;
Athirady Tamil News

இலங்கையைச் சூழும் ‘சூப்பர் எல் நினோ’ சவால்!

0
உலகளாவிய ரீதியில் தற்பொழுது தீவிரமடைந்து வரும் ‘சுப்பர் எல் நினோ’ (Super El Nino) அல்லது ‘பூதாகர எல்நினோ’ (Monster El Nino) காலநிலை மாற்றம், ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இலங்கையில் இதுவரை கண்டிராத அளவிலான தீவிர காலநிலை மாற்றங்களையும் வெள்ளப் பெருக்குகளையும் ஏற்படுத்தும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட பீடாதிபதியும் புவியியல்துறை பேராசிரியருமான நாகமுத்து பிரதீபராஜா எச்சரித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றில் கருத்துத் தெரிவித்த பேராசிரியர், இலங்கையின் விவசாயம், நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் மக்களின் அன்றாட வாழ்வாதாரங்களில் எல்நினோ ஏற்படுத்தப்போகும் தாக்கம் குறித்து விரிவான புவியியல் ரீதியான பகுப்பாய்வை முன்வைத்தார்.

பசிபிக் சமுத்திரத்தின் நினோ 3.4 காரணமாக பிராந்தியத்தில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை சராசரியை விட +3.6 பாகை செல்சியஸ் வரை அதிகரித்துள்ளது. இது கடந்த 150 ஆண்டுகால வரலாற்றில் பதிவாகாத மிக பெரிய வெப்ப உயர்வாகும்.

“பசுபிக் பிராந்தியத்தில் உருவெடுத்த இந்த வெப்ப அதிகரிப்பு, தற்போது இந்து சமுத்திரப் பிராந்தியத்துக்கும் பரவியுள்ளது. இது உலக அளவில் ஒரு பேரழிவை ஏற்படுத்தக்கூடிய ‘பூதாகர எல்நினோ’ நிலையாக வளர்ந்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபை (UN), உலக உணவு நிறுவனம் (FAO) போன்ற உலகளாவிய அமைப்புகள் இது குறித்து அனைத்து நாடுகளுக்கும் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளன.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

பொதுவாக எல்நினோ காலங்களில் வறட்சியான வானிலை நிலவுவது வழக்கம் என்றாலும், இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் நிலவும் ‘இந்து சமுத்திர இருமுனை’ (Indian Ocean Dipole – IOD) நேர்மறைப் பெறுமானத்தில் இருப்பதால், இம்முறை இலங்கையில் முற்றிலும் மாறுபட்ட மற்றும் குழப்பகரமான காலநிலை உருவாகும் எனப் பேராசிரியர் கணித்துள்ளார்.

ஏழு தாழமுக்கங்கள் தோன்றும் வாய்ப்பு:

ஒக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலப்பகுதியில் குறைந்தபட்சம் 7 வளிமண்டலத் தாழமுக்கங்கள் உருவாகக்கூடும். வழக்கமாக வட, கிழக்கு பருவப்பெயர்ச்சி காலத்தில் வங்காள விரிகுடாவில் மட்டுமே தாழமுக்கங்கள் தோன்றும். ஆனால் இம்முறை அரபிக் கடலிலும் 2 தாழமுக்கங்கள் உருவாக வாய்ப்புள்ளது. இலங்கை வரலாற்றில் இதுவரை இல்லாதவாறு, கிழக்கிலும் மேற்கிலும் ஒரே நேரத்தில் தாழமுக்கங்கள் தோன்றும் அபாயமும் உண்டு.

மழை நாட்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட நாளில் பெய்யும் மழையின் அளவு (Rain Intensity) மிகச் செறிவாக இருக்கும். இதனால் நாடளாவிய ரீதியில், குறிப்பாக கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. வங்காள விரிகுடாவில் தோன்றும் 4 தாழமுக்கங்கள் கிழக்கு மாகாண கரையோரத்தைக் கடந்து செல்லக்கூடும் என்பதால் அப்பகுதி மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும் கூறுகின்றார் பேராசிரியர் பிரதீபராஜா.

அண்மையில் நேபாளத்தில் பனிப்பாறைச் சரிவால் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கு குறித்து ஒரு புவியியலாளராகத் தனது சந்தேகத்தை வெளியிட்ட பேராசிரியர், பனி உருகி நீராக மாறுவதற்கு குறைந்தபட்சம் 36 மணிநேரமாவது தேவைப்படும் என்றும், குறுகிய நேரத்தில் இவ்வளவு பெரிய அழிவு ஏற்பட்டதற்கு எல் நினோவால் உருவான தீவிரமான வெப்ப அலை அல்லது நுட்பியல் சார்ந்த பிற காரணங்கள் இருக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.

இதனை ஒரு பாடமாகக் கொண்டு இலங்கை உடனடியாகச் செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்:

“இலங்கையின் மத்திய மலைநாட்டில் விக்டோரியா, கொத்மலை, ரந்தெனிகல, காசல்ரீ போன்ற மிகப்பெரிய நீர்த்தேக்கங்கள் மிக உயரமான இடங்களில் அமைந்துள்ளன. காலநிலை மாற்றத்தால் திடீரென அதிக மழை பெய்து நீர்மட்டம் அதிகரிக்கும் போது அல்லது அணைகளில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால், கீழ் பகுதியில் வாழும் மக்களுக்கு 5 நிமிடங்களுக்குள் எச்சரிக்கை விடுக்கும் ‘உணர்வி சார்ந்த’ (Sensor-based) தானியங்கி ஒலிச்சமிக்கை (Early Warning Sirens) அமைப்புகளை உடனே நிறுவ வேண்டும்.” என்கிறார்.

உலக உணவு நிறுவனத்தின் (FAO) கணிப்பின்படி எல் நினோவினால் இலங்கையில் 80 சதவீதம் விவசாய விளைச்சல் இழப்பு ஏற்படக் கூடும். இந்த ஆபத்திலிருந்து தப்பிக்க விவசாயிகள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை அவர் தெளிவுபடுத்தினார்.

அனைத்து நிலங்களிலும் செய்கை பண்ணுவதன அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.விளைச்சல் நிச்சயமற்ற தன்மையைக் கொண்டிருப்பதால், ஒட்டுமொத்த உற்பத்தி அளவை அதிகரிக்க அனைத்து வயல் நிலங்களிலும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். விதைப்பு காலம் ஒக்டோபர் 8 – 10 க்குப் பின்னராக அமைய வேண்டும். வெப்பச்சலன மழையை மட்டும் நம்பி அவசரப்பட்டு விதைப்பு செய்யக் கூடாது. ஒக்டோபர் 8-10 ஆம் திகதிகளுக்குப் பின்னரே விதைப்பைத் தொடங்க வேண்டும்.

நெற்செய்கை செய்ய முடியாத நிலங்களில் பயறு, உளுந்து, கௌபி போன்ற உப உணவுப் பயிர்களையோ அல்லது மரக்கறிகளையோ பயிரிட வேண்டும். தீவிர மழையின் போது வெள்ளத்தைக் கட்டுப்படுத்தவும், வறட்சி காலத்தில் நீரைச் சேமிக்கவும் ஒவ்வொரு விவசாயியும் தனது வயலின் ஒரு பகுதியைச் சிறிய குளமாக மாற்றுவது அவசியமாகும்.

வங்காள விரிகுடாவிலும் அரபிக் கடலிலும் அடுத்தடுத்து தாழமுக்கங்கள் உருவாவதால் கடல் பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

“கடல் மேற்பரப்பு வெப்பநிலை 30 பாகை செல்சியஸ் வரை அதிகரிப்பதால் முல்லைத்தீவு, பருத்தித்துறை போன்ற பகுதிகளில் மீன்கள் இறக்கும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. வளிமண்டல மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக, கடற்றொழிலாளர்கள் வானிலை அறிவிப்புகளைத் துல்லியமாகக் கவனித்து, தாழமுக்கக் காலங்களில் கடலுக்குச் செல்வதைத் முற்றாகத் தவிர்க்க வேண்டும்.” என்ற அறிவுரையையும் அவர் விடுத்திருந்தார்.

காலநிலை மாற்றம் என்பது இனி நாம் எதிர்பார்க்காத அனர்த்தங்களை மட்டுமே கொண்டுவரும். அறிவியல்பூர்வமான வானிலை முன்னறிவிப்புகளையும் எச்சரிக்கைகளையும் அலட்சியப்படுத்தாமல், உரிய முன்னாயத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதே எல்நினோவினால் வரவிருக்கும் பாரிய பேரழிவுகளில் இருந்து இலங்கையைப் பாதுகாக்கும் ஒரே வழியாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.