;
Athirady Tamil News

கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் – 8 மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு..!!

0

டெல்லி, அரியானா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம், மராட்டியம், குஜராத், கர்நாடகம், ஜார்கண்ட் ஆகிய 8 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதையொட்டி, இந்த மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதி உள்ளார்.

தமிழ்நாட்டில் சென்னை, மராட்டியத்தில் மும்பை, மும்பை புறநகர், புனே, தானே, நாக்பூர், கர்நாடகத்தில் பெங்களூரு நகர்ப்புறம் மற்றும் மேற்கு வங்காளத்தில் கொல்கத்தா, அரியானாவில் குர்கான் ஆகிய இடங்களில் கடந்த 2 வாரங்களில் கொரோனா பாதிப்பில் திடீர் மற்றும் குறிப்பிடத்தக்க எழுச்சி பதிவாகி உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் பயணங்கள், திருமணங்கள், பண்டிகை கொண்டாட்டங்கள் போன்றவற்றால் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது. இந்த மாநிலங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். தீவிர கண்காணிப்பு வேண்டும். குளிர்காலம் தொடங்கியுள்ள சூழலில், சுற்றுச்சூழல் மாசுபடுவது காரணமாக காய்ச்சல் மற்றும் சுவாச நோய்த்தொற்றுகள் தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும்.

சில மாநிலங்களில் தொற்று இரட்டிப்பாக ஆவதற்கான நேரம் குறைந்துள்ளது. நோய் மேலும் பரவாமல் இருப்பதை உறுதி செய்ய முன்கூட்டியே கவனிக்க வேண்டும். மேலே குறிப்பிட்ட மாநிலங்கள், பரிசோதனைகளை அதிகரிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாதிப்புக்கு ஆளாவோர் தொடர்புகளை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கு பரிசோதனையும் நடத்த வேண்டும். தொடர்ந்து கண்காணிக்கவும் வேண்டும்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தற்போதைய நிலையான வழிகாட்டும் நெறிமுறைகள்படி கட்டுப்பாட்டு மண்டலங்கள் அமைக்க வேண்டும். மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

கொரோனா தடுப்பூசி போடுவதில் வேகம் காட்டவேண்டும். கூடுதலான பேருக்கு தடுப்பூசி போட வேண்டும். கொரோனா கால கட்டுப்பாடுகளை கடுமையாக அமல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அந்தக் கடிதத்தில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.