;
Athirady Tamil News

முக்காலமும் சேர்க்க வேண்டிய மூலிகைகள்!!! (மருத்துவம்)

0

உணவே மருந்தென வாழ்ந்த பாரம்பரியம் நாம். நமது சித்த மருத்துவத்தின் அடிப்படையில் நம் வாழ்வை அமைத்துக்கொள்வது நம் உடலையும் மனதையும் ஃபிட்டாகி, ஆரோக்கியத்தை அரவணைக்கச் செய்யும். சித்த மருத்துவம் என்றாலே ஆரோக்கியமான, அடிப்படை வசதிகளைக் கூறும் நம் பாரம்பரியமான முறைதான். ஒரு நாளைக்கு நாம் செய்யும் செயல்களிலும் பழக்கங்களிலும் நமது ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் வழிகள் என்னென்ன எனப் பார்க்கலாம்.

காலை முதல் இரவு வரை நாம் என்ன செய்தால் ஆரோக்கியமான வாழ்வை வாழமுடியும் எனத் தெரிந்து, பழகிக்கொள்ளலாம். இதற்காகவே “பிணி அணுகா விதி” எனச் சொல்லக்கூடிய வரும்முன் காக்கும் (Preventive Medicines) எனும் தலைப்பில் ஆயுஷ் மருத்துவத்துறையில் சித்தர்கள் எழுதிகொடுக்கப்பட்ட அருமையான நூலே உண்டு.

தினசரி இதைச் செய்ய மறக்காதீங்க!

இந்தப் பிணி அணுகா விதியில் என்னென்ன சொல்லியிருக்கிறார்கள் எனப் பார்த்தோமானால் காலையில், வை கறையிலேயே எழ வேண்டும். இதனை ஆங்கிலத்தில் ‘Early to bed, Early to rise’ என அறிவியல்பூர்வமாகவும் சொல்வதுண்டு. அதிகாலையில் நாம் தூங்கி எழுந்திருக்கும்போது நம் உடலில் உள்ள வாதம், பித்தம், கபம் மூன்றும் தன்னிலைப்படும். அதாவது காலை ஏழு மணிக்கு மேல் எழுந்திருக்கும்போது, நம் உடலில் உள்ள பித்தம் அதிகரிக்கும். எனவே, அதிகாலையிலே எழுவதுதான் நமது முதல் ஆரோக்கியமான பழக்கம்.

இதனால் உடலில் பித்தம் அதிகரிக்காது. இரவு தூங்கி காலை எழுந்த உடலில் பித்தம் இருக்கும். பித்தத்தைப் போக்கக்கூடிய சில உணவு வகைகளையும் பழக்கங்களையும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். முதலில் தண்ணீர் குடிக்க வேண்டும். ‘நீரினை சுருக்கி மோரினை பெருக்கி நெய்யை உருக்கி’ சாப்பிட வேண்டும் எனச் சொல்லப்பட்டதுதான் சித்த மருத்துவத்தின் அடிப்படைj; தத்துவம். நீரினைச் சுருக்கி என்றால் தண்ணீரைக் கொதிக்கவைத்து, ஆறவைத்து குடிக்க வேண்டும். கொதிக்க வைக்கும்போது மஞ்சள் காமாலை கிருமி, டைஃபாய்டு கிருமி, அமீபயாஸிஸ் கிருமிகள் போன்றவை நீங்கும். ஆகவே, நீரைக் கொதிக்கவைத்து ஆற வைத்துக் குடிப்பது நல்லது.

பற்பொடி

காலை தூங்கி எழுந்ததும் சிலர் பெட் காபி குடிக்கும் பழக்கத்தில் இருப்பார்கள். இது தவறு. சிலர் பல் தேய்ப்பார்கள். காலையில் தொடங்கியதும் முதல் கெமிக்கல் பேஸ்ட்டால் பல் துலக்குவது… இதுவும் சரியான பழக்கம் அல்ல. பேஸ்ட்டில் உள்ள லாரிக் அமிலம், வாயில் ஒரு ஃப்ரெஷ்னெஸ் உணர்வை தருமே தவிர பற்களில் உள்ள கறைகளையோ கிருமி
களையோ இது நீக்காது. அதனால்தான், சார்கோல் டூத் பேஸ்ட், நீம் பேஸ்ட், சால்ட் பேஸ்ட் பயன்படுத்துங்கள் என விளம்பரம் செய்கிறார்கள். பல் தேய்க்க பேஸ்ட்டுக்குப் பதிலாகப் பற்பொடியில் தேய்க்கலாம். கற்றாழை, புதினா, லவங்கம், வேப்பிலை, உப்பு போன்றவற்றை காயவைத்து பவுடராக்கி, அந்தப் பற்பொடியை டூத் பவுடராக பயன்படுத்திவரலாம். திரிபலா எனும் பொடியையும் பற்பொடியாகப் பயன்படுத்தலாம்.

குளியல் பொடி

தலைமுடிக்கு நவீன ஷாம்புகள், கண்டிஷனர்கள் மார்க்கெட்டில் கொட்டி கிடக்கின்றன. மிகமிக வேதித்தன்மை குறைந்த ஹெர்பல் ஷாம்பு பயன்படுத்தலாம். திரிபலா ஷாம்பு போன்றவை சித்த மருத்துவ மருந்தகங்களில் கிடைக்கின்றன. ஷாம்புவே வேண்டாம் ஹெர்பலாக பயன்படுத்த விரும்புபவர்கள், செம்பருத்தி பூ, இலைகள், மொட்டுக்கள், வெந்தயம், பச்சைப்பயறு, சோப்புக்காய் எனும் பூவந்திக்கொட்டைகளை அரைத்து வைத்துக்கொண்டு பொடியாகப் பயன் படுத்தி முடியை அலசலாம்.

மூன்று வேளைக்கான முதல் மூலிகை

அடுத்ததாகக் காய்ந்த நெல்லிக்காயை தண்ணீரில் போட்டுச் சாப்பிடலாம். அல்லது ஃபிரெஷ்ஷான நெல்லிக்காயை நன்கு கழுவிச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்தலாம். இந்த நெல்லிக்காய் சாப்பிடுவதால் விட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ஸ் கிடைக்கும். இதனால், பெரிய நோய்கள் வராமல் பாதுகாக்க முடியும். முக்கியமாக, வளர்சிதைமாற்றம் இல்லாத நோய் (Non-metabolic disease) என்று சொல்லக்கூடிய சர்க்கரை நோய் வராமல் பார்த்துக்கொள்ள முடியும். அதேபோல ஜீரணசக்தி மேம்படும். காலை, மதியம், இரவு உணவு நாம் எடுப்பதால், இதற்காகப் பசி பெருக்கியாக (Appetizer) இந்த நெல்லிக்காய்ப் பயன்படும். அதனாலேயே, இதை ‘ஆரோக்கியக் கனி’ எனச் சொன்னார்கள்.

ஹெல்த்தி உணவுப் பழக்கம்

பசி வந்த பிறகு உண்ணும் பழக்கம் இருக்க வேண்டும். பசி உணர்ந்து சாப்பிடுதல் ஆரோக்கியத்துக்கான முதல் விதி. உணவுப் பழக்கத்தில் நிறையக் காய்கறிகள், நிறையப் பழங்கள், தேவையான தண்ணீர் ஆகியவற்றை எடுத்துக்கொண்டால், மலம் கழிக்க வேண்டும் என்பதற்காக நாம் எந்த மருந்தும் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. அதேபோல அசைவ உணவுகளை அளவுடன் சாப்பிட்டுவரலாம். மலச்சிக்கல் தொந்தரவு இருந்தால் அவர்கள் அசைவ உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

இவர்களுக்கு நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் கலந்த திரிபலா கொடுக்கலாம். மிக அதிகமாக மலச்சிக்கல் இருந்தால் சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுக்கலாம். அதிகமான அசைவ உணவை விரும்பி சாப்பிடுவோருக்கு நார்ச்சத்து உடலில் தேவையான அளவு இல்லாமல் போவதால் அவர்களுக்குக் கடுமையான ‘மலச்சிக்கல்’ ஏற்படலாம்.

ஹெர்பல் டீ

ஆவாரம் பூ, மஞ்சள் நிறத்தில் காணப்படும். ஆவாரம் பூவை உலர்த்தி பவுடராக்கி ஒரு டீஸ்பூன் கலந்து டீயாக்கி குடித்து வர ஆரோக்கியத்துக்கு நல்லது. தைராய்டு பிரச்சனையுள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் ஆவாரம் பூவை வாரம் ஒருமுறையாவது கட்டாயம் சாப்பிட்டு வரவேண்டும். டீயாகவோ, ரசமாகவோகூடச் சாப்பிடலாம்.

தூக்கம்

தூக்கத்துக்கும் மனதுக்கும் அதிகத் தொடர்பு உண்டு. மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும். மன தளவில் மகிழ்ச்சியாக, ரிலாக்ஸாக இருந்தால் நல்ல தூக்கம் வரும். தூக்கம் வரவில்லை என அவதிப்படுபவர்களுக்கு, அஷ்வகந்தா(Asparagus), தண்ணீர் விட்டான் கிழங்கையும் அரைத்துச் சூடான பாலில் கலந்து குடிக்கலாம்.

பெண்களுக்கான பராமரிப்பு மூலிகைகள்

மாதவிலக்கின் போது பெண்கள் 4 – 6 மணி நேரத்துக்கு ஒரு முறை சானிட்டரி நாப்கினை மாற்ற வேண்டும். சிலர் ஒருநாளைக்கு ஒரு நாப்கின்னை மட்டும் வைத்துக்கொண்டே இருப்பார்கள். இது தவறான பழக்கம். இந்த மாதவிலக்கு சமயத்திலும் சரி, பெண்கள் எப்போது வேண்டுமானாலும் இந்தப் பழக்கத்தைக் கடைப்பிடிக்கலாம்.

திரிபலா பொடி அல்லது நுனா இலை பொடி அல்லது வேப்பிலை பொடி ஆகியவற்றை பவுடர் செய்து இதை வாஷாக பயன்படுத்திட்டு வரலாம். இதில் எதாவது ஒரு பொடியை 1-2 ஸ்பூன் எடுத்துத் தண்ணீரில் போட்டு, அந்தத் தண்ணீரை வாஷாக பயன்படுத்தலாம். பிறப்புறுப்பு தொற்று, துர்நாற்றம், அரிப்பு போன்றவை நீங்கும். தினசரி நமது வாழ்வியலிலும் நம் பழக்கங்களிலும் மேற்சொன்ன சில மூலிகைகளை சோப், பேஸ்ட் எனும் கெமிக்கல்களுக்கு பதிலாகப் பயன்படுத்தி வந்தால் பெரும்பாலான நோய்கள் வராமல் தடுக்க முடியும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.