிய நாடாக இந்தியாவின் பிரதிமையை மேம்படுத்துவதில் விளையாட்டுக்களின் பாத்திரத்துக்கு பெரும் முக்கியத்துவத்தை பிரதமர் மோடி கொடுக்கிறார். தேசிய ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்கான சக்திவாய்ந்த ஒரு வழிவகையாக விளையாட்டுக்கள் அமைய முடியும் என்று நம்பும் மோடி ஒலிம்பிக்ஸ் தந்தரோபாயத்தின் ஊடாக விளையாட்டுகளில் பலவீனமான தேசம் என்ற நிலையில் இருந்து விளையாட்டுகளில் வலிமை வாய்ந்த நாடாக இந்தியாவின் முகத்தை மாற்றுவதற்கு திடசங்கற்பம் பூண்டிருக்கிறார்.

2016 றியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு போட்டிகள் முடிவடைந்து சில நாட்களில் அவர் ஒலிம்பிக்ஸுடன் தொடர்புடைய தந்திரோபாய செயலணி ஒன்றை உருவாக்குவது குறித்து அறிவிப்பை வெளியிட்டார்.

2020, 2024, 2028 ஒலிம்பிக்ஸிலும் ஏசியாட் மற்றும் பொதுநலவாய விளையாட்டு போட்டிகளிலும் இந்திய மெய்வல்லுநர்கள் திறமையுடன் பங்கேற்பதற்கு உதவ நடவடிக்கைத் திட்டம் ஒன்றை வரைவதே அந்த செயலணியின் பணியாகும்.

மோடியின் வழிகாட்டலின் கீழ் அரசாங்க சிந்தனைக்குழாம் ‘NIIT Aayog’ வெற்றிபெறுவதற்கு அதிக வாய்ப்பைக்கொண்ட பத்து விளையாட்டுகளுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் இந்தியாவின் ஒலிம்பிக்ஸ் பதக்க எண்ணிக்கையை அதிகரிக்க உதவுவதற்கு பத்து அம்ச திட்டம் ஒன்றை வெளியிட்டது. விளையாட்டு வீரர்கள் தெரிவு மற்றும் மதிப்பீடு, பயிற்றுவிப்பாளர்கள் அறிமுகம் மற்றும் விளையாட்டு முகாமைத்துவ முறைமை உருவாக்கம் ஆகியவற்றுக்கான விசேட வழிமுறைகளை அந்த நடவடிக்கைத் திட்டம் முன்வைத்தது.

பரந்தளவில் கிராமிய மக்களை விளையாட்டுக்ளின் பால் கவருவதற்கு 2018ஆம் ஆண்டில் ‘Khelo India’ என்று அழைக்கப்பட்ட தேசிய விளையாட்டு அபிவிருத்தி செயற்திட்டம் ஒன்றை அரசாங்கம் தொடங்கியது. கிராமங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு அவசியமான விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதன் மூலமாக இந்தியாவின் சமூக அடிமட்ட விளையாட்டு கலாசாரத்தை மேம்படுத்துவதே அந்த செயற்திட்டத்தின் நோக்கம்.

தரமுயர்ந்த பயிற்சியை விளையாட்டு வீரர்கள் பெறுவதற்கும் அவசியமான விளையாட்டு மற்றும் தொழில்நுட்ப வசதிகளை அவர்கள் அனுபவிப்பதற்கும் வசதியாக முழு அளவில் மானிய அடிப்படையில் ‘ஒலிம்பிக்ஸ் மேடை திட்டத்தை’ (Target Olympic Podium Scheme) அரசாங்கம் ஆரம்பித்தது.

மோடி அரசாங்கத்தின் விரிவான விளையாட்டு தந்திரோபாயத்தின் கீழ் இந்தியாவின் விளையாட்டு சூழல்தொகுதியும் விளையாட்டுகள் தொடர்பிலான சாதாரண மக்களின் எண்ணமும் மாற்றம் கண்டன. பயிற்சிகளைப் பெற்று லிளையாட்டுக்களில் பங்கேற்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் இந்தியாவின் விளையாட்டு வல்லமையும் மேலழுகின்றது. டோக்கியோ ஒலிம்பிக்ஸில் இந்தியா ஏழு பதக்கங்களை வென்றது.

ஒலிம்பிக்ஸ் வரலாற்றில் அதுவே இந்தியாவின் சிறப்பான திறமை வெளிக்காட்டலாக அமைந்தது. ஹாங்ஷூவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் நூறுக்கும் அதிகமான பதக்கங்களை இந்தியா வென்றது. அவ்வாறு இந்தியா பதக்கங்களை பெற்றது ஆசிய விளையாட்டுகளின் வரலாற்றில் முதற்தடவையாகும். சீனா, ஜப்பான் மற்றும் தென்கொரியாவுக்கு அடுத்ததாக நான்காவது இடத்துக்கு இந்தியா வந்தது.

இந்தியாவின் வளர்ந்துவரும் விளையாட்டு நட்சத்திரங்கள் பெரிதாக எந்த விளையாட்டு வசதிகளும் இல்லாத தொலைதூர கிராமங்களையும் சிறிய நகரங்களையும் சேர்ந்தவர்களாக இருப்பது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். இத்தகையவர்களில் மிகவும் முக்கியமானவர் நிராஜ் ஷோப்ரா.டோக்கியோ ஒலிம்பிக்ஸில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் அவர் தங்கப்பதக்கத்தை வென்றார்.

அபினவ் பிந்திராவின் தனிநபருக்கான முதலாவது ஒலிம்பிக்ஸ் தக்கப்பதக்கம் இந்தியாவில் குறிபார்த்துச் சுடுதலில் வளர்ச்சியை ஊக்குவித்தது. ஆனால் அந்த வெற்றிக்கதை சாதாரண இந்தியர்கள் மத்தியில் ஒழுங்காக பின்பற்றப்படவிலை. ஏனென்றால் அவர்களுக்கு பிந்திராவின் தந்தையாரைப் போன்று தனவந்த தந்தைமார் இல்லை. அவர் குறிபார்த்துச் சுடும் பயிற்சிக்கான தனியார் மைதானம் ஒன்றை அமைத்ததுடன் சர்வதேச போட்டிகளில் பங்கேற்பதற்காக பணத்தையும் கொடுத்தார்.

மறுபுறத்தில் நிராஜ் நாட்டுப்புறத்தைச் சேர்ந்தவர்.25 வயதானவராக இருந்தாலும் அவர் ஒலிம்பிக்ஸ் விளையாட்டுக்கள், உலக சாம்பியன் போட்டிகள், உலக இளைஞர் விளையாட்டு போட்டிகள், பொதுநலவாய விளையாட்டுக்கள் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டிகள் என்று பல்வேறு முக்கியமான சர்வதேச நிகழ்வகளில் தங்கப்பதக்கங்களை வென்றார்.

ஷோப்ராவின் சாதனை பல இளைஞர்கள் விளையாட்டுக்களில் பங்கேற்பதற்கு ஊக்கத்தை கொடுத்தது மாத்திரமல்ல அவர்களுக்கு முன்னுதாரணமாகவும் அமைந்தது.

போட்டியில் பங்கேற்றபோது தனக்கு கடுமையான சந்தேகம் இருந்ததாக பிந்திரா நேர்காணல் ஒன்றில் கூறினார். ஆனால் இப்போது இந்திய விளையாட்டு வீரர்கள் கூடுதலான நம்பிக்கையுடன் களத்தில் இறங்க முனைப்பு காட்டுகிறார்கள் என்று அவர் கூறுகிறார். “இது முற்றிலும் வேறுபட்ட மனநிலை. இந்திய விளையாட்டுக்கள் தொடர்ந்து எழுச்சிபெறும். விளையாட்டுக்களில் இந்தியாவின் முதலீடு அதிகரிக்கும்.மேலும் மேலும் இளைஞர்கள் விளையாட்டுககளில் பங்கேற்பார்கள்” என்று பிந்திரா கூறினார்.

ஒலிம்பிக்ஸ் போடடிகளை நடத்துவதற்கு வாய்ப்பை இந்தியா பெறும் என்பதில் சந்தேகமில்லை. எப்போது என்பது மாத்திரமே கேள்வி. பிரதமர் மோடியிடம் அதற்கான பதில் இருக்கும் என்று நம்பலாம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.