;
Athirady Tamil News

5.7 மில்லியன் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவை : ஐ. நா!!

0

இலங்கை தற்போது எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியில், குறைந்தது 5.7 மில்லியன் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. இது நாட்டின் சனத்தொகையில் 26 சதவீதத்திற்கு சமமாக உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையைத் தயாரிக்க இலங்கையின் ஒன்பது மாகாணங்களின் 11 மாவட்டங்களில் உள்ள 2 ஆயிரத்து 871 குடும்பங்கள் ஆய்வுக்கு உற்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியால் உணவு, மருந்துப்பொருட்கள், அன்றாட வாழ்க்கைக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்வதில் பாரிய சிரமங்களை எதிர்கொள்ள நேர்ந்துள்ளதாகவும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நெருக்கடி நிலைமைகளை தீர்க்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்க தவறினால், மனிதாபிமான உதவிகள் தேவைப்படும் மக்களின் எண்ணிக்கை 12 மில்லியன் வரை இரட்டிப்பாக அதிகரிக்கும் எனவும், இந்த நிலைமையானது நாட்டை வறுமைக்கோட்டின் கீழ் கொண்டு செல்லும் எனவும் ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்பு அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறான நெருக்கடி நிலைமையில் மக்கள் மூன்று வேலை உணவு உற்கொள்வதை தவிர்த்துள்ளதாகவும், மக்களுக்கு தேவையான மருந்துப்பொருட்கள் உரிய நேரத்தில் பெற்றுக்கொள்ள முடியாமை, மாணவர்களை பாடசாலைக்கு அனுப்பாது பணிக்கு அமர்த்துதல், சொத்துக்களை விற்றல் போன்ற செயற்பாடுகள் அதிகமாக பதிவாகியுள்ளதாகவும், பொருளாதார நெருக்கடியில் நாட்டின் சுகாதார கட்டமைப்பும் நெருக்கடியை சந்தித்து வருவதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியினால் களவுகள் அதிகரித்துள்ளதாகவும், பணிக்காகவோ அல்லது நிரந்தரமாக தங்கும் நோக்கில் வெளிநாடுகளுக்கு பயணிக்கும் மக்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பை காட்டுவதாகவும், இவ்வாறான செயற்பாடுகள் குடும்ப கட்டமைப்பு வீழ்ச்சியடைய பிரதான காரணமாக அமைந்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்பு அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.