நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! பயங்கரவாதத் தாக்குதலா? அமீரக அரசு விசாரணை!
இஸ்ரேல் சென்ற துபை விமானத்தில் நடைபெற்ற கத்திக்குத்து சம்பவம் பயங்கரவாதத் தாக்குதலா என்பது குறித்து ஐக்கிய அரபு அமீரக அரசு விசாரணை மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபை விமான நிலையத்தில் இருந்து இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவிற்கு நேற்று முன்தினம் (செப். 30) 174 பயணிகளுடன் சென்ற விமானம் நடுவானில் பறந்தபோது அதை இயக்கிய இந்திய விமானி ஸ்மித் மச்சாரை சக விமானி கத்தியால் குத்தித் தாக்கினார்.
அவரை எதிர்த்து இந்திய விமானி சண்டையிட்டு விமானி அறையின் கதவைத் திறந்ததால், வேறு இரண்டு விமானிகள் அந்த விமானத்தைத் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து சௌதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்தில் பத்திரமாகத் தரையிறக்கினர்.
இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தாக்குதலுக்குள்ளான இந்திய விமானிக்கு சௌதி அரேபியாவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்தச் சம்பவம் பயங்கரவாதத் தாக்குதலுக்கான முயற்சி என இஸ்ரேல் அரசு கூறியுள்ளது.
இந்த நிலையில், இச்சம்பவத்தில் பயங்கரவாத நடவடிக்கைகளோ அல்லது திட்டங்களோ இருக்கிறதா என்பதைக் கண்டறிய விசாரணை நடைபெற்று வருவதாக ஐக்கிய அரபு அமீரக அரசு நேற்று (அக். 01) அறிவித்துள்ளது.
முன்னதாக, தாக்குதலை எதிர்த்து சண்டையிட்டு நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானியை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் ஹீரோ எனக் குறிப்பிட்டு பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.