;
Athirady Tamil News

வரதட்சணை வழக்கு- ஐ.பி.எஸ். அதிகாரி வருண்குமார் ரூ.11 லட்சம் இழப்பீடு வழங்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு !!

0

தமிழக போலீஸ் ஐ.பி.எஸ். அதிகாரி வருண்குமார். இவர் கடந்த 2010-ம் ஆண்டு சென்னையில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் படிக்கும் போது பிரியதர்ஷினி என்ற பெண்ணை காதலித்தார். ஐ.பி.எஸ் பணி கிடைத்தவுடன் பிரியதர்ஷினியை திருமணம் செய்து கொள்ள 2 கிலோ தங்கம், ரூ.50 லட்சம் ரொக்கம் மற்றும் பி.எம்.டபிள்யூ சொகுசு காரை வரதட்சணையாக கொடுக்க வேண்டும் என்று கேட்டதாக தெரிகிறது. இதனால் வருண்குமார்-பிரியதர்ஷினி இடையே தகராறு ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் வருண்குமார், பிரியதர்ஷினியை மிரட்டியும், இருவருக்குமிடையே நடையெற்ற உரையாடல் உள்ளிட்ட ஆதாரங்களை அழித்தாக போலீசில் புகார் செய்யப்பட்டது.

ஆனால் நடவடிக்கை எடுக்காததால் ஐகோர்ட்டின் உத்தரவுப்படி வருண்குமார் மீதும், அவரது தாய் கல்பனா மற்றும் தந்தை வீரசேகரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து வருண்குமார் சைதாப்பேட்டை கோர்ட்டில் சரண் அடைந்தார். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதற்கிடையே தன் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்யவும், வழக்கை ரத்து செய்யக்கோரியும் வருண்குமார் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து கடந்த 26.06.2018-ம் ஆண்டு வருண்குமார் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும், குற்றப்பத்திரிகையையும் ரத்து செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து பிரியதர்ஷினி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார் . இந்த மனு தொடர்பாக தமிழக அரசு மற்றும் வருண்குமார் உள்ளிட்டோர் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து இருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் சமரசம் செய்து கொள்ள விரும்புவதாக ஐ.பி.எஸ். அதிகாரி வருண்குமார் தரப்பில், மனுதாரர் பிரியதர்ஷினியின் வக்கீல் விகஸ் சிங்கை அணுகினர். இந்த விவகாரத்தில் 11 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வருண்குமார் ஒப்புக்கொண்டார். இதனைதொடர்ந்து சமரச விவகாரத்தை சுப்ரீம்கோர்ட்டில் தெரிவித்ததை ஏற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஆனால் இழப்பீட்டுத் தொகையை பிரியதர்ஷினி தனக்கென பெற்றுக்கொள்ள விருப்பமில்லை என்று தெரிவித்தார். மேலும் அதனை சுப்ரீம் கோர்ட்டு வழக்கறிஞர் நலநிதிக்கு வழங்க வேண்டும் என்று கூறினார். இதனை ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு ரூ. 11 லட்சத்தை வழக்கறிஞர் நலநிதிக்கு 10 நாட்களுக்குள் வருண்குமார் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

மேலும் இந்த விவகாரத்தில் வருண்குமாருக்கு எதிரான வரதட்சணை தடுப்பு சட்ட வழக்கு, ஐ.டி. சட்டம் 66ன் படியும், ஐ.பி.சி 204ன் கீழ் பதியப்பட்ட வழக்குகளையும் ரத்து செய்வதாகவும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. இந்த வழக்கின் சாட்சிகளை எந்தவித தொந்தரவு செய்யக்கூடாது என்றும், இரு தரப்பும் எவ்வித பரஸ்பரம் இடையூறுகளை செய்யக்கூடாது என்றும் உத்தரவிட்டு ஐ.பி.எஸ் அதிகாரி வருண்குமாருக்கு எதிரான வரதட்சணை வழக்கை சுப்ரீம் கோர்ட்டு முடித்து வைத்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.