;
Athirady Tamil News

காலநிலை மாற்றமும் இலங்கையில் விவசாயத்துறை எதிர்நோக்கும் சவால்களும்!

0

2025 நவம்பரில் வீசிய ‘தித்வா’ புயலினால் 106,000 ஹெக்டேயர் நெற்பயிர்கள் சேதமடைந்தன. 227,000 க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். 1.1 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு அவசர உணவு மற்றும் விவசாய உதவி தேவைப்பட்டது.

இலங்கை காலநிலை அச்சுறுத்தலை மட்டும் எதிர்கொள்ளவில்லை, மாறாக அது “காலநிலையின் திடீர் தாக்குதலை” எதிர்கொள்கிறது. அதாவது ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமான மழை, வறட்சி, கடுமையான வெப்பம் என மாறி மாறித் தாக்கும் அபாயம் நிலவுகிறது.

இலங்கையிலும் ஏனைய விவசாயத் துறையானது ஆபத்தான நிலையை நோக்கிச் செல்வதாக சூழலியலாளர்கள் எப்போதோ எச்சரிக்கத் தொடங்கிவிட்டனர். சீரற்ற பருவமழை, நீடித்த வறட்சி, திடீர் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவுகள், கடுமையான வெப்ப அலைகள், சேதமடைந்த நீர்ப்பாசன அமைப்புகள் மற்றும் தொடர்ச்சியான பயிர் இழப்புகள் என்பவற்றின் மூலம் இவை தெளிவாக வெளிப்படுகின்றன.

தற்போது மற்றொரு தீவிரமான எச்சரிக்கையை அமெரிக்க காலநிலை அமைப்பொன்று வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA), அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், ‘எல் நினோ’ காலநிலை நிகழ்வு தீவிரமடைந்து வருவதாகவும், அது மிகவும் சக்திவாய்ந்ததாக மாறுவதற்கு 90% க்கும் அதிகமான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் எச்சரித்துள்ளது. இலங்கையின் வளிமண்டலவியல் திணைக்களமும் மழைவீழ்ச்சியில் ஏற்படக்கூடிய பாரிய மாற்றங்கள் குறித்து எச்சரித்துள்ளதுடன், வரவிருக்கும் நீர், மின்சாரம் மற்றும் உணவு நெருக்கடிகளைச் சமாளிப்பதற்காக அமைச்சரவை சிறப்புக் குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளன.

இங்கு எழும் முதன்மையான கேள்வி, ஆபத்து வருவதற்கு முன்பே நாம் நடவடிக்கை எடுப்போமா? என்பதுதான்.

2025 நவம்பரில் வீசிய ‘தித்வா’ சூறாவளி, இலங்கையின் காலநிலை பலவீனத்தின் ஒரு கொடூரமான முகத்தைக் காட்டியது. ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) வெளியிட்ட அறிக்கையின்படி, பெரும்போகத்தில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 106,000 ஹெக்டேர் நெற்பயிர்கள் (பயிரிடப்பட்ட பகுதியில் ஐந்தில் ஒரு பங்கு) பகுதியளவிலோ அல்லது முழுமையாகவோ சேதமடைந்தன. 227,000க்கும் அதிகமான விவசாயிகள், அவர்களின் வாழ்வாதாரம், கால்நடைகள், மீன்பிடி, நீர்ப்பாசனக் கட்டமைப்புகள் மற்றும் வீட்டு உணவுப் பயிர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டடன. இதன் விளைவாக 1.1 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு அவசர உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து உதவிகள் தேவைப்படுவதாக FAO மதிப்பிட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை இலங்கைக்கு மட்டும் உரியதல்ல. அண்மையில் நேபாளத்தில் பனிப்பாறை சரிவு மற்றும் நிலச்சரிவால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு நூற்றுக்கணக்கானோரைக் கொன்றதுடன் 90,000க்கும் மேற்பட்ட மக்களைப் பாதித்தது. இமயமலைப் பிராந்தியத்தில் ஏற்படும் இத்தகைய மாற்றங்கள் காலநிலை அபாயங்கள் அபிவிருத்தித் திட்டங்களைப் பார்த்து வருவதில்லை என்பதை நினைவூட்டுகின்றன.

இலங்கை தற்போது ஒரே ஒரு காலநிலை அச்சுறுத்தலை மட்டும் எதிர்கொள்ளவில்லை. மாறாக, அதிகப்படியான மழை, வறட்சி, அதிக வெப்பம் மற்றும் கணிக்க முடியாத பருவமழை ஆகிய அனைத்தையும் ஒரே நேரத்தில் எதிர்கொள்ளும் “காலநிலை இரட்டைத் தாக்குதலை” சந்திக்கிறது. எல் நினோவையோ சூறாவளியையோ நம்மால் தடுக்க முடியாது; ஆனால், இயற்கை அபாயங்கள் கொள்கைக் குறைபாடுகளால் பேரழிவுகளாக மாறுகின்றன.

காலநிலை அச்சுறுத்தலை வெறும் விவசாயிகள் நலன் சார்ந்த பிரச்சினையாக மட்டும் பார்க்க முடியாது. உணவுப் பாதுகாப்பு நான்கு முக்கிய அம்சங்களைக் கொண்டது:

வறட்சி மற்றும் வெள்ளம் நெல், சோளம், காய்கறிகள், பழங்கள், கால்நடைகள் மற்றும் மீன் உற்பத்தியைக் குறைக்கிறது.

உற்பத்தி குறையும் போது உணவுப் பொருட்கள் விலை உயர்ந்து, குறைந்த வருமானம் பெறும் நுகர்வோரை பாதிக்கிறது.

பல்வேறுபட்ட சத்தான உணவுகள் கிடைக்காமல் போவது ஊட்டச்சத்து குறைபாட்டை ஏற்படுத்துகிறது.

தொடர்ச்சியான காலநிலை அதிர்ச்சிகள் குடும்ப வருமானத்தையும் தேசிய உணவு விநியோகத்தையும் சீர்குலைக்கின்றன.

2022 பொருளாதார நெருக்கடியின் போது இலங்கையின் சனத்தொகையில் 28% பேர் தீவிர உணவு பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டதாக WFP மற்றும் FAO ஆகியன குறிப்பிட்டன. பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட நாட்டில் காலநிலை அதிர்ச்சிகள் விழும்போது, ஒரு பயிர் இழப்பு என்பது வெறும் புள்ளிவிபரமாக மாத்திரமல்ல அது உணவுப் பொருட்களின் விலை உயர்வு, இறக்குமதிச் சுமை, அந்நியச் செலவாணி நெருக்கடி மற்றும் விவசாய வாழ்வாதார இழப்பாக மாறுகிறது. வெளிநாட்டிலிருந்து உணவை இறக்குமதி செய்யலாம், ஆனால் விவசாயிகளின் இழந்த வாழ்வாதாரத்தை இறக்குமதி செய்ய முடியாது.

2026–2035 ஆம் ஆண்டுகளுக்கான தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகள் (NDC 3.0) ஆவணத்தில், காலநிலைக்கேற்ற விவசாயம், நீர்ப்பாசன மேலாண்மை, இழப்புகளைக் குறைத்தல் போன்றவை தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும், பாராளுமன்றக் காலநிலை மன்றமும் (Climate Caucus) “முன்னெச்சரிக்கை நிர்வாகம்”பற்றி விவாதித்துள்ளது.

ஆனால், உண்மையான பிரச்சினை என்னவென்றால், இந்த அமைப்புகள் ஆபத்து வருவதற்கு முன் முடிவுகளை எடுக்கின்றனவா என்பதே!

வறட்சி வந்தால் நிவாரணம் கொடுப்பது,

வெள்ளம் வந்தால் நஷ்டஈடு தருவது,

பற்றாக்குறை வந்தால் இறக்குமதி செய்வது,

அதிக உற்பத்தி வந்தால் அவசரக் கூட்டங்களைக் கூட்டுவது என்பதோடு நின்று விடாமல் காலநிலை மாற்றங்களால பாதிக்கப்படாத விவசாயத்தை உருவாக்குவதே அவசியமானதென சூழலியலாளர்கள் கூறுகின்றனர். எதிர்வரும் பெரும்போக பயிர்ச்செய்கை காலத்தில், ஒக்டோபர் முதல் இரண்டாவது இடைப்பருவப் பெயர்ச்சியுடன் வழக்கத்தை விட அதிகமான மழை பெய்யக்கூடும். இது நீர்த்தேக்கங்களை நிரப்ப உதவினாலும், பயிரிடும் காலத்தில் அதிகப்படியான மழை வெள்ளப்பெருக்கையும், பயிர்ச்செய்கை தாமதத்தையும் ஏற்படுத்தும்.

மத்திய கிழக்கு நெருக்கடியின் காரணமாக இலங்கையில் உர இறக்குமதிச் செலவும், கோதுமை விலையும் அதிகரித்துள்ளதால் விவசாய உற்பத்திச் செலவு மேலும் உயரும் அபாயம் உள்ளது.

தற்போது அநுராதபுரம் போன்ற மாவட்டங்களில் பல குளங்கள் வறண்டு காணப்பட்டாலும், ஒக்டோபர்-நவம்பர் மற்றும் டிசம்பர்-பெப்ரவரி வடகிழக்கு பருவமழைக் காலத்தில் பாரிய வெள்ள அபாயம் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வேளாண்மை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் காலநிலைத் தகவல்களை உடனடியாக விவசாயிகளுக்குச் சென்றடையச் செய்தல் அத்தியாவசியமானதென அடையாளம் காணப்பட்டுள்ளது. அதிக ஆபத்துள்ள பருவங்களுக்கு முன் விவசாய அவசரத் திட்டங்களை ஆயத்தப்படுத்தல், அனைத்துத் துறைகளையும் இணைக்கும் ஒருங்கிணைந்த ‘தேசிய காலநிலை தளத்தை’ உருவாக்குதல், ஒற்றைப் பயிர்ச் சார்பைக் குறைத்து, மாற்றுப் பயிர் மற்றும் ஒருங்கிணைந்த விவசாயம், அறுவடைக்குப் பிந்தைய சேமிப்பு, குளிரூட்டல் மற்றும் விநியோகச் சங்கிலியைப் பாதுகாத்தல், வறட்சி, வெள்ளம், உப்புத்தன்மையைத் தாங்கும் புதிய பயிர் ரகங்களை உடனடியாகப் பயன்படுத்துதல், நீர்ப்பாசன அமைப்புகள், நீர்ப்பிடிப்புப் பகுதிகள் மற்றும் குளங்களை மீண்டும் சீரமைத்தல் எனபன அத்தியாவசயப்படும் மாற்றங்கள்.

மழைவீழ்ச்சி, மண் ஈரப்பதம் பற்றிய துல்லியமான முன்னறிவிப்புகள் உடனடியாக விவசாயிகளுக்குச் சென்று சேர வேண்டும். ஒரு முன்னறிவிப்பு விவசாயியின் முடிவை மாற்றினால் மட்டுமே அது உண்மையான தகவமைப்பு ஆகும்.

குளங்கள் வறண்டுபோன பிறகு திட்டமிடுவதில் அர்த்தமில்லை. ஆபத்துள்ள மாவட்டங்கள், நீர் பங்கீட்டு முன்னுரிமைகள் மற்றும் மாற்றுப் பயிர்களை பருவமழைக்கு முன்பே தீர்மானிக்க வேண்டும்.

வளிமண்டலவியல், விவசாயம், நீர்ப்பாசனம், போன்ற திணைக்களங்கள் மற்றும் மகாவலி அதிகாரசபை, பேரிடர் மேலாண்மை மையம் ஆகியவை தனித்தனியாக இயங்காமல், தரவுகளை ஒருங்கிணைத்து ஒரே தளத்தில் செயலாற்ற வேண்டும்.

ஒரே பயிரை நம்பியிருக்காமல், உள்நாட்டுச் சூழலுக்கு ஏற்ற பல்வேறு பயிர்கள், வீட்டுத் தோட்டங்கள் மற்றும் கலப்பு விவசாய முறைகளை ஊக்குவிக்க வேண்டும்.

அறுவடைக்குப் பிந்தைய சேமிப்புக் கிடங்குகள், குளிரூட்டப்பட்ட போக்குவரத்து மற்றும் பதப்படுத்தும் வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் உணவு வீணாவதைத் தடுக்கலாம்.

வறட்சி, வெப்பம், வெள்ளம் மற்றும் உப்புத்தன்மையைத் தாங்கி வளரக்கூடிய பயிர் இரகங்களை உடனடியாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.

மேல்நோக்கிய நீர்ப்பிடிப்புப் பகுதிகளைப் பாதுகாத்தல், பாரம்பரிய குள அமைப்புகளைச் சீரமைத்தல் மற்றும் வடிகால் வசதிகளை நவீனப்படுத்துதல் அவசியம்.

இலங்கையால் எல் நினோவையோ, சூறாவளியையோ அல்லது தீவிர மழைவீழ்ச்சியையோ தடுக்க முடியாது. ஆனால், நமது கொள்கைகள் மற்றும் தயார்நிலையின் மூலம் பாதிப்பைக் குறைக்க முடியும்.

இன்றைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் முன்கூட்டிய தயார்நிலையிலும் முதலீடு செய்வதே நாளைய பேரழிவுகளில் இருந்து நம்மைப் பாதுகாக்கும். பேரழிவு நிகழ்ந்த பிறகு ஏற்படும் பயிர் இழப்புகள், உணவு இறக்குமதிச் சுமைகள் மற்றும் நிவாரண நஷ்டஈடுகளுக்காகப் பல மடங்கு நிதியைச் செலவிடுவதை விட, தடுப்பு நடவடிக்கைகளில் முதலீடு செய்யும் முதல் தேர்வே மிகவும் மலிவானதும் பாதுகாப்பானதுமாகும்.

காலநிலை மாற்றத்தின் ஆபத்துகள் ஏற்கனவே தென்படத் தொடங்கியுள்ள நிலையில் உடனடியாகச் செயல்படுவது மட்டுமே நமது உணவுப் பாதுகாப்பையும் எதிர்காலத்தையும் உறுதிசெய்யும்.

ஆறுமுகம் ஸ்ரீஸ்கந்தராஜா…

You might also like

Leave A Reply

Your email address will not be published.