;
Athirady Tamil News

ஒமைக்ரானை வீழ்த்தும் நோய் எதிர்ப்பு பொருள்- அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு…!

0

தென் ஆப்பிரிக்காவில் கடந்த நவம்பர் 24-ந் தேதி முதன் முதலாக கண்டறியப்பட்டுள்ள ஒமைக்ரான் வைரஸ், 1 மாத காலத்தில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது.

இந்தியாவிலும் இந்த வைரஸ் கடந்த 2-ந் தேதி நுழைந்து வேகமாக பல மாநிலங்களிலும் கால் பதித்து வருகிறது.

இந்த ஒமைக்ரான் வைரசில், கொரோனாவின் பிற எந்த உருமாறிய வைரசிலும் காணப்படாத அளவுக்கு அதன் ஸ்பைக் புரதத்தில் 37 பிறழ்வுகள் (உருமாற்றங்கள்) இருப்பதும், இந்த ஸ்பைக் புரதத்தைப் பயன்படுத்தித்தான் ஒமைக்ரான் மனித உடல் செல்களுக்குள் நுழைகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த ஒமைக்ரான் வைரஸ் தடுப்பூசிகளுக்கு தப்பும் தன்மையைக் கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் கூறி வந்தனர்.

இந்த நிலையில், ஒமைக்ரான் வைரசை வீழ்த்தும் நோய் எதிர்ப்பு பொருளை (ஆன்டிபாடி) அமெரிக்க விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர். ஒமைக்ரானை மட்டுமல்லாது உருமாறிய பிற வைரஸ்களை தடுப்பதற்கும் இந்த நோய் எதிர்ப்பு பொருள் உதவும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரி பேராசிரியர் டேவிட் வீஸ்லர் இதுபற்றி கூறும்போது, “ஸ்பைக் புரதத்தில் மிகவும் பாதுகாக்கப்பட்ட தளங்களை குறிவைக்கும் ஆன்டிபாடிகளில் (நோய் எதிர்ப்பு பொருள்) கவனம் செலுத்தி, வைரசின் தொடர்ச்சியான பரிணாமத்தை கடக்க ஒரு வழி இருக்கிறது என்பதை எங்கள் கண்டுபிடிப்பு சொல்கிறது” என குறிப்பிட்டார்.

இந்த கண்டுபிடிப்பு பற்றிய ஆய்வு தகவல்கள் ‘நேச்சர்’ பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளன.

ஒமைக்ரான் உள்ளிட்ட உருமாறிய கொரோனா வைரஸ்களை வீழ்த்தக்கூடிய ஆன்டிபாடிகளை விஞ்ஞானிகள் அடையாளம் கண்டிருப்பதால், இவற்றுக்கு எதிராக தடுப்பூசிகளை உருவாக்கவும், ஆன்டிபாடி சிகிச்சை அளிக்கவும் வழி பிறக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி பேராசிரியர் டேவிட் வீஸ்லர் கூறும்போது, “பல்வேறு வகையான வைரஸ்களில், பாதுகாக்கப்பட்ட பகுதிகளை அங்கீகரிப்பதின் மூலம், அவற்றை ஆன்டிபாடிகள் வீழ்த்த முடியும் என்ற கண்டுபிடிப்பு, இந்த பகுதிகளை குறிவைக்கிற தடுப்பூசிகள் மற்றும் ஆன்டிபாடி சிகிச்சைகளை வடிவமைக்க உதவும். இது பரந்த அளவிலான மாறுபாடுகளுக்கு எதிராக பயனுள்ளதாக இருக்கும்” என தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.