;
Athirady Tamil News

வௌிநாட்டு கடனட்டைகள் மூலம் மோசடியில் ஈடுபட்ட இளைஞன்!!

0

கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் சமூக ஊடக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு கடன் அட்டைகளின் தரவுகளைப் பயன்படுத்தி இலட்சக்கணக்கான ரூபா பெறுமதியான பொருட்களை இணையத்தின் ஊடாக கொள்வனவு செய்து மேற்கொள்ளப்பட்ட மோசடி தொடர்பில் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

18 வயதுடைய சந்தேக நபர் கூலித் தொழிலாளியாக வேலை செய்து சம்பாதித்த பணத்தில் கைத்தொலைபேசியை வாங்கிக் கொண்டு இணையத்தின் ஊடாக இந்த மோசடியை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் வெளிநாட்டு கடன் அட்டைகள் மூலம் பொருட்களை கொள்வனவு செய்வதாக இணையம் மூலம் பொருட்களை விநியோகிக்கும் நிறுவனம் ஒன்று கணனி குற்றப் புலனாய்வுப் பிரிவின் சமூக ஊடக குற்றப் புலனாய்வுப் பிரிவில் அண்மையில் முறைப்பாடு செய்திருந்தது.

இதன்படி, கிடைக்கப்பெற்ற புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட புலனாய்வுப் பிரிவினர் சந்தேகநபரை கடந்த 5 ஆம் திகதி குருநாகல் தும்மலசூரிய பிரதேசத்தில் வைத்து கைது செய்தனர்.

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது சுமார் 5 இலட்சம் வெளிநாட்டு கடன் அட்டைகளின் தரவுகள் அவரது கணினியில் இருப்பது தெரியவந்துள்ளது.

அந்தத் தரவுகளைப் பயன்படுத்தி, சந்தேகநபர் இலங்கையிலிருந்து இணையம் ஊடாக சுமார் 55 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை ஆர்டர் செய்து 10 முதல் 15 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அவர் பெரும்பாலும் வாசனை திரவியங்கள், அழகுசாதனப் பொருட்கள், வெளிநாட்டு மதுபானங்கள், பல்வேறு உணவுகள் மற்றும் கேமராக்கள் மற்றும் கணினி உபகரணங்களை வாங்கியுள்ளார்.

சந்தேக நபர் பொருட்களை கொள்வனவு செய்ய பயன்படுத்திய கடன் அட்டைகள் சுமார் 10 வெளிநாடுகளுக்கு சொந்தமானது எனவும், சர்வதேச ரீதியில் தகவல்களை பெற கடினமாக உள்ள நாடுகளையே அவர் தெரிவு செய்துள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சில கடன் அட்டைகள் வெளிநாட்டு வங்கிகளால் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

18 வயதுடைய சந்தேகநபர் இந்த மோசடியை எவ்வாறு மேற்கொள்வது என்பதை யூடியூப் மூலம் கற்றுக்கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் நேற்று (06) புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, ஜனவரி 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த மோசடியில் தொடர்புடைய மேலும் பல முக்கிய சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களையும் கைது செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.