;
Athirady Tamil News

சுவிஸ் பேர்ண் முருகன் கோயில் நிர்வாகத் தெரிவில் நடந்தது என்ன? நடக்கப் போவது என்ன?? (படங்கள்)

0

சுவிஸ் பேர்ண் முருகன் கோயில் நிர்வாகத் தெரிவில் நடந்தது என்ன? நடக்கப் போவது என்ன?? (படங்கள்)

சுவிஸ் பேர்ண் முருகன் கோயில் நிர்வாகத்தில் பல குளறுபடிகள், கணக்கு வழக்கு பிரச்சினைகளை அடுத்து, புதிய நிர்வாகத்தை தெரிவு செய்வதுக்காக சிலதடவைகள் மேற்கொள்ளப்பட்ட முயற்சி கைகூடாமல், சுவிஸ் நீதிமன்றத்தை இருதரப்பும் மாறிமாறி நாடி வழக்குத் தொடர்ந்ததுக்கு அமைய, நீதிமன்றக் கட்டளையின்படி சட்டத்தரணிகளின் முன்னிலையில் நிர்வாகத் தெரிவு நடைபெற்றது. இதன் மூலம் “நிர்வாகக் குளறுபடி, கணக்குவழக்கு கோளாறு” போன்றவற்றில் பலராலும் குற்றம் சாட்டப்பட்ட பழைய நிர்வாக உறுப்பினர்கள் அன்றில் அவர்களால் முன்மொழியப்பட்டவர்களே மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து இக்கூட்டத்தில் கலந்து கொண்ட “அதிரடி” இணைய நிர்வாக முக்கியஸ்தரிடம் இக்கூட்டம் குறித்துக் கருத்துக் கேட்ட போது, “இரு தரப்பாக நடந்த மோதல் அன்றில் இரு ஊராகப் பிரிந்து செயல்பட்டது கண்கூடாகத் தெரிந்தது. இது அக்கோயிலின் எதிர்கால செயல்பாட்டுக்கு முரண்பாடாகவே அமையும். இருபிரிவுமே பலருக்கு தாமே அங்கத்தவப் பணம் செலுத்தி அழைத்து வந்ததாக பலரும் குற்றம் சாட்டிய போதிலும், இப்போது நிர்வாகத்துக்கு தெரிவு செய்யப்பட்டவரை சார்ந்த ஒருவர் மண்டப வாயிலில் நின்று “நாம் எல்லோருக்கும் காசு காட்டியுள்ளோம், அத்துண்டு எம்மிடம் உள்ளது நான் மண்டப வாயிலில் தான் நிக்கிறேன், நீங்கள் எல்லோரையும் அழைத்து வாருங்கள்” என்று சொன்னதை நாம் நேரடியாகப் பார்த்ததுடன் யாருக்கு வாக்களிக்க வேண்டுமென விபரமாக அவர்கள் விநியோகித்த துண்டும் எமக்கு கிடைக்கப் பெற்றது. (கீழே இணைத்துள்ளோம்)

1984, 85 ஆம் ஆண்டு காலப் பகுதியில் சுவிஸில் இரு வேறு ஊர்களுக்கிடையில் ஏற்பட்ட கருத்து மோதல், வன்முறையில் வந்து சட்ட ரீதியாகவும், அப்போது சுவிஸில் செயல்பட்ட நான்கு தமிழ் அமைப்புக்களினாலும் முடிவுக்கு வந்ததை போன்றே இதுவும் எதிர்காலத்தில் அமைந்தாலும் ஆச்சரியமில்லை என்பதுடன், இப்போது அக்கோயிலை ஆரம்பித்தவர்கள் மற்றும் அக்கோயிலின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர்கள் அனைவரும் நிராகரிக்கப்பட்டு உள்ளமை அக்கோயிலின் வளர்ச்சிக்கே பாதகமாக அமையும் என்பதுடன், இதனை இப்போது தெரிவு செய்யப்பட்டுள்ள நிர்வாகத்தினர் உணர்ந்து அனைவரையும் இணைத்து செயல்பட முன்வர வேண்டும்.

அத்துடன் இந்த நிர்வாகத் தெரிவின் போது, பல குளறுபடிகள் நடந்ததே கண்கூடாகத் தெரிந்தது. இருதரப்பும் தமக்குத் தேவையானவர்களை “உறவுகள், நண்பர்கள்” என அழைத்து வந்தது கண்கூடாக அனைவரும் அறிந்தது. அதிலும் நிர்வாகத்தில் இருந்தவர்களில் முக்கியமானவர்களில் ஒருவர் “நாம் உங்கள் எல்லோருக்கும் அங்கத்துவப் பணம் கட்டியுள்ளோம், நீங்கள் அனைவரையும் அழைத்து வாருங்கள், நான் காசு கட்டிய துண்டுடன் வாசலில் நிக்கிறேன்” என கூறியது எமது பதிவில் வந்தது,

அது மட்டுமல்ல தற்போதைய நிர்வாகத்தினருக்கு (இவர்களே முன்னைய நிர்வாகமும்) ஆதரவாக இருநூறுக்கு மேற்பட்டோர் இருந்ததும், இந்த நிர்வாகம் பிழை, கணக்குவழக்கு பிழை என்று குற்றம் சாட்டியவர்கள் தரப்பில் சுமார் நூறு பேர் வரையிலும் இருந்தது கண்கூடு. அதிலும் பத்து வயது பிள்ளைகள் முதல் சந்தாப் பணமாக 150 சுவிஸ் பிராங் கட்டினால் வாக்களிக்கும் நிலைமையையும், அப்படி வாக்களிக்கும் பிள்ளைகளுக்கு பக்கத்தில் இருந்தவர்களே இலக்கங்களை சொல்லிக் கொடுத்ததையும், அப்பிள்ளைகள் பக்கத்தில் இருந்த பெற்றோர், உறவுகளின் சொல்லக் கேட்டு வாக்களித்ததும் அதன் பின்னர் தமது கைத்தொலைபேசியில் மூழ்கிக் கிடந்ததும் கண்கூடான நிகழ்வு.

எது எப்படியிருப்பினும் தற்போது தெரிவு செய்யப்பட்ட நிர்வாகத்தினர் இன்னும் ஒரு வருடம் தமது ஆடசி தானே என்று எவரையும் புறம்தள்ளாமல், எல்லோரையும் அழைத்து ஒரேமேசையில் இருந்து கதைத்து ஒன்றுபட்டு செயல்பட்டாலே யாவும் நல்ல நிலைமைக்கு வரும், அன்றில் தற்போது இப்புதிய நிர்வாகத்தை தெரிவு செய்வதுக்கு பல்லாயிரம் சுவிஸ் பிராங்குகளை “ஒற்றுமையின்றி” செலவு செய்தது போல் மீண்டும் செலவு செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும்” என்றார்.

****************************************************

சுவிஸ் பேர்ண் முருகன் கோயில் நிர்வாகத் தெரிவு குறித்து “அதிரடி” இணையத்துக்கு திரு.தில்லையம்பலம் தர்மகுலசிங்கம் (வாஸேன் தவம்) அவர்கள் அனுப்பி வைத்த அறிக்கை..

10.12.2023 ஞாயிறு அன்று நீதிமன்ற தீர்ப்புக்கு அமைய Domenig & Partner Rechtsanwälte AG நிறுவனத்தைச் சேர்ந்த Dr. iur. Benjamin Domenig M.A. HSG in Law and Economics Rechtsanwalt தலைமையில் BernExpo AG (Plenarsaal) Minger stresse 6, 3014 Bern என்ற பெருமண்டபத்தில் 2024 ஆண்டுக்குரிய ஆலய நிர்வாகம் தெரியும் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டம் நடைபெற்ற முறை பற்றி என் கருத்தை உங்கள் முன் வைக்கின்றேன்.

முதற்கண் முருகன் ஆலய நிர்வாகத்திற்கு தெரிவான அனைவருக்கும் வாழ்த்துகள்!

15.00 மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய கூட்டம் சுமார் ஒன்றரை மணித்தியாலம் தாமதித்து 16.30 அளவில் ஆரம்பமாகியது.

நீதிமன்றத் தீர்ப்புக்கு அமைய சரியான நேரத்தில் ஆரம்பிக்க வேண்டிய கூட்டம் தாமதித்து ஆரம்பமாகிய காரணங்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவை.

1. பணம் கட்டியதில் ஏற்பட்ட தாமதம்.
2. வாக்களிக்கும் இயந்திரம் போதாமை.

இரண்டு காரணங்களும் ஏற்புடையவை அல்ல.

சுமார் 350 அங்கத்தவர்கள் பங்கேற்ற கூட்டம் தாமதித்ததால் 350 x 1.5 : 525 Stunden மணித்தியாலங்களுக்கு மேல் இழப்பு ஏற்பட்டது. இது அங்கு கூடிய மக்களுக்கு எவ்வளவு மனவுளைச்சலும், வேதனையும் தெரியுமா?

Schchwalter Domenig & Partner Rechtsanwälte AG நிறுவனத்தின் நிர்வாகத் திறமையின்மையே காரணம் என உறுதி படத் தெரிவிக்கின்றேன். அல்லது வேறு காரணங்கள் இருப்பதோ தெரியவில்லை.

ஆரம்பத்தில் பலர் போட்டியிட விண்ணப்பித்து இருந்தனர். பின்பு பலர் விண்ணப்பத்தைப் திரும்பப் பெற்று விட்டார்கள். இறுதி நேரத்திலும் சிலர் திரும்பப் பெற்றார்கள்.

முக்கிய பதவிகளுக்கு இருவரே போட்டியிட்டனர். ஆரம்பத்தில் 14 விண்ணப்பங்கள் கிடைத்த தலைவர் போட்டிக்கு இறுதியில் இருவரே போட்டியிட்டனர். இதன் மூலம் ஆலயம் இரண்டு குழுக்களாக பிரிந்துள்ளது வெட்ட வெளிச்சமாகத் தெரிகின்றது.

முக்கியமாகத் தலைவர் பதவியை ஒரு குழுவினர் கைப்பற்றியதும், அடுத்து வந்த பதவிகளுக்கும் அவர்களைச் சார்ந்தவர்களே தெரிவானார்கள்.

பிடித்த விடயம் தனி ஒருவராகப் பதவிக்குப் போட்டியிட்ட வேட்பாளருக்கும் வாக்கு வழங்கியது.

அடுத்து உடனிருப்பவர்கள் Beisitzer/-in எனும் பதவிகளுக்கு ஒற்றை இலக்கத்தில் ஏழு அங்கத்தவர்களைத் தெரிவு செய்ய அறிவித்து இருந்தார்கள். ஆறு அங்கத்தவர்கள் போட்டியிட்டார்கள்.

இறுதியில் மிக அதிசயமாகவும், சுவாரசியமாகவும் ஓர் அங்கத்தவர் மாத்திரமே தெரிவானார். காரணம் மிகுதி ஐவரையும் எதிர்குழு என்பதால் நிராகரித்து விட்டார்கள்.

இந்த ஆலயத்திற்கு நிர்வாகத்தினரைத் தவிர பணி செய்யும் அங்கத்தவர் ஒருவர் மாத்திரமே தெரிவானது. மிகவும் மோசமான செயல். இந்த நிலையிலேயே வரும் நிர்வாகம் இயங்க வேண்டும். அல்லது வரும் கூட்டத்தில் தங்களுக்கு இசைவானவர்களைத் தெரிவு செய்வார்கள்.

அடுத்து கணக்காய்வாளர்களாக மூன்று அங்கத்தவர்கள் போட்டியிட்டும் மாற்றுக் குழுவினர் என்பதால் நிராகரித்து விட்டார்கள். வரும் அடுத்த கூட்டத்தில் தங்களுக்கு சார்பானவர்களைத் தெரிவு செய்வார்கள்.

இந்த கூட்டங்களின் முடிவுகளைப் பொதுமகனாக அல்லது நடுநிலையாளனாக உண்மையைக் கூறுவதானால் பெரும் பண விரயத்திலும், அங்கத்தவர்களின் நேர வீணடிப்பிலும் ஜனநாயகத்தின் பெயரால் திட்டமிட்டு நடைபெற்ற கேலிக் கூத்தாகும்.

ஒவ்வொரு குழுவினரும் தேர்தலுக்கு முன்பே எப்படி ஆதரவு தேடினார்கள் என்பது யாவரும் அறிந்ததே. இந்த நிர்வாகத் தெரிவில் பணமும் விளையாடியதாகவும், சில அங்கத்தவர்களுக்கு வேட்பாளர்களே அங்கத்தவர் பணம் கட்டியதாகக் கூட்டம் நடந்த இடத்திலேயே உரையாடினார்கள். இது எந்த அளவு உண்மை என்பது அவரவர்களுக்குத்தான் தெரியும். இறைவனுக்கும் உண்மை தெரியும் என நம்புவோம். அப்படி நடந்து இருந்தால் அது மிகத் தவறான முன்னுதாரணமாக அமைந்து விடும்.

இது இலங்கை, இந்தியாவில் நடைபெறும் தேர்தல் அரசியலையே நினைவூட்டுகின்றது. ஆலயத்திற்கும், மக்களுக்கும் பணி செய்யவா இப்படிக் குழுக்களாகப் போட்டியிட்டு ஜனநாயம் என்ற பெயரில் தேர்தல்கள் மூலம் எப்படி நிர்வாகத்தினர் தெரிவாகின்றனர் என எண்ணத் தோன்றுகின்றது. இறுதி நேரத்தில் போட்டியில் இருந்து பின் வாங்குபவர்கள் ஏன் வேட்பாளராகப் போட்டியிட எண்ணினார்கள் எனவும் கேட்கத் தோன்றுகின்றது.

இங்கு பல கோவில்களில் இதுதான் நிலை. இரண்டு குழுக்களாகச் செயற்படுபவர்கள் யாரும் ஆலய நன்மை கருதி ஒரு மேசையில் இருந்து உரையாடி அவர்களுக்குள் தீர்வு தேடத் தயாரில்லை. இதுதான் இன்று எம் மக்களின் நிலையாகும்.

எனவே தான் மிகுந்த பணச்செலவுடன் நீதிமன்றங்களை நாடி சட்டத்தின் மூலம் தீர்வுகள் தேட வேண்டி உள்ளது. இதன் மூலம் இறை நம்பிக்கை கொண்ட சாதாரண மக்களின் பணமும், நேரமுமே வீணடிக்கப்படுகின்றது. இதனால் ஆலயங்களின் வளர்ச்சிக்கே தடை ஏற்படுகின்றது என்றால் மிகையாகாது.

‘’மாட்டுக்கு மாடு சொன்னால் கேட்காது. மணி கட்டிய மாடு சொன்னால்தான் கேட்கும்,, என்ற எம் முன்னோர் வாக்கியம் தான் நினைவுக்கு வருகின்றது.

எது எப்படியாயினும் தேர்தல் முடிந்து விட்டது. இனிமேல் வெற்றி தோல்வியை மறந்து இரண்டு குழுக்களும் ஒரு மேசையில் சந்தித்து மனம் திறந்து உரையாடி ஆலயத்தை வளர்ச்சிப் பாதையில் வீறுநடை போட வைக்க வேண்டும்.

ஆலய நிர்வாகங்கள் விட்டுக் கொடுப்புடனும், அனைவரையும் இணைத்தும் வரும் காலங்களில் நான் பெரிது நீ பெரிது என்று இன்றி, எல்லோரையும் சேர்த்து திறந்த மனதுடன் இயங்கினாலேயே ஆலயங்கள் முன்னேற்றப் பாதையில் பயணிக்க முடியும்.

பொது விடயங்களில் சகிப்புத்தன்மை, மற்றவர் கருத்துக்கு மதிப்பு, தனிப்பட்ட கோபம், தனி மனித விருப்பு வெறுப்புகள், நிர்வாகத் திறமையின்மை, பழி வாங்கல், ஆணவம் இவை போன்ற இன்னும் பல விடயங்களால்,எங்கள் அடுத்த சந்ததியினரும் ஆலயம், கடவுள் நம்பிக்கை போன்ற விடயங்களிலிருந்தும் ஒதுங்கிச் செல்கின்றார்கள். குறிப்பாக வேறு மதங்களை நாடிச் செல்கின்றார்கள்.

இனி வரும் காலங்களில் இவைகளைச் சிந்தித்து செயற்படுவோம்.நமது அடுத்த சந்ததியினருக்கு எதை விட்டுச் செல்லப் போகின்றோம்.

ஒன்றுபட்டு உழைப்போம்!
ஒற்றுமையால் உயர்வோம்!

அன்பே சிவம்🙏
நன்றி!
தில்லையம்பலம் தர்மகுலசிங்கம்
11.12.2023

You might also like

Leave A Reply

Your email address will not be published.