யாழ். பல்கலைக்கழகப் பொதுப் பட்டமளிப்பு விழா 06 ஆம் திகதி ஆரம்பம்: மூன்று நாள்கள் ஒன்பது அமர்வுகளில், மூவாயிரத்து 411 பேருக்குப் பட்டங்கள்!
யாழ். பல்கலைக்கழகப் பொதுப் பட்டமளிப்பு விழா 06 ஆம் திகதி ஆரம்பம்:
மூன்று நாள்கள் ஒன்பது அமர்வுகளில், மூவாயிரத்து 411 பேருக்குப் பட்டங்கள்!
314 பட்டப்பின் தகைமைப் பட்டங்கள்,
2 ஆயிரத்து 680 உள்வாரிப் பட்டங்கள்,
417 வெளிவாரி – தொலைக்கல்விப் பட்டங்கள்,
100 தங்கப்பதக்கங்கள், 63 பரிசில்கள் மற்றும் 15 புலமைப்பரிசில்கள்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 41ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் 6 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் 8ஆம் திகதி வியாழக்கிழமை வரையான மூன்று நாள்களும், ஒன்பது அமர்வுகளாகப் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 5ஆவது வேந்தர் தகைசால் பேராசிரியர் இராஜரட்ணம் குமாரவடிவேல் பட்டமளிப்பு விழாவைத் தலைமை தாங்கி, பட்டதாரிகளுக்கான பட்டங்களையும், தகைமைச் சான்றிதழ்களையும், தங்கப் பதக்கங்களையும், பரிசில்களையும், புலமைப் பரிசில்களையும் வழங்கிக் கௌரவிப்பார்.
இந்தப் பட்டமளிப்பு விழாவில், உயர் பட்டப் படிப்புகள் பீடம், கலைப்பீடம், விஞ்ஞானபீடம், விவசாயபீடம், முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடம், தொழில்நுட்பப் பீடம், பொறியியல் பீடம், மருத்துவ பீடம், இந்துக் கற்கைள் பீடம், சித்த மருத்துவ பீடம், சேர். பொன்னம்பலம் இராமநாதன் காண்பிய ஆற்றுகைக் கலைகள் பீடம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னைய வவுனியா வளாகத்தைச் சேர்ந்த வியாபாரக் கற்கைகள் பீடம், பிரயோக விஞ்ஞான பீடம் மற்றும் தொழில் நுட்பக் கற்கைகள் பீடம் ஆகிய 14 பீடங்களையும் சேர்ந்த பட்டதாரிகளுக்கும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில், திறந்த மற்றும் தொலைக்கல்வி முறைமை மூலம் கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்த பட்டதாரிகளுக்கும் பட்டங்களும், தகைமைச் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.
இந்தப் பட்டமளிப்பு விழாவில் 314 பட்டப்பின் தகைமை பெற்றவர்களுக்கும், 2 ஆயிரத்து 680 உள்வாரி மாணவர்களுக்கும், 417 வெளிவாரி மாணவர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்படவிருப்பதுடன், 10 உயர் தகைமை மற்றும் தகைமைச் சான்றிதழ்களும் 24 தொழில்சார் ஆங்கிலத்தில் தகமைச் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.
உயர் பட்டப்படிப்புகள் பீடத்தைச் சேர்ந்த 314 மாணவர்கள் உயர் பட்டத் தகைமைகளைப் பெறவுள்ளனர். அவர்களில் கலாநிதிப் பட்டத்தை நால்வரும், முதுமெய்யியல்மாணிப் பட்டத்தை 8 பேரும், 32 மாணவர்கள் பண்பாட்டுக் கற்கைகளில் முதுமாணிப் பட்டத்தையும், 9 மாணவர்கள் சுற்றுச்சூழல் முகாமைத்துவத்தில் முதுவிஞ்ஞானமாணிப் பட்டத்தையும், 35 மாணவர்கள் சைவசித்தாந்தத்தில் முதுமாணிப் பட்டத்தையும், கல்வியில் முதுமாணிப் பட்டத்தை 193 மாணவர்களும், தூய சக்தித் தொழில்நுட்பங்களில் முதுவிஞ்ஞானமாணிப் பட்டத்தை மூவரும், தூய சக்தித் தொழில்நுட்பங்களில் முதுமாணிப் பட்டத்தை ஒருவரும், வியாபார நிர்வாகத்தில் முது மாணிப்பட்டத்தை 29பேரும் பெறவிருக்கின்றனர்.
உள்வாரி மாணவர்களாக, மருத்துவ பீடத்தைச் சேர்ந்த 149 மாணவர்கள் மருத்துவமாணி சத்திரசிகிச்சைமாணிப் பட்டத்தையும், விவசாய பீடத்தைச் சேர்ந்த ஒருவர் விவசாயத்தில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தையும் பெறவுள்ளனர்.
அத்துடன், முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடத்தில் இருந்து சிறப்பு வியாபார நிர்வாகமாணிப் பட்டத்தை 360 மாணவர்களும், சிறப்பு வணிகமாணிப் பட்டத்தை 99 மாணவர்களும் பெறவிருக்கின்றனர்.
இவர்களுடன், கலைப்பீடத்தில் இருந்து சிறப்புக் கலைமாணிப் பட்டத்தை 356 மாணவர்களும், பொதுக் கலைமாணிப் பட்டத்தை 150 மாணவர்களும், மொழிபெயர்ப்புக் கற்கைகளில் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தை 32 மாணவர்களும் பெறவிருக்கின்றனர்.
மேலும், சேர். பொன்னம்பலம் இராமநாதன் காண்பிய ஆற்றுகைக் கலைகள் பீடத்தைச் சேர்ந்த 144 மாணவர்கள் நடனம், இசை மற்றும் சித்திரமும் வடிவமைப்பும் துறைகளில் நுண்கலைமாணி சிறப்புப் பட்டத்தை பெறவிருக்கின்றனர்.
இவர்களுடன், விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த 109 பேர் சிறப்பு விஞ்ஞான மாணிப் பட்டத்தையும், 20 பேர் பிரயோக விஞ்ஞானத்தில் சிறப்பு விஞ்ஞான மாணிப் பட்டத்தையும், 100 பேர் விஞ்ஞானமாணிப் (பொது) பட்டத்தையும், 33 பேர் கணினி விஞ்ஞானத்தில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், 34 பேர் கணினி விஞ்ஞானத்தில் விஞ்ஞான மாணிப் பட்டத்தையும்பெறவுள்ளனர்.
அத்துடன் முதன்முறையாக இந்துக்கற்கைகள் பீடத்தில் இருந்து 22 மாணவர்கள் இந்து நாகரீகத்தில் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தையும், 23 பேர் சைவசித்தாந்தத்தில் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தையும், சமஸ்கிருதத்தில் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தை ஒருவரும் பெறவுள்ளனர்.
மேலும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னைய வவுனியா வளாகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த 51 மாணவர்கள் தகவல் தொழில்நுட்பத்தில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், 25 மாணவர்கள் கணினி விஞ்ஞானத்தில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், 18 மாணவர்கள் தகவல் தொழில்நுட்பத்தில் விஞ்ஞான மாணிப் பட்டத்தையும், 44 மாணவர்கள் சுற்றுச் சூழல் விஞ்ஞானத்தில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், 20 மாணவர்கள் பிரயோக கணிதம் மற்றும் கணிப்பிடலில் விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், மூவர் சூழல் விஞ்ஞானத்தில் விஞ்ஞான மாணிப் பட்டத்தையும் பெறவிருக்கின்றனர்.
வியாபாரக் கற்கைகள் பீடத்தைச் சேர்ந்த 58 மாணவர்கள் கணக்கியலிலும் நிதியியலிலும் சிறப்பு வியாபார முகாமைத்துவமாணிப் பட்டத்தையும், 42 மாணவர்கள் வியாபாரப ; பொருளியலில் சிறப்பு வியாபார முகாமைத்துவமாணிப் பட்டத்தையும், 39 மாணவர்கள் மனிதவள முகாமைத்துவத்தில் சிறப்பு வியாபார முகாமைத்துவமாணிப் பட்டத்தையும்,
29 மாணவர்கள் சந்தைப்படுத்தல் முகாமைத்துவத்தில் சிறப்பு வியாபார முகாமைத்துவமாணிப் பட்டத்தையும், 6 மாணவர்கள் வியாபார முகாமைத்துவ மாணி (பொது)ப் பட்டத்தையும், 84 மாணவர்கள் செயற்றிட்ட முகாமைத்துவத்தில் சிறப்பு வியாபார முகாமைத்துவமாணிப் பட்டத்தையும், 3 மாணவர்கள் செயற்றிட்ட முகாமைத்துவத்தில் வியாபார முகாமைத்துவ மாணிப் பட்டத்தையும் பெறவிருக்கின்றனர்.
மேலும், தொழில்நுட்பக் கற்கைகள் பீடத்தில் இருந்து 146 மாணவர்கள் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் இளமாணி சிறப்புப் பட்டத்தையும் பெற இருக்கின்றனர்.
இவர்களுடன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில் திறந்த மற்றும் தொலைதூரக் கற்கைகள் முறைமை மூலம் பட்டக் கற்கைகளைப் பூர்த்தி செய்த 91 மாணவர்கள் சிறப்பு வணிகமாணிப் பட்டத்தையும், 111 மாணவர்கள் வியாபார முகாமைத்துவ மாணிப் பட்டத்தையும், 215 பேர் கலைமாணி பொதுப் பட்டத்தையும் பெறவுள்ளனர்.
மேலும், 8 மாணவர்கள் ஊடகக் கற்கையில் உயர் தகைமைச் சான்றிதழ்களையும், ஒருவர் வியாபார முகாமைத்துவத்தில் உயர் தகைமைச் சான்றிதழையும், 24 மாணவர்கள் தொழில்சார் ஆங்கிலத்தில் தகைமைச் சான்றிதழ்களையும், ஒருவர் வியாபார முகாமைத்துவத்தில் தகமைச் சான்றிதழையும் பெற்றுக் கொள்வது இந்தப் பட்டமளிப்பு விழாவில் உறுதிப் படுத்தப்படும்.
மேலும், இப்பட்டமளிப்பு விழாவில் சகல பட்டக் கற்கை நெறிகளுக்குமாக 100 தங்கப்பதக்கங்களும், 63 பரிசில்களும், 15 புலமைப்பரிசில்களும் வழங்கப்படவிருக்கின்றன.
ஒவ்வொரு வருடமும் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் சீர்பெறும் உயர் விருதான பேராசிரியர் அழகையா துரைராசா தங்கப் பதக்கங்கள் இவ்வருடமும் வழங்கப்படவுள்ளன.
2022ஆம் கல்வியாண்டுக்குரிய பல்கலைக்கழக மட்டத்திலான தங்கப்பதக்கத்தை விஞ்ஞான பீடத்தில் இருந்து ஒருவரும், பீடமட்டத்தில் சேர். பொன்னம்பலம் இராமநாதன் காண்பிய ஆற்றுகைக் கலைகள் பீடத்தில் இருந்து ஒருவரும், 2023ஆம் கல்வியாண்டுக்குரிய தங்கப்பதக்கத்தை பீடமட்டத்தில் இருந்து மருத்துவபீடம், சித்தமருத்துவ பீடம், தொழில் நுட்ப பீடம், கலைப்பீடம் மற்றும் விஞ்ஞான பீடங்களில் இருந்து தலா ஓவ்வொருவரும் பெறுவதுடன்,
2024ஆம் கல்வியாண்டுக்குரிய தங்கப்பதக்கத்தை பீடமட்டத்தில் முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடத்தில் இருந்து ஒருவரும், பிரயோக விஞ்ஞான பீடத்தில் இருந்து ஒருவரும் பெறுகின்றனர்.
மேலும், 2023ஆம் கல்வியாண்டுக்குரிய தூய மற்றும் பிரயோக விஞ்ஞானத்தில் சிறந்த செயலாற்றுகைக்கான பேராசிரியர் கந்தையா குணரட்ணம் தங்கப் பதக்கத்தைப் பல்கலைக்கழக மட்டத்தில் இருந்து விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த ஒருவர் பெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்தப் பட்டமளிப்பு விழாவுக்கு மேலும் சிறப்புச் சேர்க்கும் நிகழ்வுகளாக அமையும ; பட்டமளிப்புக்கு பின்னரான கலை கலாசார நிகழ்வுகள் 10.10.2026 அன்று பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் மாலை 3.00 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெறும்.
மேலும், மதிப்புறு நினைவுப் பேருரைகளான சேர். பொன் இராமநாதன் நினைவுப் பேருரை ஐப்பசி மாதம் 15ம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கும், சீமாட்டி லீலாவதி இராமநாதன் நினைவுப் பேருரை அன்றைய தினம் பிற்பகல் 4.00 மணிக்கும் கைலாசபதி கலையரங்கில் இடம்பெறவிருக்கின்றன.
சேர். பொன் இராமநாதன் நினைவுப் பேருரையை யாழ். பல்கலைக்கழக கலை வரலாற்றுத்துறையின் இருக்கைப் பேராசிரியர் தா.சனாதனனும், சீமாட்டி லீலாவதி இராமநாதன் நினைவுப் பேருரையை யாழ். பல்கலைக்கழக சமூகவியல் துறையைச் சேர்ந்த சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி (திருமதி) ஐ.சு.பகீரதியும் நிகழ்த்தவிருக்கின்றனர்.