;
Athirady Tamil News

சீனி உற்பத்தியில் இலங்கை தன்னிறைவு காண முடியுமா?

0

1960களில் ஆரம்பிக்கப்பட்ட, முற்றிலும் அரசாங்கத்திற்குச் சொந்தமான கல்ஓயா பெருந்தோட்ட நிறுவனத்தின் சீனி தொழிற்சாலையானது, ஒரு காலத்தில் தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய தொழிற்சாலையாக நிமிர்ந்து நின்றது.

இலங்கையின் விவசாய மற்றும் தொழிற்துறை வரலாற்றில், ‘கல்ஓயா

அபிவிருத்தித் திட்டம்’ முக்கியமானது. அது வெறும் நிலச் சீர்திருத்தத்தையோ அல்லது காடழித்து நாடாக்கிய ஒரு சாதாரண உட்கட்டமைப்புத் திட்டத்தையோ குறிப்பதல்ல; மாறாக, அது சுதந்திர இலங்கையின் பொருளாதாரச் சுயசார்பு மற்றும் பிராந்திய சமநிலைக்கான ஆகச்சிறந்த தொலைநோக்கு பிரகடனமாகும்.

1948ஆம் ஆண்டு நாடு பெற்ற சுதந்திரத்தின் முதலாமாண்டு நிறைவில், அக்காலப் பிரதமர் டி. எஸ். சேனாநாயக்கவின் வழிகாட்டுதலில் ஆரம்பிக்கப்பட்ட இந்த மாபெரும் நீர்ப்பாசனத் திட்டம், கிழக்கிலங்கையின் முகவரியை மாற்றியமைத்தது. அம்பாறை மற்றும் இங்கினியாகல ஆகிய இரு பெரும் மலைகளை இணைத்து உருவாக்கப்பட்ட சேனாநாயக்க சமுத்திரம், வெறும் நீர்த்தேக்கமாக மட்டும் இருக்கவில்லை; அது வறுமையில் வாடிய பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வில் புதிய வசந்தத்தைக் கொண்டு வந்த ஒரு பொருளாதாரப் புரட்சியாகும்.

நாட்டின் பல மாகாணங்களிலிருந்தும் கொண்டு வரப்பட்ட மக்களைக் குடியேற்றி, அவர்களுக்கு விவசாய நிலங்களை வழங்கி, கிழக்கின் நெல் வயல்களையும் கரும்புத் தோட்டங்களையும் செழிக்கச் செய்த இந்தத் திட்டம், இலங்கையின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகித்தது. குறிப்பாக, நீர் அதிகமாகக் கிடைக்கும் பகுதிகளில் நெற்செய்கையும், குறைந்த நீர் வளத்தைக் கொண்ட பகுதிகளில் கரும்புச் செய்கையும் எனத் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட 40 விவசாயக் குடியிருப்புகள், திட்டமிடப்பட்ட பொருளாதாரத்தின் மிகச் சிறந்த சான்றாகும்.

1960களில் ஆரம்பிக்கப்பட்ட, முற்றிலும் அரசாங்கத்திற்குச் சொந்தமான கல்ஓயா பெருந்தோட்ட நிறுவனத்தின் சீனி தொழிற்சாலையானது, ஒரு காலத்தில் தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய தொழிற்சாலையாக நிமிர்ந்து நின்றது. இலாப நோக்கத்தை மட்டும் குறிக்கோளாகக் கொள்ளாமல், அப்பிரதேசத்து இளைஞர்களின் வேலைவாய்ப்பையும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் உறுதிப்படுத்துவதையே இத்தொழிற்சாலை முதன்மை நோக்கமாகக் கொண்டிருந்தது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கும் விவசாயக் குடும்பங்களுக்கும் அரணாக விளங்கிய இந்த நிறுவனம், 1993 ஆம் ஆண்டின் திட்டமிடப்படாத தனியார்மயமாக்கலுக்குப் பின்னர் தனது வீழ்ச்சியைச் சந்திக்கத் தொடங்கியது. இறுதியாக, தொலைநோக்கற்ற தொழிற்சங்க நடவடிக்கைகள் மற்றும் அரசியல்சார் தலையீடுகள் காரணமாக 1996 ஆம் ஆண்டில் இத்தொழிற்சாலை தனது இறுதி மூச்சை நிறுத்திக் கொண்டது.

இத்தொழிற்சாலையின் மூடல் என்பது வெறும் ஒரு வணிக நிறுவனத்தின் முடக்கம் மட்டுமல்ல, அது ஒட்டுமொத்த அம்பாறை மாவட்டத்துக்குமான பேரிடியாகும். செழிப்பாக இருந்த கரும்பு நிலங்கள் பாழடைந்தன; கைநிறையப் பணப் புழக்கத்தைக் கண்ட விவசாயக் குடும்பங்கள் வறுமையின் பிடிக்குள் தள்ளப்பட்டன. வாழ்வாதாரத்தைத் தேடி குடும்பத் தலைவர்கள் கொழும்பு போன்ற தூரத்து நகரங்களுக்கு இடம்பெயர்ந்ததால், குடும்பப் பிரிவுகளும், அதன் விளைவாகப் பாரிய சமூகச் சீரழிவுகளும் அப்பிரதேசத்தில் தலைதூக்கின. ஒரு தவறான கொள்கை முடிவு, எவ்வாறு ஒரு செழிப்பான பிராந்தியத்தையே இருளுக்குள் தள்ள முடியும் என்பதற்கு கல்ஓயாவின் வீழ்ச்சி ஒரு கசப்பான வரலாற்றுப் பாடமாகும்.

முப்பதாண்டுகால உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, இத்தொழிற்சாலைக்கு மீண்டும் புத்துயிர் அளிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பாழடைந்து கிடந்த இயந்திரங்கள், கைவிடப்பட்ட நிலங்கள், நம்பிக்கையிழந்த விவசாய சமூகம் எனப் பல சவால்களுக்கு மத்தியில், அரசு – தனியார் கூட்டு முயற்சி மூலம் எல்.ஓ.எல்.சி. (LOLC) மற்றும் பிரவுன்ஸ் நிறுவனங்கள் இந்த மாபெரும் சவாலைத் தங்கள் கைகளில் எடுத்தன. ஆரம்பத்தில், கடந்த கால ஏமாற்றங்களால் கரும்புச் செய்கைக்குத் திரும்ப மறுத்த விவசாயிகளின் நம்பிக்கையை வென்றெடுப்பது நிறுவனத்திற்குப் பெரும் தியாகமாக இருந்தது.

ஆயினும், கடந்த இருபது ஆண்டுகாலப் பகுதியில், நவீன உலகளாவிய புத்தாக்கத் தொழில்நுட்பங்களைப் புகுத்தி, கல்ஓயா சீனி தொழிற்சாலையை மீண்டும் நாட்டின் முன்னணி உற்பத்தி மையமாக மாற்றுவதில் இந்த கூட்டு முயற்சி வெற்றி பெற்றுள்ளது. இன்று 20,000க்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பங்களின் எதிர்காலம் இதன் மூலம் பாதுகாக்கப்பட்டுள்ளது. வெறும் சீனி உற்பத்தியுடன் நின்றுவிடாமல், கரும்புக் கழிவுகளைப் பயன்படுத்தி எத்தனோல், மதுபானத்திற்கான ஸ்பிரிட், மற்றும் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் ‘பூச்சியக் கழிவு’ கொள்கையை இத்தொழிற்சாலை கையாள்வது சமகால தொழிற்துறைகளுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகும். தமக்குத் தேவையான மின்சாரத்தைத் தாங்களாகவே தயாரித்துக் கொள்வதுடன், மேலதிக மின்சாரத்தைப் பொது மின் கட்டமைப்பில் இணைக்கும் அளவுக்கு இத்தொழிற்சாலை உட்கட்டமைப்பில் பிரமாண்ட வளர்ச்சி கண்டுள்ளது.

மேலும், கரும்பின் இறுதிக்கழிவை சேதன உரமாக மாற்றி, சூழலுக்கு உகந்த பங்களிப்பையும் வழங்கி வருகிறது.

கல்ஓயாவின் நிகழ்காலம் நம்பிக்கையூட்டும் வகையில் இருந்தாலும், அதன் எதிர்காலத் தொடர்ச்சி என்பது அரசாங்கத்தின் கொள்கை ரீதியான ஆதரவிலேயே அது தங்கியுள்ளது. தற்போது இந்தத் துறை எதிர்கொள்ளும் சவால்களைக் களைவது அரசின் தேசியப் பொறுப்பாகும்:

கரும்புச் செய்கைக்காக ஒதுக்கப்பட்ட நிலங்கள், வேறு பயிர்ச்செய்கைகளுக்கு மாற்றப்படுவதைத் தடுக்க கடுமையான சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். மூலப்பொருளான கரும்பு தடையின்றித் தொழிற்சாலைக்குக் கிடைத்தால் மட்டுமே உற்பத்தியைச் சீராகப் பேண முடியும்.

உள்நாட்டில் சர்வதேசத் தரத்துடன் உற்பத்தி செய்யப்படும் 100% தூய்மையான, ஆரோக்கியமான சிவப்புச் சீனிக்கு விதிக்கப்பட்டுள்ள கூடுதல் வரிகளை நீக்குவது குறித்து மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்

வெளிநாடுகளிலிருந்து குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்படும், ஆரோக்கியத்திற்குத் தீங்கான இரசாயனங்கள் கலந்த வெள்ளைச் சீனிக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம், உள்நாட்டு உற்பத்திக்கான சந்தையை அரசாங்கம் விரிவுபடுத்த வேண்டும்.

அதிகரித்துவரும் உற்பத்திச் செலவுகளைக் கருத்திற்கொண்டு, விவசாயிகளுக்குத் தேவையான உர மானியங்களைச் சரியான நேரத்தில் வழங்குவதும், காட்டு யானைகளின் அச்சுறுத்தலிலிருந்து பயிர்களைப் பாதுகாப்பதற்கான காத்திரமான உத்திகளை வகுப்பதும் அவசியமாகும்.

இலங்கை தற்போது எதிர்கொண்டிருக்கும் பொருளாதார சவால்களிலிருந்து மீள்வதற்கும், அந்நியச் செலாவணி விரயமாவதைத் தடுப்பதற்கும் உள்நாட்டு உற்பத்திகளைப் பாதுகாப்பதே சிறந்த வழியாக அமையும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.