;
Athirady Tamil News

காலத்தால் மறக்க முடியாத, தளபதிகளில் ஒருவர் “புளொட்” மாணிக்கதாசன்.. (ஜனனதினம் இன்று)

0

காலத்தால் மறக்க முடியாத, தளபதிகளில் ஒருவர் “புளொட்” மாணிக்கதாசன்.. (ஜனனதினம் இன்று)

தமிழீழ போராட்டத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரும், தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் (புளொட்) உபதலைவரும், அவ் அமைப்பின் இராணுவ தளபதியுமான தோழர் மாணிக்கதாசன், அவர்கள் 14.01.1958 அன்று யாழ் மண்ணில் அவதரித்தார்.

செப்டம்பர் மாதம் 2ம் திகதி 1999 ம் ஆண்டு வவுனியாவில் வைத்து படுகொலை செய்யப்பட்ட “புளொட்” தளபதி மாணிக்கதாசன், படுகொலை செய்யப்படும் வரை பலருக்கும் சிம்மசொப்பனமாக விளங்கி “மக்கள் போராட்டத்தின்” மூலம் மக்களுக்காக பணியாற்றியவர். ஆற்றல், துணிவு, மதிநுட்பம் நிறைந்த தளபதி, என்றும் நினைவு கூர வேண்டிய வீர தளபதி.

இன்று நில அபகரிப்பு, பலாத்கார விகாரை அமைத்தல் என்பனவற்றை தனது ஆளுமைக்கு உட்பட்ட வவுனியா மண்ணில் அன்று தகர்த்தெறிந்து தமிழர் அடையாளத்தை காத்து நின்ற தளபதி.

தனது ஆற்றல்மிகு செயல் வடிவத்தின் மூலம் வவுனியா எல்லைப் புறங்களில் பல்வேறு தமிழர் கிராமங்களை உருவாக்கி தமிழர் நிலபரப்பையும் தமிழர் அடையாளத்தையும் பாதுகாத்து நின்ற “புளொட்” முக்கியஸ்தர்களில் என்றென்றும் நினைவு கூரப்பட வேண்டிய தளபதியே இவர்..

*நினைவில் உள்ள வித்தியாசமான சகோதரர்கள் இருவர்!

‘மக்கள் விடுதலை முன்னணி’த்தலைவர் (ஜே.வி.பி) ரோகண விஜேவீரா பற்றிய சிங்களத்திரைப்படம் பற்றிய காணொளியைப் பார்த்ததும் கூடவே ரோகண விஜேவீராவுடன் கைது செய்யப்பட்டுப் படையினரால் கொலை செய்யப்பட்ட கட்சியின் உபதலைவரான உபதிஸ்ஸ கமநாயக்கவின் (Upatissa Gamanayake) நினைவும் தோன்றியது. கூடவே அவரது தாயாரின் சகோதரியின் மகனான இன்னுமொருவரின் நினைவும் தோன்றியது.

உபதிஸ்ஸ கமநாயக்க சிங்கள சமுதாயத்தின் வர்க்க விடுதலைக்காக ஆயுதம் ஏந்திப் போராடி, அரச படையினரால் கொலை செய்யப்பட்டால், அவரது அன்னையின் சகோதரியின் மகனோ இலங்கைத் தமிழர்களின் விடுதலைக்காய் ஆயுதம் தாங்கிப் போரிட்ட ஒருவர். ஆரம்பத்தில் தமிழ்ப்புலிகள் அமைப்பில் இணைந்தவர், பின்னர் அது தமீழீழ மக்கள் விடுதலைக் கழகம்(புளொட்), விடுதலைப் புலிகள் என்னும் அமைப்புகளாகப் பிரிந்த போது தன்னை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்துடன் இணைத்துக் கொண்டவர்.

பின்னர் தன் இறுதிகாலத்தில் அவ்வமைப்பின் இராணுவத் தளபதியாகவும், பிரதித் தலைவராகவுமிருந்தவர். அவர் வவுனியாவிலிருந்த கழகத்தின் முக்கிய பாசறையான லக்கி ஹவுஸுல் கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்டார்.. அவரே “கண்ணாடி” என அன்புடன் அழைக்கப்படும் மாணிக்கதாசன்.

மாணிக்கதாசன் என்றதும் அவரது இராணுவச் செயற்பாடுகள் மற்றும் அவை காரணமாகவெழுந்த விமர்சனங்கள் தாம் முதலில் நினைவுக்கு வரும். விடுதலைக்காக ஆயுதம் தூக்கிய அனைத்து அமைப்புகளிலும் இவை போன்ற விமர்சனங்களுள்ளன.

மாணிக்கதாசனுக்கும் வடக்கு அராலிக்கும் நெருங்கிய தொடர்புள்ளது. இவரது சகோதரியொருவர் அங்குதான் திருமணம் செய்தவர். இவரது சகோதரரொருவர் அங்கு மாணவர்களுக்கு ‘டியூசன்’ கொடுத்துக் கொண்டிருந்ததாகக் கூறுவர். எண்பதுகளின் ஆரம்பத்தில் மாணிக்கதாசனே அங்குவந்து தேடப்படும் காலங்களில் மறைந்து வாழ்ந்ததாகவும் கூறுவர்.

இவரைப்பற்றி 1984 -1987 காலப்பகுதியில் கழகத்தின் அப்பகுதிப் பொறுப்பாளராகவிருந்த முரளி இவரைப்பற்றிக் கூறியது இவரைப்பற்றிய இன்னுமொரு பிம்பத்தையே தந்தது.

வாகனத்தை மிகவும் வேகமாக ஓட்டுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவராம் மாணிக்கதாசன். அவ்விதமொரு நாள் அப்பகுதிப் பொறுப்பாளரான தன்னைச் சந்திக்க வந்த நிகழ்வைப்பற்றி அவர் நினைவு கூர்கையில் (யாழ் கோட்டையில் ‘புளொட்’ காவல்அரண் அமைத்துக் காவல் புரிந்து கொண்டிருந்த காலகட்டமது) வழக்கம்போல் வேகமாக வாகனத்தையோட்டி வந்த அவர் அவ்விதமே தன்னை அதிலேற்றி முருகமூர்த்தி ஆலயத்தடிக்கு அழைத்துச் சென்று சிறிது நேரம் உரையாடிச் சென்றதாகவும், அப்போது அப்பகுதியில் இன்னுமொரு பயிற்சி முகாம் அமைக்க வேண்டுமெனக் கூறியதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன் அவர் கூறிய இன்னுமொரு விடயம்: ‘தோழர் சின்ன மெண்டிஸ் போராளிகளுடன் மிகவும் நட்புரீதியாகப் பழகுவார். மாணிக்கதாசனும் அவ்வாறே மிகவும் நட்புரீதியாகப் பழகுவார். அத்துடன் மிகவும் வேடிக்கையாகவும் உரையாடுவார்.’ இவ்விதமான அவரது ஆளுமையினால் அக்காலகட்டத்தில் கழகத் தோழர்களின் அன்புக்குரியவராகவுமிருந்தாரென்றும் அவர் மேலும் கூறினார்.

இன்றும் இயக்க முரண்பாடுகள் காரணமாக ஒருவருக்கொருவர் சேறடித்துக் கொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் ஒன்றை மட்டும் நினைவில் வைக்க வேண்டும். “இவர்கள் எல்லோரும் (இவர்கள் எவ்வமைப்புகளைச் சா(சே)ர்ந்தவரர்களாக இருந்த போதிலும்) வேடிக்கைக்காகத் தம் சுயநலன்களுக்காக ஆயுதங்களை ஏந்தியவர்கள் அல்லர். சமூக, அரசியல் முரண்பாடுகளின் விளைவாக, அவற்றுக்கான தீர்வுகளை நாடி, உறவுகளை, தம் சொந்த நலன்களைத் துறந்து, போராட்டத்தில் தம்மைப் பிணைத்துக் கொண்டவர்கள்.

உள்முரண்பாடுகளை, புறமுரண்பாடுகளை, சமூகச் சீர்திருத்தங்களை இவர்கள் அனைவரும் கையாண்டதிலேற்பட்ட பாதக, சாதக விளைவுகளைப் பற்றிய எவ்வித சுயபரிசோதனைகள் எதுவுமின்றித் தொடர்ந்தும் கண்களை மூடிக்கொண்டிருப்பதில் பயனெதுவுமில்லை. சுயபரிசோதனையினைப் பக்கச்சார்புகளற்றுச் செய்ய வேண்டிய காலகட்டம் இக்காலகட்டம். நடந்தவற்றைக் குறை, நிறைகளுடன் அணுகுவோம். பாடம் படிப்போம். கூடவே நினைவு கூர்வோம்.

“பிரித்தானியாவில் இருந்து தோழர் ஒருவர்” (மின்னஞசல் மூலம்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.