;
Athirady Tamil News

அகில இலங்கை சாசனாரக்ஷக சபை பிரச்சினைகளை தீர்க்குமாறு அறிவுறுத்தல்!!

0

அகில இலங்கை சாசனாரக்ஷக சபையில் தற்போது நிலவும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (10) பிற்பகல் பிரதமரின் செயலாளர் மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

அலரி மாளிகையில் நடைபெற்ற அகில இலங்கை சாசனாரக்ஷக சபையின் கலந்துரையாடலின் போது முன்வைக்கப்பட்ட விடயங்களை கருத்திற்கொண்டு பிரதமர் இவ்வாறு ஆலோசனை வழங்கினார்.

நயினாதீவு ரஜமஹா விகாரையை புனித பூமியாக பிரகடனப்படுத்தும் சன்னஸ் பத்திரம் வழங்கும் நிகழ்வினை எதிர்வரும் மார்ச் மாதம் நடத்துவதற்கு பிரதமரின் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது. அறநெறி பாடசாலை கொடி தினம், அறநெறி பாடசாலை தின தேசிய நிகழ்வு மற்றும் அறநெறி பாடசாலை மாணவர்களின் திறமைக்கான தேசிய நிகழ்வு ஆகியவற்றை நடத்துவது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

அறநெறி பாடசாலை புத்தகங்களை விநியோகிப்பதற்கான போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு மாவட்ட செயலாளர்களின் உதவியை பெற்றுக் கொள்ளுமாறு பிரதமர் இதன்போது அறிவுறுத்தினார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் புனித பூமி மற்றும் தொல்லியல் தலங்களில் தற்போது நிலவும் பிரச்சினைகளை தீர்த்து அவற்றிலுள்ள கல்வெட்டுகளை எதிர்கால தலைமுறையினருக்காக பாதுகாக்க வேண்டும் என பிரதமர் இதன்போது வலியுறுத்தினார்.

அகில இலங்கை சாசனாரக்ஷக சபையை பிரதிநிதித்துவப்படுத்தி வணக்கத்திற்குரிய பேராசிரியர் தும்புல்லே சீலக்கண்ட தலைமை தேரர், வணக்கத்திற்குரிய முகுனுவெல அனுருத்த தலைமை தேரர், வணக்கத்திற்குரிய மெதகம தம்மானந்த தேரர், வணக்கத்திற்குரிய மெதகமுவே விஜயமைத்திரி அனுநாயக்க தேரர் உள்ளிட்ட மஹாசங்கத்தினர் இதன்போது கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.