;
Athirady Tamil News

இலங்கையில் அடுத்த நெருக்கடி: மின் கட்டணம் 75% அதிகரிப்பு – ரணில் அரசுக்கு எதிராக மீண்டும் கொந்தளிப்பு!! (படங்கள்)

0

இலங்கையில் இன்று முதல் மின்சார கட்டணத்தை 75 சதவிகிதம் அதிகரிக்க பொது பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, இன்று முதல் மின்சார கட்டணம் 75 சதவிகிதம் அதிகரிக்கப்படுகின்றது என பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்தார்.

இலங்கையில் மின்சார கட்டண திருத்தம் சுமார் 9 வருடங்களில் பின்னர் இவ்வாறு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

2014ம் ஆண்டு 25 சதவிகித மின்சார கட்டண குறைப்பு மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது 75 வீதத்தால் அது அதிகரிக்கப்பட்டுள்ளது.

பூஜ்ஜியம் முதல் 30 அலகுகளுக்கு (யூனிட்) மாதம் ஒன்றிற்கு 198 ரூபா செலுத்த வேண்டிய நிலைமை ஏற்படும்.

31 முதல் 60 வரையான அலகுகளுக்கு மாதமொன்றிற்கு 599 ரூபாவும், 61 முதல் 90 வரையான அலகுகளுக்கு 1,467 ரூபாவும் செலுத்த வேண்டும்.

மேலும், 91 முதல் 120 வரையான அலகுகள் பயன்படுத்தப்படும் பட்சத்தில், 2,976 ரூபாவும், 121 முதல் 180 வரையான அலகுகள் பயன்படுத்தப்படும் பட்சத்தில் 5,005 ரூபாவும் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் 48 லட்சம் மக்கள் 90 அலகுகளுக்கு குறைவாகவே மின்சாரத்தை பயன்படுத்தி வருவதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவிக்கின்றார்.

30 வரையான அலகுகளுக்கு இதுவரை காணப்பட்ட 2 ரூபா 50 சதமாக காணப்பட்ட கட்டணமானது, தற்போது 8 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 31 முதல் 60 வரையான அலகுகளில், ஒரு அலகுக்கு இதுவரை 4 ரூபா 85 சதமாக காணப்பட்ட கட்டணமானது, தற்போது 10 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், 61 முதல் 90 அலகுகளுக்கு இடையில், ஒரு அலகுக்கு காணப்பட்ட 7 ரூபா 85 சதமான கட்டணம், தற்போது 16 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

91 முதல் 180 வரையான அலகுகளில், ஒரு அலகுக்கு இதுவரை 27 ரூபா காணப்பட்ட நிலையில், அது தற்போது 50 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறைக்கான அனுமதிக்கப்பட்ட மின்சார கட்டண அதிகரிப்பில் 50 வீத கட்டண அதிகரிப்பை மூன்று மாதங்களின் பின்னர் நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சுற்றுலாத்துறை மற்றும் ஏற்றுமதி துறைகளின் மின்சார கட்டணத்தை டாலரின் செலுத்தும் பட்சத்தில், அதற்கு 1.5 சதவிகித நிவாரணத்தை பெற்றுக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் 60 முதல் 65 வீதம் வரையான மின்சாரம், எரிபொருள் மற்றும் அனல் மின் உற்பத்தி நிலையங்களின் ஊடாகவே உற்பத்தி செய்யப்படுகின்றன.

அனல் மின் உற்பத்திகளுக்கு தேவையான கரியை, கடந்த ஜனவரி மாதம் 143 டாலருக்கு கொள்வனவு செய்யப்பட்டதுடன், அதே கரியை தற்போது 321 முதல் 350 டாலர் வரை கொள்வனவு செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிக்கின்றார்.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடுப்பகுதி வரையான காலப் பகுதிக்கு தேவையான கரி மாத்திரமே தற்போது களஞ்சியத்தில் உள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

அதேபோன்று, 6 மாதங்களுக்கு முன்னதாக 90 ரூபாவிற்கு கிடைத்த மசகு எண்ணெய், தற்போது 419 ரூபாவிற்கு கொள்வனவு செய்யவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் வகைகளுக்கு 350 சதவிகித விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே, விருப்பமின்றியேனும், இந்த கட்டண அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் கூறுகின்றார்.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் வரை மின்சார உற்பத்திக்காக 160 பில்லியன் ரூபா தேவைப்படுகின்றது என அவர் குறிப்பிடுகின்றார்.

இலங்கையிலுள்ள நிறுவனங்கள், தமது வருமானத்தில் 60 வீதத்திற்கு அதிகமான தொகையை அந்நிய நிதியில் பெற்றுக்கொள்ளுமாக இருந்தால், அந்த நிறுவனங்கள் கட்டாயமாக டாலரின் மின்சார கட்டணத்தை செலுத்த வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
மின்சார கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு

பொதுமக்களினால் இந்த கட்டண அதிகரிப்பை தாங்கிக் கொள்ள முடியாது என மின்சார தொழிற்சங்க ஒன்றிய கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் ரஞ்ஜித் ஜயலால் தெரிவிக்கின்றார்.

மக்களினால் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில், மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டுமே தவிர, அவர்களினால் பொறுத்துக்கொள்ள முடியாத அளவிற்கு மின் கட்டணம் அதிகரிக்கப்பட கூடாது என அவர் குறிப்பிடுகின்றார்.

246 ரூபா சமையல் எரிவாயு விலையை குறைத்து, 75 சதவிகிதம் மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றஞ்சுமத்துகின்றார்.

மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இதேவேளை, தமது தொழில்துறை மேலும் நட்டம் அடையும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக அகில இலங்கை சிறு தொழில்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் நிலுக்ஷ குமார தெரிவிக்கின்றார்.

மூலப் பொருட்கள் இல்லாமல், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தமது தொழில்துறை மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ள இந்த தருணத்தில், மின்சார கட்டண அதிகரிப்பானது, தொழில்துறையை முழுமையாக மூடவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

அனைத்து தொழில்துறைகளிலும் விலை அதிகரிப்பு மாத்திரமே மேற்கொள்ளப்பட்டதே தவிர, மாற்று திட்டங்கள் குறித்து சிந்திக்கவில்லை என அவர் குற்றஞ்சுமத்துகின்றனர்.
எதிர்கட்சிகள் எதிர்ப்பு

மின்சார கட்டண அதிகரிப்பு தொடர்பில் தமக்கு விவாதமொன்று அவசியம் என பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் இன்று கோரிக்கை விடுத்தது.

விவாதமொன்றிற்கு அல்லது விளக்கமளிப்பதற்கு தாம் தயார் என மின்சக்தி வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, சபையில் அறிவித்தார்.

இதன்படி, இன்றைய தினம் இடம்பெறும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.