;
Athirady Tamil News

பிளவுபட்ட உலகும் பலதரப்பு ஒத்துழைப்பும்!

0
2026 செப்டம்பர் மாத இறுதியில், உலகத் தலைவர்கள் நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 81ஆவது அமர்வுக்காக ஒன்று கூடியபோது, ஐ.நா. நிறுவனமே கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தது. நீடித்த போர்கள், காலநிலைப் பேரழிவுகள், கடன் சுமைகள் மற்றும் புவிசார் அரசியல் போட்டிகள் ஆகியவை, சாதாரண மக்களுக்கு ஐ.நா. உண்மையில் உதவ முடியுமா என்ற கேள்வியை ஆழமாக ஏற்படுத்தியிருந்தன.

இந்தப் பின்னணியில், இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் நிகழ்த்திய உரை, பலதரப்பு ஒத்துழைப்பை ஆதரிப்பதுடன், அதைப் புதுப்பிக்க வேண்டும் என்ற நடைமுறை வாதத்தையும் உலக மன்றின் முன் வலுவாக முன்வைத்தது.

ஐ.நா பொதுச் சபையின் 81ஆவது அமர்வின் தொனிப்பொருள் “நம்பிக்கையை மீட்டெடுத்தல், மாற்றத்தை நிர்வகித்தல்: அனைவருக்கும் பயன் தரும் ஐக்கிய நாடுகள்” என்பதாகும்.

அமைச்சர் விஜித ஹேரத், உலகளாவிய பொது நிறுவனங்கள் மீதான நம்பிக்கை வீழ்ச்சியடைந்து வருவதை வெளிப்படையாக ஏற்றுக்கொண்டு தனது உரையை ஆரம்பித்தார்.

தீர்க்கப்படாத மோதல்கள், மனிதாபிமானத் தேவைகளை விஞ்சும் வளங்களின் பற்றாக்குறை, அடிக்கடி ஏற்படும் காலநிலைப் பேரழிவுகள், நாளுக்கு நாள் விரிவடையும் ஏற்றத்தாழ்வுகள், மற்றும் ஆட்சியை விட வேகமாக முன்னேறும் தொழில்நுட்பம் ஆகியவை, ஐ.நா. மற்றும் இதேபோன்ற சர்வதேச அமைப்புகள், தாங்கள் சேவை செய்ய வேண்டிய மக்களிடமிருந்து வெகுவாக விலகி இருப்பதாக உணர வைத்துள்ளன என்று அவர் சுட்டிக்காட்டினார்.

ஒரு நாடாக இலங்கையின் அனுபவங்களையே அமைச்சர் ஐ.நா மன்றில் எடுத்துரைத்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன், பொருளாதார வீழ்ச்சி மற்றும் நீண்டகால அரசியல் தோல்விகளுக்குப் பிறகு, அனைத்து சமூகங்களையும் சேர்ந்த மக்கள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அரசாங்கத்திற்கு உள்நாட்டில் நம்பிக்கையை மீட்டெடுக்கும் உறுதியான ஆணையை வழங்கினர்.

இந்த உள்நாட்டு முயற்சி செயல்பாட்டின் மூலமே நனவாக்கப்பட்டு வருகிறது என்பதை அமைச்சர் அங்கு விபரித்திருந்தார்.

உலக வங்கியால் மேல்-நடுத்தர வருமானப் பொருளாதாரமாக மீள் வகைப்படுத்தப்படும் அளவுக்குப் பொருளாதாரம் மிகக் குறுகிய காலத்தில் நிலைபெற்றுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டினார்

இலவச சுகாதாரம் மற்றும் கல்வி மீது புதுப்பிக்கப்பட்ட கவனம் செலுத்தப்படுகிறது.

ஊழல் எதிர்ப்பு முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன, முக்கிய குற்றவியல் வலையமைப்புகளை உடைக்கத் தொடங்கிய தேசிய போதைப்பொருள் எதிர்ப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது எனபதை அவர் விபரிக்கத் தவறவில்லை.

தகர்க்கப்பட்ட சமூக ஒப்பந்தங்களை இலங்கை நன்கு புரிந்துகொள்கிறது என்றும், அவற்றைச் சீரமைத்துச் சரிசெய்யும் முயற்சியில் உறுதியோடு செயல்படுகிறது என்பதே இலங்கை அன்றைய தினம் வழங்கிய செய்தியாகும்.

வெளியுறவு அமைச்சரின் அன்றைய உரையில் காலநிலை மாற்றம் மிக முக்கிய இடத்தைப் பிடித்தது. இலங்கையைத் தாக்கிய மிக மோசமான சமீபத்திய பேரழிவுகளில் ஒன்றான தித்வா சூறாவளி, நூற்றுக்கணக்கான உயிர்களைப் பறித்து, இரு மில்லியனுக்கும் அதிகமான மக்களைப் பாதித்து, வாழ்வாதாரங்களையும் உட்கட்டமைப்பையும் அழித்தது.

அமைச்சர் இலங்கையின் இந்தத் துன்பத்தை நேபாளம் மற்றும் சீனாவின் சில பகுதிகளைப் பாதித்த இமயமலை வெள்ளங்களுடன் இணைத்துப் பேசினார். இது அனுதாபம் தேடும் வகையில் அல்லாமல் சமத்துவமின்மையைச் சுட்டிக்காட்டும் ஆதங்கமாகவே வௌிப்பட்டது.

உலகளாவிய கார்பன் உமிழ்வுகளுக்கு மிகக் குறைவாகவே பங்களித்த சிறிய நாடுகள், தொடர்ந்து காலநிலை மாற்றத்தின் மிகக் கடுமையான விலைகளைச் செலுத்தி வருகின்றன. ஆதலால்

காலநிலை மாற்றத்துக்கான நீதி இனி மேலும் தள்ளிப்போடப்பட முடியாது. என்பதை அமைச்சர் விஜித ஹேரத் சுட்டிக்காட்டினார்.

இலங்கை 2030க்குள் 70 சதவீத புதுப்பிக்கத்தக்க ஆற்றலையும், 2050க்குள் கார்பன் நடுநிலையையும் அடைவதை இலக்காகக் கொண்டுள்ளது. ஆனால் சர்வதேச நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவு இல்லாமல் தேசியளவிலான முயற்சி மட்டும் போதாது என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

உலகளாவிய போர்கள் மற்றும் மோதல்களை பற்றிப் பேசிய அமைச்சர் இலங்கை தனது மூன்று தசாப்த கால மோதலின் காயங்களை இன்னும் சுமந்து வருகிறது. ஆயுதங்கள் அமைதியான 17 ஆண்டுகளுக்குப் பிறகும், அரசாங்கம் நல்லிணக்கத்திற்கு முழுமையாக உறுதியளித்துள்ளது.

இனவெறி மற்றும் மதத் தீவிரவாதத்தை முற்றிலும் நிராகரித்து, இனங்களுக்கிடையிலான பிணக்குகளைத் தீர்க்கக்கூடிய நிறுவனங்களை வலுப்படுத்தி வருகிறது என்றார்.

அந்த உள்நாட்டு வரலாறே, வெளிநாட்டு நெருக்கடிகளுக்கான இலங்கையின் அணுகுமுறையையும் வடிவமைத்துள்ளது என்பதனையும் அவர் சுட்டிக்காட்டத் தவறவில்லை.

2026 மார்ச்சில், குறைந்த வளங்களுடனும், கடுமையான புவிசார் அரசியல் நிலைமைகளுக்கு மத்தியிலும், இலங்கை தனது கடல் எல்லைக்கு அருகே மோதலில் ஈடுபட்ட ஒரு தரப்பின் ஆபத்தில் இருந்த கப்பலில் இருந்து நூற்றுக்கணக்கான மாலுமிகளைக் காப்பாற்றியது.

இந்த முடிவு சர்வதேச சட்டத்தையும், அரசியல் முடிவுகளையும் விட மனித உயிரை முன்னிலைப்படுத்தும் எளிய கொள்கையையும் அடிப்படையாகக் கொண்டது என்று ஹேரத் கூறினார். ஜனாதிபதி அநுர திசாநாயக்கவின் வார்த்தைகளை மீண்டும் மேற்கோள் காட்டி, மனிதநேயத்தைப் பாதுகாக்க இலங்கை ஒருபோதும் தயங்காது என உறுதியளித்தார்.

1980களில் பாலஸ்தீனத்தை ஒரு தனி நாடாக முதன்முதலில் அங்கீகரித்த நாடுகளில் இலங்கையும் ஒன்று. 1967 ஆம் ஆண்டுக்கு முந்தைய எல்லைகளுக்குள் அமைதியாகவும், இஸ்ரேலுடன் அருகருகே வாழக்கூடிய ஒரு சுதந்திரமான மற்றும் இறையாண்மையுள்ள பாலஸ்தீன நாட்டிற்காக சர்வதேச சமூகத்துடன் இணைந்து இலங்கையும் குரல் கொடுக்கிறது என்றார். உடனடி போர்நிறுத்தம் குறித்த பாதுகாப்புச் சபைத் தீர்மானத்தை வரவேற்று, தடையற்ற மனிதாபிமான அணுகலைக் கோரி, அவசர மீட்பு மற்றும் புனரமைப்பை வலியுறுத்தியது எனபதை நினைவுபடுத்திய அமைச்சர். சர்வதேச மனிதாபிமானச் சட்டம் அனைத்துத் தரப்பினரையும் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.அதேவேளை இலங்கையின் உலகளாவிய பங்களிப்புகளை அமைச்சர் விரிவாகப் பட்டியலிட்டார்:

1957முதல் 21,000க்கும் அதிகமான இலங்கைப் பணியாளர்கள் ஐ.நா. அமைதி காக்கும் பணிகளில் பங்கேற்றுள்ளனர் என்பதையும் விபரித்தார்.

இலங்கை நீண்டகாலமாக, அணுவாயுத ஒழிப்பு மற்றும் இந்தியப் பெருங்கடல் அமைதி வலயத்தை ஆதரித்து வருகிறது. ஐ.நா. கடல் சட்ட ஒப்பந்தத்தின் பங்குதாரராக இருந்து, தேசிய எல்லைகளுக்கு அப்பால் உள்ள கடல் உயிர்ப்பன்முகத்தன்மை குறித்த ஒப்பந்தத்தின் நிறுவன உறுப்பினராகவும் உள்ளது என்றார். அதேவேளை ஊழல் எதிர்ப்பு அமைப்புகள் வலுப்படுத்தப்பட்டு தேசிய ஒருமைப்பாட்டுக்கான முயற்சிகள் தொடர்வதையும் விளக்கினார்.

மேலும், இலங்கை சர்வதேச கட்டமைப்புடன் இணைந்த நெறிமுறை சார்ந்த AI (Ethical AI) வழிகாட்டுதல்களையும் உருவாக்கி வருகிறது. வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மனிதநேயத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்றும், சர்வதேச மனிதாபிமானச் சட்டம் உட்பட அனைத்து சட்டங்களுக்கும் இணக்கமாக இருக்க வேண்டும் என்றும் அவரது உரையில் வலியுறுத்தப்பட்டது.

உலகளாவிய மாற்றத்தை நிர்வகிப்பது என்பது சில செல்வாக்குமிக்க நாடுகள் மட்டும் மாற்றத்தை வடிவமைக்க, ஏனைய நாடுகள் அதன் விளைவுகளை மட்டும் தாங்க வேண்டும் என்பதல்ல. மாறாக வடக்கு-தெற்கு இடைவெளிகள், தொழில்நுட்பத்தை உருவாக்குபவர்கள் மற்றும் பெறுபவர்கள் இடையேயான இடைவெளிகள், உறுதியானவர்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்கள் இடையேயான இடைவெளிகள் ஆகியவை குறுக வேண்டுமே தவிர விரிவடையக் கூடாது என்பதை அமைச்சர் சுட்டிக்காட்டினார். ஐக்கிய நாடுகள் சபை எல்லாப் பிரச்சினைகளையும் தீர்த்துவிடும் என்று இலங்கை எதிர்பார்க்கவில்லை. ஆனால் காலநிலை, தொற்றுநோய்கள், கடன், அணு ஆபத்து, போரில் பொதுமக்களைப் பாதுகாத்தல் போன்ற முக்கிய பிரச்சினைகளை எந்தவொரு நாடும் தனியாகத் தீர்க்க முடியாது என்பதால் ஐ.நா.வின் தேவை அவசியம் என வலியுறுத்துகிறது என்றார்.

பல ஆண்டுகளாக ஐ.நா அமைப்பு மறுசீரமைக்கப்படுவது பற்றிய கோரிக்கை விடுக்கப்படுகின்றது. ஐ.நா அமைப்பை மாற்றி அமைக்கக் கேட்பது அதை பலவீனப்படுத்துவதற்காக அல்ல; மாறாக, அது தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட சீர்திருத்தம் மிகவும் அவசியம் என்பதாகவே பல்வேறு நாடுகள் கூறுகின்றன.

இலங்கை போன்ற சிறிய மற்றும் வளரும் நாடுகளின் குரல்களைக் கேட்கும், அனைவருக்கும் சம உரிமை வழங்கும் ஒரு ஐ.நா சபை உருவாக்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்வார்கள்.

பெரிய நாடுகள் தங்களின் ‘வீட்டோ’ (Veto) அதிகாரத்தைப் பயன்படுத்தி முடிவுகளைத் தடுப்பது. விதிகளை சில நாடுகளுக்கு மட்டும் அமுல்படுத்துவது. போன்ற குறைபாடுகள் இருந்தாலும், ஐ.நா என்ற அமைப்பையே கைவிட்டுவிடக் கூடாது என்பதில் இலங்கை உறுதியாக உள்ளது.

பெரிய வல்லரசு நாடுகள் ஐ.நா-வைப் புறக்கணித்துவிட்டு, தங்களுக்கு சாதகமான அமைப்புகளையும் ஒருதலைப்பட்ச முடிவுகளையும் எடுக்க முயல்கின்றன. ஆனால், குறைபாடுகள் உள்ள ஒரு சர்வதேச அமைப்பைக் கைவிட்டுவிட்டால், உலகம் மிகவும் ஆபத்தான மற்றும் துண்டாடப்பட்ட நிலைக்குத் தள்ளப்படும் என்பதே இலங்கையின் நிலைப்பாடாக உள்ளது.

ஐ.நா சபையில் குறைபாடுகள் இருந்தாலும், வல்லரசு நாடுகளின் அதிகார அரசியலை விட ஐ.நா அமைப்பே சிறிய நாடுகளுக்குப் பாதுகாப்பானது. எனவே, அதைச் சீரமைத்துத் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். என்பதையே இலங்கை போன்ற நாடுகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

போர்கள், பொருளாதாரச் சரிவு, இயற்கைப் பேரழிவுகள் என அனைத்தையும் சந்தித்த இலங்கை போன்ற ஒரு சிறிய நாட்டிற்கு, சர்வதேச அமைப்புகளின் ஆதரவு மிகவும் முக்கியமானது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.