;
Athirady Tamil News

கிழக்கில் மீண்டும் மலரும் ‘பிட்டும் தேங்காய்ப் பூவும்’ யுகம்

0

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களும் முஸ்லிம்களும் மொழியாலும், பண்பாட்டாலும் ஒன்றிணைந்து, ‘பிட்டும் தேங்காய்ப் பூவும்’ போல பல நூற்றாண்டுகளாக ஒற்றுமையாக வாழ்ந்து வந்த வரலாறு பொன் எழுத்துக்களால் எழுதப்பட வேண்டியவை.

இலங்கையின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளுக்கு (மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை) வந்த அரபு வணிகர்கள், இங்குள்ள பூர்வீககுடித் தமிழர்களுடன் இணைந்து வர்த்தகத்தில் ஈடுபட்டனர். முஸ்லிம்களின் தாய்மொழி தமிழாகவே இருந்து வந்துள்ளது. தமிழர்களின் கலாசாரக் கூறுகளான ‘தாய்வழிக்குடி’ முறை கிழக்கு மாகாண முஸ்லிம்களிடமும் இன்றும் வழக்கில் உள்ளது.

ஒரே சந்தையைப் பகிர்ந்து கொள்ளுதல், விவசாயத்தில் கூட்டுறவு, மற்றும் பண்டமாற்று முறைகளில் இரு சமூகங்களும் பரஸ்பரம் கலந்து வாழ்ந்துள்ளார்கள். ஒரே பாடசாலைகளில் கல்வி கற்றும், கிராமிய விளையாட்டுகள், கலைகள் ஆகியவற்றைப் பகிர்ந்துள்ளதோடு, கலாசார ரீதியிலும் இரண்டறக் கலந்த வாழ்வியலே இரண்டு சமூகங்களுக்கு மத்தியிலும் இருந்துள்ளது.

இரு சமூகங்களுக்கும் இடையே முரண்பாடுகள் எழும்போது, அந்தந்த ஊர் மூத்தோர்கள் மற்றும் தலைவர்கள் ஒன்று கூடி மிக விரைவாகச் சுமூகமான தீர்வுகளை கண்டுள்ளார்கள். இலங்கை வரலாற்றில், இரு சமூகங்களின் தலைவர்களும் இணைந்து அரசியல், சமூக உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த பல பொற்கால நிகழ்வுகள் கிழக்கின் பாரம்பரிய அடையாளங்களாகவும், என்றும் மறைக்க முடியாத வரலாறுகளாகவும் எழுதப்பட்டுள்ளன.

இவ்வாறு சகோதரத்துவத்துடன் வாழ்ந்த சமூகங்களுக்கு மத்தியில் சுயலாப அரசியலுக்காவும், ஆட்சி அதிகாரங்களை தக்கவைத்துக் கொள்வதற்காகவுமே இரண்டு சமூகங்களையும் பிரித்தாளும் திட்டங்கள் திரைமறைவில் தீட்டப்பட்டு மிகக் கச்சிதமாக சமூகங்களுக்குள் சிலீப்பர் செல்களாக ஊடுறுவச் செய்யப்படுகின்றன.

1888 இல், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், சேர் பொன்னம்பலம் இராமநாதன் போன்ற தமிழ் தலைவர்கள் இலங்கையிலுள்ள முஸ்லிம்களை “தமிழ் பேசும் இனம்” என்ற ஒற்றை அடையாளத்திற்குள் கொண்டுவர முயன்றனர். ஆனால், முஸ்லிம்கள் தங்களை மத அடிப்படையிலான தனித்துவமான அரபு வழிவந்த தேசிய இனமாக (Moors) அடையாளப்படுத்த விரும்பியதால், அரசியல் ரீதியாக இரு தரப்பினருக்கும் இடையே முதல் அடையாள முரண்பாடு தோற்றம் பெறுகின்றது.

மறைந்த எம்.எச்.எம்.அஷ்ரபினால் 1986 இல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஓர் அரசியல் கட்சியாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. இது முஸ்லிம்களைத் தனி அரசியல் சக்தியாக மாற்றிய அதேவேளை, தமிழர்களின் ‘தாயகக் கோட்பாட்டில்’ இருந்து முஸ்லிம்களைத் தனியாகப் பிரித்தது. அதற்குப் பின்னர் 1990 களில் ஏற்பட்ட மிகக் கடுமையான உள்நாட்டு போர் இரு சமூகங்களுக்கு மத்தியில் பெரும் வேறுபாட்டையும் ஆறாத வடுக்களை ஏற்படுத்தவும் காரணமாக அமைந்திருந்தது. அதனால் கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கிடையே மிக ஆழமான அரசியல், சமூக மற்றும் புவியியல் ரீதியான பிரிவினையையும் இது தோற்றுவித்தது.

மீண்டும் கிழக்கில் தமிழ்- முஸ்லிம் உறவுகளை வலுப்படுத்த, இனவாத அரசியலைத் தவிர்த்து ‘ஒரே இலங்கை மக்கள்’ (Sri Lankan Nation) என்ற சிந்தனை அடிப்படையில் அரசியல் கலாசாரத்தை முன்னெடுக்க தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கமும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் தூர நோக்கு சிந்தனையுடன் செயற்பட்டு வருகின்றார்கள். இன, மத பேதங்களைக் கடந்து பொதுவான பொருளாதார மற்றும் ஊழலற்ற நிர்வாகக் கட்டமைப்பை மையப்படுத்தி இரு சமூகங்களையும் ஒன்றிணைத்தலே அரசங்கம் கிழக்கில் தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் கையாளும் மென்மையான அரசியல் முன்னெடுப்பாக உள்ளது.

இந்த நிலையில், அதிகாரக் கதிரைகளுக்காக உருவாக்கப்பட்ட பிரச்சினைகளாக இருக்கும் நிர்வாக எல்லைகள் மற்றும் பிரதேச செயலகப் பிரிப்பு (கல்முனை வடக்கு, தெற்கு விவகாரம், கோறளைப்பற்று மத்தி, கோறளைப்பற்று தெற்கு) இழந்த காணிகள், பெற்றுக்கொள்ள வேண்டிய காணிகள் தொடர்பான முரண்பாடுகள் இரு சமூகங்களுக்கும் இடையே தேவையற்ற பதற்றங்களை உருவாக்குகின்றன.

உள்நாட்டு யுத்த காலத்தில் இடம்பெற்ற கட்டாய வெளியேற்றங்கள், வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் பொருளாதார இழப்புகள் போன்றவை முஸ்லிம் மக்களிடம் ஒருவித அச்சத்தையும் அவ நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ள அதே நேரத்தில், அதற்கு எதிர்வினையாற்றும் வகையில் முஸ்லிம் தரப்பு அரச படைகளுடன் சேர்ந்து செயற்பட்டமை தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு மத்தியிலான புவியல் சார்ந்த அரசியல் பிரச்சினைகளையும், விரிசலையும் உச்சத்துக்கு கொண்டு சென்றது.

வடக்கு- கிழக்கு இணைப்பு தொடர்பாக தமிழ் தலைமைகள் முன்வைக்கும் கோரிக்கைகள், முஸ்லிம்களின் தனித்துவமான அரசியல் மற்றும் நிர்வாக இருப்புக்கு ஆபத்தாக முடியுமோ என்ற சந்தேகம் முஸ்லிம் சமூகத்தில் நிலவுகிறது.

தமிழ் பேசும் மக்களாக இருந்தாலும், மத அடிப்படையிலும், கலாசார ரீதியிலும் இரு சமூகங்களும் தங்களை தனித்துவமாக அடையாளப்படுத்துவதும், நிகழ்கால தீவிரப் போக்குகளும் இடைவெளியை இன்னும் அதிகப்படுதுகின்றன.

அத்தோடு, சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தவறான தகவல்கள், வெறுப்புப் பேச்சுக்கள் (Hate Speech) மற்றும் ஒரு தலைப்பட்சமான செய்திகள் இரு சமூகங்களிடையே உள்ள சிறு விரிசலையும் பெரிதாக்குகின்றது. இவற்றுக்கு எல்லாம் பின்புலத்தில் இருந்து செயற்படுவது அரசியல் அதிகார கதிரைகளுக்காக போராடுபவர்களே என்ற உண்மையை கிழக்கு மக்களுக்கு புரிய வைக்க வேண்டிய தேவையும், கடப்பாடும் நிகழ்கால இளைஞர் சமூகத்தின் கைககளிலே உள்ளது.

கிழக்கு மாகாணம் தனியானதொரு நிர்வாக அலகாகவே நீடிக்க வேண்டும். மக்களின் விருப்பமின்றி வடக்குடன் கிழக்கு இணைக்கப்படக் கூடாது என்பதில் கிழக்கு முஸ்லிம் அமைப்புகள் உறுதியாக உள்ளன. கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் சுமார் 37% வாழ்கின்றனர். ஆனால், வடக்கும் கிழக்கும் நிரந்தரமாக இணைக்கப்பட்டால் ஒட்டுமொத்தப் பிராந்தியத்திலும் முஸ்லிம்களின் சனத்தொகை விகிதாசாரம் 17% ஆகக் குறைந்துவிடும் என்ற அச்சம் நிலவுகிறது.

இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால்! கிழக்கில் தமிழ்- முஸ்லிம் அரசியல் ஒற்றுமையை ஏற்படுத்துவது மிகவும் அவசியமான ஒன்றாகும். குறுகிய கட்சி அரசியலைக் கடந்து ‘மொழிவழி உறவு’ மற்றும் ‘பிராந்திய நலன்’ ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட கூட்டுத் தலைமை உருவாக்கப்பட வேண்டும். இதற்கு பரஸ்பர நம்பிக்கையை வளர்க்கும் செயற் திட்டங்கள் மிக அவசியமாகும்.

கடந்த காலங்களில் இடம்பெற்ற கசப்பான அனுபவங்களை மறந்து, சிறுபான்மைச் சமூகங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் ஒருமித்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். மாவட்ட மற்றும் பிரதேச சபைகளில் தமிழ், முஸ்லிம் கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்கும் நடைமுறைகளை மேலும் பலப்படுத்தி, அடிமட்ட மக்களிடையே நல்லுறவை ஏற்படுத்தும் முயற்சிகளில் இரு சமூகங்களும் வெற்றியடைய வேண்டும்.

தென்னிலங்கை மையத் தேசிய கட்சிகள் தமது குறுகிய அரசியல் தேவைகளுக்காகவும், வாக்கு வங்கியை உறுதிப்படுத்தவும் இரு சமூகங்களிடையேயும் பிளவுகளை ஏற்படுத்தி ஆதாயம் தேடுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளன. இவ்விடயத்தில் இரு சமூகங்களிலும் உள்ள அரசியல் தலைமைகள் காலத்துக் காலம் தாங்கள் பிரதி நிதித்துவப்படுத்தும் சமூகங்கங்களை மறந்து செயற்படுபவர்களாகவே உள்ளார்கள். சமூகம் எப்படிப்போனாலும் அவர்களுக்கு கவலையில்லை. அனால், அவர்களுடைய நோக்கமெல்லாம் அரசியல் அதிகாரம் உடைய கதிரையை கைப்பற்றுவதுதான்.

இவ்விரு சமூகங்களும் தங்களின் நீண்டகால நலன்களைக் கருத்திற்கொண்டு, பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் விட்டுக்கொடுப்புகளுடன் செயற்படுவதன் மூலமே இந்தத் தடைகளைத் தகர்த்தெறிய முடியும் என்ற புதிய அரசியல் கலாசாரத்தினை கிழக்கில் ஏற்படுத்துவதே தேசிய மக்கள் சக்தியின் பிரதான செயற்பாடாகவும், நோக்கமாகவும் உள்ளது. அதற்காக கிழக்கில் தமிழ் மற்றும் முஸ்லிம் இளைஞர்களை ஒன்றிணைத்து, பரஸ்பர நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான செயலமர்வுகள் மற்றும் சிவில் சமூகக் கலந்துரையாடல்கள், பொதுக் கூட்டங்கள் மற்றும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை போன்ற மாவட்டங்களில் இரு சமூகங்களையும் சேர்ந்த உறுப்பினர்களைக் கொண்டு NPP தனது பிராந்தியக் கட்டமைப்புக்களை உருவாக்கியுள்ளது. நீண்டகாலமாகப் பாதிக்கப்பட்ட கிழக்கு மக்களின் காணிப் பிரச்சினைகளை இனவாதக் கண்ணோட்டம் இன்றித் தீர்த்து வைப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

சமமான பொருளாதார அபிவிருத்தியை உறுதி செய்வதோடு, இலங்கையின் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் மற்றும் தேசிய நல்லிணக்க முன்னெடுப்புகளில் அதிக கவனம் செலுத்தப்படுகின்றது. கடந்த ஆட்சியாளர்களால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட தமிழ்- முஸ்லிம் மக்களுக்கிடையான பகையுணர்வை முடிவுக்குக் கொண்டு வருவதே தேசிய மக்கள் சக்திக்கு கிழக்கு பிராந்தியத்தில் இருக்கும் பெரும் சவாலாக உள்ளது.

தமிழ் – முஸ்லிம் உறவின் எதிர்காலம் சிறப்பானதாகவும், பிராந்திய ஒருமைப்பாட்டின் கீழ் நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றம் அடைந்து ஒரே இலங்கையர் எனும் வட்டத்திற்குள் எல்லோரும் சம அந்தஸ்துடன் வாழ வேண்டும். அதற்கு வேறுபாடுகளை மறந்து ஒட்டுமொத்த கிழக்கு மக்களும் தேசிய மக்கள் சக்தியுடன் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது கட்டாயமானது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.