;
Athirady Tamil News

வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் ஆசிரியர் இடமாற்றத்திற்கு எதிராக போராட்டம்!! (படங்கள், வீடியோ)

0

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப ஆசிரியர் தேவதர்ஷன் இடமாற்றத்திற்கு எதிராக இன்றைய தினம் வட்டுக்கோட்டை இந்து கல்லூரி மாணவர்களும், கல்லூரியின் பழைய மாணவர்களும் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த பல மாதங்கள் அசாதாரண சூழ்நிலை காரணமாக பாடசாலை மூடப்பட்டிருந்தது. அந்த நிலைமை நீங்கி தற்பொழுதுதான் பாடசாலையின் செயற்பாடுகள் ஓரளவு சுமூக நிலைக்கு வந்துள்ளது.

இந்நிலையில் ஆசிரியர் இடமாற்றம் என்பது எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. எமது பாடசாலை ஆசிரியரை வேறு பாடசாலைக்கு அனுப்பி விட்டு வேறு ஒரு ஆசிரியரை வாரத்தில் மூன்று நாளைக்கு மாத்திரம் எமது பாடசாலைக்கு கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளது.

இவ்வாறு மூன்று நாளைக்கு மட்டும் ஒரு ஆசிரியரை நியமித்தால் நமது பாடத்திட்டங்களை சரியான நேரத்தில் சரியான விதத்தில் முடிக்க முடியுமா? அத்துடன் எமது பாடசாலை தேசிய பாடசாலையாக தற்போது தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

எனவே எமது நிலையை கருத்தில் கொண்டு உரிய அதிகாரிகள் எமக்கு தீர்வினைப் பெற்றுத் தர வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.

இதன்போது அவ்விடத்திற்கு வந்த வலயக்கல்விப் பணிப்பாளர் அதிபர் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். அதன்பின்னர் இடமாற்றம் செய்த ஆசிரியரை மற்றைய இரு நாட்களும் கடமையில் ஈடுபடுத்துவதாக கோட்டக் கல்விப்பணிப்பாளர் தெரிவித்தார்.

அதற்கு மாணவர்களும் சம்மதம் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து மாணவர்களது போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

மேலும் இரண்டு ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கவிருந்த நிலையில் அவர்களது இடமாற்றத்தையும் நிறுத்துமாறு கோரி பாடசாலையின் அதிபர் மேலதிகாரிகளுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியும் வைத்துள்ளார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.