;
Athirady Tamil News

துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல்!! (வீடியோ)

0

குருந்தூர் மலைப்பகுதியில் புத்தரின் சிலையை நிறுவ முற்பட்ட நிலையில் அதனை தடுக்கப் போராடிய ஒருவருக்கு துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தமிழ் தேசிய மக்கள் முன்ணணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக சந்திப்பிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், கடந்த 13ம் திகதி குருந்தூர் மலைப்பகுதியில் புத்தரின் சிலையை நிறுவ முற்பட்ட நிலையில் அந்த செயற்பாடு போராட்டம் மூலம் தடுக்கப்பட்டது.

இந்த நிலையில் 15ம் திகதி அந்த போராட்டத்தில் ஈடுபட்டவரை அச்சுறுத்தும் வகையில் இனந்தெரியாத நபர்கள் செயல்பட்டனர்.

குறித்த நபர் தனது வழமையான பணிகளை ஆற்றிவிட்டு வீட்டுக்குள் செல்லும் போது இரண்டு இனந்தெரியாத நபர்கள் மூலம் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்டார். அவர்கள் இரண்டு பேரும் அருகிலுள்ள இராணுவ முகாமுக்குள் சென்றனர். இந்தப் பிரச்சினைக்கு பின்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டவர் இடம்பெயர்ந்து
வேறுபகுதியில் வசிக்கின்றார்.

இது பற்றி பொலிஸாருக்கு அவர் முறைப்பாட்டை செய்திருந்ததுடன் எங்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டு இந்த விடயங்களை பதிவு செய்திருந்தார். அத்துடன் யாழ்ப்பாணம் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய முற்பட்டபோது முல்லைத்தீவை சேர்ந்தவர் என்ற வகையில் வவுனியாவிலுள்ள மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாட்டை பதிவு செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.

உள்பாதுகாப்புக்கு பொறுப்பாக இருந்த அமைச்சர் சரத்வீரசேகர , எமது கட்சியின் பொதுச்செயலாளர் கஜேந்திரனின் பெயரை பதிவு செய்ததுடன் ஏனைய தமிழ் தரப்புகளை பொதுமக்களையும் தமிழ் அடையாளங்களை பாதுகாக்க இடங்களை பாதுகாக்க முற்படுகின்றவர்களையும் மிக மோசமான முறையில் நாடாளுமன்றத்தில் அச்சுறுத்தியிருந்தார். இது தொடர்பாக இந்த அரசாங்கம் எந்த நடவடிக்கையும் அரசாங்கம் அடுத்ததாக தெரியவில்லை. ஜெனிவாவுக்கு ஜூலை மாதம் சென்ற பல கதைகளைக் கூற இருக்கும் நிலையில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தற்போதைய நாட்டின் சூழலிலும் தமிழ் தேசத்தை அழிக்கும் செயற்பாடுகளில் அரசாங்கம் முனைப்பாக செயற்படுகின்றது என்றார்.

இந்த ஊடக சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட நபரும் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.