;
Athirady Tamil News

காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சி கூட்டணிக்கு அச்சாரம்… சந்திரசேகர ராவ் பொதுக்கூட்டத்தில் இணைந்த தலைவர்கள்!!

0

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தன்னுடைய தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை பாரத ராஷ்டிரிய சமிதி என்று தேசிய கட்சியாக அறிவித்தார். பல்வேறு மாநிலங்களில் போட்டியிட உள்ளதாகவும் கூறினார். இந்நிலையில், பாரத ராஷ்டிரிய சமிதி கட்சியின் முதல் பொதுக்கூட்டம் கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் தலைமையில் கம்மத்தில் உள்ள மைதானத்தில் இன்று இரவு பிரமாண்டமாக நடைபெற்றது. காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகளின் கூட்டணியை உருவாக்குவதில் தீவிரம் காட்டி வரும் சந்திரசேகர ராவ், அதற்கான முதல் படியாக, கட்சியின் முதல் பொதுக்கூட்டத்தை இன்று நடத்தி உள்ளார்.

இதில், ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன், சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தேசிய அரசியலில் சந்திரசேகர ராவ் கால் பதிப்பதை ஆதரித்து வரும் மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி, கர்நாடகாவில் பஞ்சரத்ன ரத யாத்திரை மேற்கொண்டு வருவதால், அவர் இன்றைய பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் நிறைவுபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக இந்த பொதுக்கூட்டம் நடைபெற்றிருப்பது, தேசிய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இன்று சந்திரசேகர ராவின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்துக் கட்சிகளும் காங்கிரசின் யாத்திரையைத் தவிர்த்துவிட்டன.

பாஜகவுக்கு எதிராக வலுவான அணியை அமைப்பதற்கான சந்திரசேகர ராவின் முயற்சிக்கு பலன் கிடைக்குமா? என்பது விரைவில் தெரியவரும் அதேசமயம், பாஜக அல்லது காங்கிரசின் ஆதரவின்றி எந்த மூன்றாம் அணியும் இதுவரை வெற்றி பெற்றதில்லை. முன்னாள் பிரதமர் வி.பி.சிங் தலைமையிலான ஆட்சிக்கு பா.ஜ.க.வின் ஆதரவு இருந்தது. அவருக்குப் பின் வந்த சந்திரசேகர், தேவகவுடா மற்றும் ஐகே குஜ்ரால் தலைமையிலான அரசுகளுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.