;
Athirady Tamil News

யாழில் கரையோர பாதுகாப்பு திணைக்களம் எதற்கு இருக்கின்றது? – அன்னராசா கேள்வி!!

0

யாழ் மாவட்டத்தில் கரையோர பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்களம் எதற்கு இருக்கின்றது என கேள்வியெழுப்பிய யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் தலைவர் அ.அன்னராசா, சட்டவிரோத கடலட்டை பண்ணை அமைப்பது தொடர்பாக திணைக்களத்திற்கு நாங்கள் கடிதம் எழுதிய போது அதற்கு எவ்வித பதிலையும் இதுவரை அளிக்கவில்லை என குற்றம் சாட்டினார்.

நாங்கள் கடலட்டைப் பண்ணைகளுக்கு எதிரானவர்கள் அல்ல. யாழ்ப்பாணத்திலுள்ள 118 கடற்றொழில் சங்கங்களின் கருத்தை நாம் பிரதிபலிக்க வேண்டும் என்றார்.

சமகால நிலைமை தொடர்பாக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போது அ.அன்னராசா இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், கடலட்டை பண்ணை தொடர்பான சந்தேகங்களும் கேள்விகளும் கடற்றொழிலாளர்களுக்கு எழுந்தநிலையில் அது தொடர்பான முறைப்பாடுகள் சம்மேளனத்திற்கு கிடைக்கப்பெற்றது.

அதனடிப்படையிலேயே கடலட்டை பண்ணைகளை மட்டுப்படுத்தி சிறு தொழிலாளர்களுக்கு பாதிப்பில்லாத வகையில் திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் மீன் உற்பத்தியாகும் பிரதேசங்களில் கடலட்டை பண்ணை அமைக்க கூடாது என்றும் கோரினோம்.
அனுமதியைப் பெற்று கடலட்டை பண்ணையில் ஈடுபட்டால் அதில் எமக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை.

கடலில் சீட் போட்டு கடலட்டை பண்ணைக்கு கொட்டில் அமைப்பதற்கு எந்த அதிகாரமும் யாருக்கும் இல்லை. இவர்களுக்கு அதிகாரம் வழங்கியது யார்? கொழும்புத்துறை பகுதியில் ஹோட்டல் போன்று கடல் அட்டை பண்ணைக்கு கொட்டில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

2023 ஜனவரிக்கு இடையில் யாழ் மாவட்டத்தில் கரையோர பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்களம் நாங்கள் அனுப்பிய கடிதத்திற்கு பதில் அனுப்பிவிட்டால் ஜனாதிபதி உட்பட சகல வெளிநாட்டு தூதரகங்களுக்கும் இது தொடர்பாக மகஜர் கொடுப்போம். மக்களுக்கு சேவை செய்வதாக கூறிக்கொண்டு அந்த திணைக்களம் எதற்கு இருக்கின்றது என தெரியவில்லை

5000 ஏக்கரில் கடலட்டை அமைக்கப்படுமென கடற்றொழில் அமைச்சர் கூறுகிறார். கரையோர சூழலை பாதுகாக்க வேண்டிய குறித்த திணைக்களம் இது தொடர்பாக மௌனமாக இருக்கிறது எனவும் குற்றஞ்சாட்டினார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.