;
Athirady Tamil News

துயிலுமில்லங்களை மீள ஒப்படைத்து மக்களின் நினைவேந்தும் உரிமைக்கு இடமளியுங்கள்!

0

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தினை வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையிடம் ஒப்படைப்பதன் வாயிலாக எமது மக்களின் நினைவேந்தும் உரிமைக்கு அரசாங்கம் இடமளிக்க வேண்டும் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையில் போரில் ஆகுதியாகிய மறவர்களுக்கு நினைவஞ்சலிச் சுடரினை ஏற்றிய பின் கருத்துரைக்கும் போதே இந்தக் கோரிக்கையினை முன்வைத்தார்.

சேமக்காலைகளை இலங்கையின் சட்ட திட்டங்களின் பிரகாரம் உள்ளுராட்சி மன்றங்களே முகாமை செய்கின்றன. போரில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளின் வித்துடல்கள் விதைக்கப்பட்ட இடங்களை போருக்குப் பின் அரச படைகள் கிளறி எறிந்து மானிட தர்மத்திற்கும் போரியல் விதிமுறைகளுக்கும் மனித உரிமைகளுக்கும் களங்கம் ஏற்படுத்தியுள்ளார்கள்.

ஒரு தாய் இறந்த தன் பிள்ளையை நினைவு கொள்ள முடியாது என்று அரசு கருதுமாக இருந்தால் அதையொத்த அரச அடக்குமுறையும் அரச பயங்கரவாதம் வேறு என்னவாக இருக்க முடியும் என்று கேள்வி எழுப்புகின்றோம்.

உண்மையில் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்ட சடலங்களைக்கூட கிளறி எறிந்து இனவெறியைத் தீர்க்கவேண்டும் என்ற எண்ணம் இலங்கையின் அரச கட்டமைப்பில் வேரூண்டி இருக்கையில் நாடு முன்னேறிச் செல்வதற்கே இடமில்லை.

மனித நேயமுள்ள சிங்கள தாய்மாரிடமும் சகோதரர்களிடமும் எமது மக்கள் மீது இளைக்கப்பட்ட அநீதிகளை கலந்துரயாட அழைப்பு விடுக்கின்றோம்.

உலக அளவில் எதிரியாக இருந்த போதும் போரில் கொல்லப்பட்டவர்களுக்கு கௌரவமளித்து தூபிகளைக் கூட உலக அளவில் அமைத்துள்ளார்கள்.

ஆனால், இன்றும் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் உள்ளட்ட பல துயிலும் இல்லங்கள் இராணுவ முகாம்களாக உள்ளன. அங்கு இருந்த கல்லறைகள் சிதைக்கப்பட்டுள்ளன.

இந் நிலையில் இவ்வாறான மிக அருவருக்கத் தக்க மானிட கௌரவத்திற்கு கிஞ்சித்தும் ஏற்றுக்கொள்ள முடியாத செயற்பாடுகளை நிறுத்தி கோப்பாய் மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தினை உள்ளராட்சி மன்றத்திடம் ஒப்படைப்பதற்கு அரசாங்கம் முன்வரவேண்டும்.

தற்போது அந் நிலம் அரச திணைக்களமென்றிற்குச் சொந்தமான நிலமாக இராணுவ முகாமாக உள்ளது. இந்த இடத்தில் அரசாங்கம் இராணுவ ஒழுக்கத்தினை பின்பற்றி அந் நிலத்தில் இருந்து இராணுவத்தினை வெளியேற்றுவதுடன் அந் நிலத்தினை உள்ளூராட்சி மன்றமான வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையிடம் ஒப்படைப்பதன் வாயிலாக உரிய வகையில் மக்களின் நினைவேந்தல் உரிமையினை நிலைநாட்ட முடியும்.

அதற்கான கோரிக்கையினை முன்வைப்பதுடன் உத்தியோகபூர்வ நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவுள்ளதாக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.