;
Athirady Tamil News

காலத்தே அரசியல் செய்தல்

0

லக்ஸ்மன்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் செப்ரம்பர் மாத அமர்வு கடந்த பல அரசாங்கங்களினதும் ஜனாதிபதிகளதும் நகர்வுகளுக்கு பின்னர் இம்முறை சற்று எதிர்பார்ப்புடையதாகவேஇருக்கிறது.

அதானது, தற்போது இலங்கையில் உருவாகியிருக்கின்ற இடது சாரி மரபில் வந்த மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினை அணுகும் வகையில் முற்று முழுதான மாற்றமுடையதாகவே இருக்கும் என்றே அனைவரும் நம்புகின்றனர்.

நாட்டில் ஊழலை ஒழித்து நீதியை நிலைநாட்டுவோம் என்று உறுதிமொழி கூறி மக்கள் ஆதரவு பெற்று ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசு கடந்தகால அரசுகள் போலவே உள்ளகப் பொறிமுறை மூலமே நடவடிக்கை தொடரும் என்று ஏற்கெனவே அறிவித்திருந்தாலும் இம்முறை கொண்டுவரப்படும் தீர்மானம் மூலமாக அதில் மாற்றம் ஏற்படுத்தப் படக்கூடும் என்றும் நம்பிக்கை காணப்படுகிறது.

இலங்கையைக் கூண்டிலேற்றி பார்த்து விடவேண்டும் என்று துடிக்கும் ஈழத் தமிழர்கள் தமது தொடர்ச்சியான செயற்பாடுகளை நாட்டிலும் புலத்திலும் மேற்கொண்டு வருகின்றனர்.

அதிலொன்றுதான், தமிழினப் படுகொலைக்குச் சர்வதேச நீதி கோரி தாயகச் செயலணி அமைப்பின் ஏற்பாட்டில், ‘நீதியின் ஓலம்’ எனும் தொனிப்பொருளில் கையெழுத்துப் போராட்டம் கடந்த 23ஆம் திகதி ஆரம்பமாகி 28ஆம் திகதி செம்மணியில் நிறைவு பெற்ற போராட்டமாகும். ஐந்து நாள் கையெழுத்துப் போராட்டமாக வடக்கு கிழக்கின் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று முடிந்திருக்கிறது.

அதே நேரத்தில், சர்வதேச வலிந்து காணாமல் ஆகப்பட்டவர்கள் தினத்தில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் சங்கத்தின் ஏற்பாட்டில் போராட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன.

இப்போராட்டமானது. உள்நாட்டு பொறிமுறையை நிராகரிக்கிறோம், தமிழின அழிப்புக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்படுதலுக்கும், போர்க்குற்றங்கள் மற்றும் மனிதப் புதைகுழிகள் குறித்து சர்வதேச சுயாதீன விசாரணையைக் கோரி நிற்கிறோம் என நடத்தப்பட்டிருக்கிறது.

அத்துடன், சிவில் தரப்புகள், அரசியல் தரப்புகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்குக் கடிதங்களை அனுப்பி வருகின்றனர். அக் கடிதங்களும் இலங்கையில் இன அழிப்பு நடவடிக்கைகள், வலிந்து காணமலாக்கப்பட்ட சம்பவங்கள், யுத்த நெறிமுறைகளுக்கு முரணாக நடைபெற்ற போர்க் குற்றங்கள் பற்றி சர்வதேச சமூகத்தின் முழுமையான பங்குபற்றுதலுடன் இன்றுள்ள அரசானது தகுந்த விசாரணைகளை நடத்திப் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உரியத் தீர்வுகளை வழங்க முன்வரவேண்டும் என்று கோருவதாகவே அமைந்திருக்கின்றன.

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களை தேடியும், அவர்களுக்கான நீதி கோரியதுமான போராட்டம் 3,000 நாட்களைக் கடந்து இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த தொடர் முயற்சிக்குத் தீர்வு கிடைக்கவேண்டும் என்று எல்லோருமே சிந்திக்க வேண்டும்.

இந்தநிலையில்தான், இலங்கைத் தமிழரசுக் கட்சி தன்னுடைய கடிதத்தை மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பியிருக்கிறது. இதில் என்ன விசேசமென்றால், தமிழர்களின் இன அழிப்பை முன்னிறுத்தி அக் கடிதத்தை எழுதியிருப்பதுதான்.

அதற்கான காரணம் என்னவென்று பலரும் பலவகைகளிலும் தற்போது எழுதி வருகின்றனர். எது எவ்வாறானாலும், வடக்கு கிழக்கின் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான அரசியல் கட்சி என்ற வகையில் தமிழரசுக் கட்சி தம் கடமையை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தைச் சமாளித்திருக்கிறது.

ஏனைய கட்சிகள், சிவில் சமூகத்தினர் இலங்கைத் தமிழரசுக்கட்சியை இணைத்து ஒருமித்த கடிதத்தை அனுப்பிவைக்க முயன்றபோதும் ஏற்றுக்கொள்ளாத நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் எல்லோரும் பொதுமைப்படுத்திய விடயத்தை முன்னிறுத்தி கடிதத்தை வரைந்திருக்கின்றனர்.

இன அழிப்புக்கான அரச பொறுப்பு குறித்து சர்வதேச நீதிமன்றில் விசாரிக்கப்பட வேண்டும் என்ற விடயத்தை முதலாவதாக முன்வைத்துள்ள தமிழரசுக் கட்சி செம்மணியை மையப்படுத்தியதாக அதற்கான ஆதாரங்களை ஒஸ்லாப் பொறிமுறையின் அடிப்படையில் திரட்ட வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறது.

ஈழத்தமிழர்களின் அரசியல் பிரச்சினையானது ஆங்கிலேயர்களின் காலனித்துவ நடவடிக்கை காரணமாக உருவானது. அதற்கான முழுப் பொறுப்பினையும் பிரித்தானியா ஏற்றுக் கொண்டாகவேண்டும் என்ற கோசம் இருக்கின்ற நிலையில், தமிழர்களின் இறைமை குறித்து 1976ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணி மேற்கொண்ட நடவடிக்கை சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.

ஆனால் வட்டுக்கோட்டைத் தீர்மானம் குறிப்பிடப்படவில்லை. ஆயர்கள் – சைவ மதத் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொது நிலையினர் ஆகியோர் இணைந்து அனுப்பிய கடிதம், 2002ஆம் ஆண்டுக்கு முற்பட்ட குற்றங்களும் விசாரிக்கப்பட வேண்டும் எனக் கூறியிருக்கிறது.

தமிழ்த் தேசியப் பேரவை இன அழிப்பு விசாரணையை சர்வதேசமே நடத்தவேண்டும் என்று கோரியிருந்தது. ஆனால், அக் கடிதத்துக்கு அதற்கு ஆணையாளர் உள்ளக விசாரணைக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின், 2015ஆம் ஆண்டு தீர்மானத்தின் மூலம் கொண்டு வரப்பட்ட காணாமல் போனோர் அலுவலகத்தை, வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் பெற்றோர்கள், உறவினர்கள் நிராகரித்துள்ளனர். இழப்பீட்டுக்கான அலுவலகத்தினை மறுக்கின்றனர்.

இருந்தாலும், ஆணையாளர் அனுப்பிய பதில் கடிதத்தில் காணாமலாக்கப்பட்டோருக்கான அலுவலகம் முக்கியப்படுத்தப்பட்டிருந்தது. வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் சர்வதேச விசாரணையைக் கோரிநிற்கின்ற நிலையில் ஆணையாளர் இல் அலுவலகத்தை முதன்மைப்படுத்துவது எதிர்பார்க்கப்படுகின்ற விடயத்துக்கு மாறானதே.

குட்சிகள், அமைப்புகளின் கடிதங்கள் குறித்து ஒற்றுமை இன்மை போன்ற சில விமர்சனங்களை முன்வைக்கலாம் என்றாலும், தமிழர் தரப்பின் கடந்த காலங்களில் இல்லாத ஒழுங்குபடுத்தல் இம்முறை அனைவருடைய கடிதங்களிலும் காணப்படுவது பாராட்டத்தக்கதாகவே இருக்கிறது.

பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிக்கச் சர்வதேச நாணய நிதியத்திடம் கடந்த ரணில் விக்ரமசிங்கள அரசு சென்றதை விமர்சித்த அரசாங்கத்தின் செயற்பாடுகளைத் தொடர்ந்து எதிர்த்தே வந்திருந்த அனுரகுமார திசாநாயக்க தரப்பு ஆட்சிக்கு வந்ததும் சர்வதேச நாணய நிதிய விடயத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

ஏனைய விடயங்களை அப்படியே வைத்துக் கொண்டு நகர்த்துகின்றது. தமிழர்கள் விடயத்திலும் அதனையே செய்கிறது. அதாவது கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட உள்ளகப் பொறிமுறை விடயத்தையே முன்னுரிமைப்படுத்தினர்.

வடக்கு கிழக்கில் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ஒட்டுமொத்த இன அழிப்புக்கான அரச பொறுப்புக் கூறலுக்கான நீதியைக் கோருகின்ற தமிழர் தரப்பு விக்கிரமாதித்தன் போன்று தொடர்ந்தும் முயற்சிக்கவேண்டிய கட்டாயத்திலேயே இருக்கின்றது. .சர்வதேச சமூகம் விசாரணை நடத்துவதற்கான அனுமதியை மறுப்பதும் தமிழ் மக்கள் அனுபவித்த துன்ப துயரங்களை அரசு கணக்கெடுக்காதிருப்பதும் கவலையானதாக இருந்தாலும் இம்முறை கொண்டுவரப்படுகின்ற தீர்மானமானது வலுவானதாக இருக்குமானால் தமிழர்கள் சற்றேனும் நிம்மதியடையக்கூடும்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறிவதற்காக அரசினால் அமைக்கப்பட்ட அலுவலகங்கள், ஆணைக் குழுக்களில் நம்பிக்கை இழந்த மக்கள் வீதிக்கு இறங்கி சர்வதேசத்திடம் நியாயம் கோருகின்றனர்.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி வடக்கு கிழக்கு ஊடக அமைப்புகள் போராட்டங்களை நடத்துகின்றன. தொடர்ச்சியாக பல்வேறு கோரிக்கைகளுடன் கடிதங்கள் அனுப்பப்படுகின்றன.

இவ்வாறான நிலையில்தான், முள்ளிவாய்க்காலில் நடைபெற்றவை இனப்படுகொலை அல்ல என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயல்கிற அரசும் சர்வதேசமும் தமிழர் தரப்பின் கோரிக்கைகளுக்குச் சாதகமான பதிலைக் கொடுக்குமா என்கிற சந்தேகம் உருவாகின்றது.

அந்தவகையில், இலங்கையில் இனப்படுகொலைகள் நடந்தன என்பதை செம்மணியிலும், மன்னாரிலும் எனப் இன்ன பல இடங்களிலும் கண்டெடுக்கப்படும் மனித எச்சங்கள் ஆதாரங்களாக உறுதிப்படுத்தினாலும் சர்வதேசப் பொறிமுறையின்றி முழுமையான தீர்வு கிடைக்கப்போவதில்லை. எனவே நடந்து முடிந்த இன அழிப்பு நடவடிக்கைகள், வலிந்து காணமலாக்கப்பட்ட சம்பவங்கள்,
யுத்த நெறிமுறைகளுக்கு முரணாக நடைபெற்ற போர்க் குற்றங்கள் பற்றி சர்வதேச சமூகத்தின் முழுமையான பங்குபற்றுதலுடன் விசாரணை நடைபெற்றாகவேண்டும் என்கிற முடிவு கிடைக்கின்றது.

அதற்காக தமிழர் தரப்பின் ஒற்றுமை முதன்மைப்படுத்தப்படுகின்றதாக இருத்தல் வேண்டும். இம்முறை ஜெனிவா அமர்வை இலக்கு வைத்து கோரிக்கை கடிதங்களை அனுப்புவதற்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்ட வேளை ஒன்றிணைவுக்கு இiசாயது தனிக்காட்டு ராஜாவாக தமிழரசுக்கட்சி நின்றிருந்தது.

அதனைச் சிலர் தமிழர்கள் அனைவரும் கோருகின்ற இன அழிப்புக்கான நீதிக் கோரிக்கை விடயத்துக்குள் அக்கட்சி நுழையாது என்றே எண்ணியிருந்தனர். ஆனால். இறுதியில் அதனை முன்னிறுத்தியே தன்னுடைய கடிதத்தை அனுப்பியிருக்கிறது.

இதனை ஒரு முதற்படியாகக் கொள்ளமுடியுமாக இருந்தால், கட்சி அரசியலுக்கு அப்பால் செய்று தமிழ் மக்களின் உரிமை சார் விடயத்திலேனும் அரசியல் காழ்ப்புணர்ச்சிகளுக்கப்பால் ஒருமித்துச் செய்யப்படுவதே காலத்தின் தேவையாக இருக்கும். அந்தவகையில் காலத்தே அரசியல் செய்தலை இலங்கைத் தமிழரசுக்கட்சி புரிந்து, தெளிந்து நடந்து கொள்ளுதலே நல்லது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.