சாம்பலிலிருந்து மீண்டெழுந்த அறிவுப் பொக்கிஷம்
ஈழத் தமிழர்களின் அறிவுத் தேடலின் அடையாளமாகவும், உலகத் தமிழர்களின் பண்பாட்டுப் பொக்கிஷமாகவும் விளங்குவது யாழ்ப்பாணப் பொது நூலகம் ஆகும். 1981ஆம் ஆண்டு அரசியல் மற்றும் இன வெறுப்பினால் இந்த நூலகம் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம், மனித வரலாற்றின் மிகக் கொடூரமான கலாசாரப் படுகொலைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. எனினும், அந்தச் சாம்பல் மேட்டிலிருந்து ஒரு பீனிக்ஸ் பறவையைப் போல மீண்டும் உயிர்பெற்று, இன்று உலகத் தரத்திலான ஒரு நூலகமாக அது நிமிர்ந்து நிற்கிறது.
நூலகத்தின் தோற்றமும் அரிய சேகரிப்புகளும்
1933ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் புத்தூரைச் சேர்ந்த கே.எம்.செல்லப்பா என்ற கொடையாளர், தனது இல்லத்தில் தனிநபர் சேகரிப்பில் இருந்த நூல்களைக் கொண்டு ஒரு வாடகை நூலகமாக இதனைத் தொடங்கினார். தமிழ்ச் சமூகத்தின் கல்வித் தாகத்தைக் கண்ட யாழ்ப்பாணத்தின் அறிஞர்களும், கல்வியாளர்களும் இதற்கு ஒரு நிரந்தரக் கட்டடம் அமைக்க முயன்றனர்.
எரிக்கப்பட்ட நூலகம் எரிக்கப்பட்ட நூலகம்
அதன் விளைவாக, இந்திய நூலக அறிவியலின் தந்தை என்று போற்றப்படும் எஸ்.ஆர்.ரங்கநாதனின் வழிகாட்டுதலின்படி, சர்வதேசத் தரத்திலான நூலகத் திட்டம் வகுக்கப்பட்டது. பிரபல கட்டடக் கலைஞர் வி.எம்.நரசிம்மன் திராவிடக் கட்டடக் கலை மரபில் இதன் புதிய அழகிய கட்டடத்தை வடிவமைத்தார். 1953இல் அடிக்கல் நாட்டப்பட்டு, 1959 அக்டோபர் 11 அன்று அப்போதைய யாழ் மேயர் ஆல்ஃபிரட் துரையப்பாவால் இந்த நூலகம் திறந்து வைக்கப்பட்டது.
இந்த நூலகம் வெறும் புத்தகங்களின் குவியலாக இருக்கவில்லை; தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய அறிவு மையமாகத் திகழ்ந்தது. உலகெங்கிலும் இருந்து பெறப்பட்ட சுமார் 97,000 அரிய நூல்கள், ஆவணங்கள் இங்குப் பாதுகாக்கப்பட்டன.
1585இல் கத்தோலிக்கப் பாதிரியார்களால் தமிழில் அச்சிடப்பட்ட அரிய சமய நூல்கள்.
1817இல் லண்டனில் வெளியான ‘History of Ceylon’ (ராபர்ட் க்னொக்ஸ்) நூலின் மூலப்பிரதி. முதலியார் இராசநாயகத்தின் ‘பண்டைய யாழ்ப்பாணம்’. தமிழின் முதல் இலக்கியக் கலைக்களஞ்சியமான முத்துத்தம்பிப் பிள்ளையின் ‘அபிதான கோசம்’. நூற்றாண்டுகள் பழமையான மருத்துவ மற்றும் ஜோதிட ஓலைச்சுவடிகள் என்பன இங்கு பாதுகாக்கப்பட்டன.
வரலாற்று முக்கியத்துவம்
தமிழகத்தில் பல்வேறு படையெடுப்புகளாலும் இயற்கைச் சீற்றங்களாலும் அழிந்துபோன பல ஓலைச்சுவடிகளின் மூலப்பிரதிகள் யாழ்ப்பாண நூலகத்தில்தான் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. உ.வே.சாமிநாதையர் அவர்கள் சிலப்பதிகாரத்தின் மூலப்பிரதியை மீட்டெடுத்ததும் இந்த யாழ்ப்பாண மண்ணிலிருந்துதான்.
கறுப்புப் பக்கம்: 1981 நூலக எரிப்பு
1981ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1ஆம் திகதி இரவு, தமிழினத்தின் வரலாற்றில் ஒரு மறக்க முடியாத கறுப்பு நாளாக மாறியது. இலங்கையின் மாவட்ட சபை தேர்தலையொட்டி யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட அரசியல் பதற்றத்தின் உச்சகட்டமாக, சிங்களப் பேரினவாதக் கும்பல்களாலும் பாதுகாப்புப் படையினராலும் இந்த வரலாற்றுப் பொக்கிஷம் திட்டமிட்டுத் தீக்கிரையாக்கப்பட்டது.
தலைமுறை தலைமுறையாகச் சேர்க்கப்பட்ட 97,000க்கும் மேற்பட்ட அரிய நூல்களும், விலைமதிப்பற்ற ஓலைச்சுவடிகளும் ஒரே இரவில் எரிந்து சாம்பலாயின. இந்தத் துயரத்தைத் தாங்க முடியாமல் யாழ்ப்பாணத்தின் முன்னணி அறிஞரான பேராசிரியர் தாவீது (Father David) அதிர்ச்சியிலேயே மாரடைப்பால் மரணமடைந்தார். இந்த எரிப்புச் சம்பவம் தமிழர்களை உளவியல் ரீதியாகப் பெரிதும் பாதித்ததுடன், ஈழப் போராட்டத்தின் நியாயத்தையும் தீவிரத்தையும் உலகரங்கில் உணர்த்தும் ஒரு முக்கிய காரணியாகவும் மாறியது. யாராலும் ஈடு செய்ய முடியாத பெரும் இழப்பைச் சந்தித்த போதிலும், தமிழ்ச் சமூகம் தனது அறிவுத் தேடலைக் கைவிடவில்லை. நீண்ட காலப் போராட்டங்களுக்கும், உள்நாட்டுப் போரின் பல்வேறு கட்டங்களுக்கும் பிறகு, 1999இல் இந்த நூலகத்தை மீண்டும் புனரமைக்கும் பணிகள் தொடங்கின. 2003இல் பணிகள் நிறைவடைந்து, 2004ஆம் ஆண்டு முதல் இந்த நூலகம் மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்காக அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.
இன்று 43 ஆண்டுகளுக்குப் பிறகு, யாழ்ப்பாணம் கோட்டைச் சாலையில் இயற்கை எழில் கொஞ்சும் சூழலில், சுமார் 3.50 லட்சம் புத்தகங்களுடன் இந்த நூலகம் கம்பீரமாகத் காட்சியளிக்கிறது.
நவீன தொழில்நுட்பம் மற்றும் பிரிவுகள், இந்தியா பகுதி (India Corner) சுவடிப் பாதுகாப்புப் பிரிவு: குளிரூட்டப்பட்ட பிரத்தியேக அறையில் 200 ஆண்டுகளுக்கு முற்பட்ட அரிய ஓலைச்சுவடிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
டிஜிட்டல் நூலகம் : பழைய நாளிதழ்கள் (1930 முதல் வெளியாகும் பத்திரிகைகள்) மற்றும் அரிய நூல்கள் கணினியில் மின்-படியெடுக்கப்பட்டு (Digitized) Koha தரவுதளத்தில் உலகளாவிய பயன்பாட்டிற்காகப் பதிவேற்றப்பட்டுள்ளன.
மாற்றுத் திறனாளிகளுக்கான வசதி:
பார்வையற்றவர்கள் வாசிப்பதற்காகப் பிரெய்லி நூல் பகுதியும், இ-புத்தகக் குரல் (Audio Books) பிரிவும் செயல்படுகின்றன.
எரிந்து நின்ற பழைய கட்டடம் அப்படியே வரலாற்றுச் சாட்சியாகப் பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற ஆதங்கம் பலரிடம் இருந்தாலும், இன்று மீண்டெழுந்திருக்கும் நூலகம் தமிழர்களின் அறிவுப் பாரம்பரியத்தின் அசைக்க முடியாத வலிமையைக் காட்டுகிறது. தற்போது, தமிழகத்திலிருந்தும் உலகெங்கிலும் இருந்தும் எழுத்தாளர்களும் பதிப்பகங்களும் தங்களின் புதிய நூல்களின் ஒரு பிரதியை “Jaffna Public Library, Jaffna, Sri Lanka” என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கின்றனர். அன்று அறிவை அழிக்க நினைத்த வன்முறைத் தீயை, இன்று உலகத் தமிழர்கள் தங்களின் புத்தகக் கொடைகளாலும் அன்பினாலும் அணைத்து, யாழ் நூலகத்தை என்றும் அழியாத அறிவுச் சுடராக ஒளிரச் செய்துள்ளனர்.