அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக தொடர்ந்து 6 மாதங்கள் கூட போர் புரிய தயார் – ஈரான் சவால்
ஈரானில் ஒரு வாரத்துக்கு மேலாக போரிட்டு வரும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள், தலைநகர் டெஹ்ரான் உள்ளிட்ட பல்வேறு நகரங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வரு கின்றன.
உலக நாடுகளை தொடர்ந்து அதிர்ச்சியில் ஆழ்த்தி வரும் இந்த போர் இன்று 9-வது நாளாக நீடித்து வருகிறது.
இந்நிலையில், ஈரான் மீது இன்று வலிமையான தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் ஆயுதங்களை கைவிட்டு சரணடைய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஈரான் ராணுவம் விடுத்துள்ள அறிக்கையில்,
எங்களிடம் ஆசியாவிலேயே மிகப்பெரிய ஏவுகணை சேமிப்பு உள்ளது. 6 மாதங்களுக்குத் தொடர்ந்து ஏவுகணைகளை ஏவும் அளவுக்கு பல்லாயிரக் கணக்கான ‘பாலிஸ்டிக்’ மற்றும் ‘குரூஸ்’ ஏவுகணைகள் உள்ளன. ஈரான் இதுவரை பயன்படுத்தாத ‘பத்தாஹ்-2’ (Fattah-2) போன்ற ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை இனி ஏவப்போகிறோம். இவை ஒலியின் வேகத்தை விட 15 மடங்கு வேகமாகச் செல்லக்கூடியவை, இவற்றை இஸ்ரேலின் ‘ஆரோ’ (Arrow) அல்லது ‘டேவிட்ஸ் ஸ்லிங்’ (David’s Sling) தடுப்பு அமைப்புகளால் தடுப்பது மிக மிக கடினம்
அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக அடுத்த 6 மாதங்களுக்கு தொடர்ந்து தீவிரமாக போர் புரியும் வலிமை தங்களுக்கு இருக்கிறது என அதில் தெரிவித்துள்ளது. 6 மாத காலத் தீவிரப் போர் வலிமை மற்றும் அதிநவீன ஏவுகணை மிரட்டல் சம்பவம் தற்போது உலக அளவில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.