;
Athirady Tamil News

கேரளாவில் உச்சகட்ட மோதல்: கவர்னரை திரும்ப பெற ஜனாதிபதியிடம் வலியுறுத்துவோம் முதல்-மந்திரி பினராயி விஜயன் பேட்டி..!!

0

கேரளாவில் கவர்னர் ஆரிப் முகமதுகானுக்கும் மாநில அரசுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. அரசு நிர்வாகத்தில் கவர்னர் தலையிடுவது, பல்கலைக்கழக நியமன விவகாரங்களில் தலையீடு போன்ற நடவடிக்கைகள் மாநில அரசுக்கு தலைவலியாக இருந்து வந்தது. இந்த நிலையில் கேரளாவில் உள்ள 9 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை ராஜினாமா செய்ய வலியுறுத்தியும், விளக்கம் கேட்டும் கவர்னர் ஆரிப் முகமது கான் நேற்று முன்தினம் நோட்டீசு அனுப்பினார். கவர்னரின் இந்த உத்தரவு கேரள அரசை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்தநிலையில் முதல்-மந்திரி பினராயி விஜயன் பாலக்காட்டில் நிருபர்களிடம் கூறியதாவது:- கவர்னர் ஆரிப் முகமது கான், கவர்னருக்கான பணிகளை விட்டுவிட்டு மற்ற அனைத்து வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறார். தனக்கு இல்லாத அதிகாரங்களை எல்லாம் கற்பனை செய்து கொண்டு, ஒரு சர்வாதிகாரியை போல் நடந்து வருகிறார். அவரது நடவடிக்கைகளை பார்க்கும் போது, கேரளாவில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் அவர் செயல்படுவது அப்பட்டமாக தெரிகிறது. மேலும், பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கைப்பாவையை போல் இயங்கி வருகிறார். தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ராஜஸ்ரீ நியமிக்கப்பட்டது செல்லாது என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இது முழுக்க முழுக்க அந்த தொழில்நுட்ப பல்கலைக்கழகம் சம்பந்தப்பட்ட உத்தரவு. ஆனால், அந்த உத்தரவை பொதுவாக கருதி 9 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை ராஜினாமா செய்யுமாறு கவர்னர் ஆரிப் முகமது கான் உத்தரவிட்டுள்ளதை என்னவென்று சொல்வது?. கவர்னர் கேரள அரசின் நிர்வாகத்துக்கும், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். எனவே, தேவைப்பட்டால் அவரை கவர்னர் பதவியில் இருந்து திரும்பப் பெறுமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்துவோம். அதேபோல் பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் இருந்து கவர்னரை நீக்குவது குறித்தும் ஆலோசித்து வருகிறோம். இவ்வாறு பினராயி விஜயன் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.