சரணடைந்த அம்பிட்டிய தேரர் பிணையில் விடுவிப்பு!
தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் என கூறிய சம்பவம் தொடர்பாக பிடியாணை பிறப்பிக்கப்பட்ட அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை (17) சரணடைந்தார்.
அதனை அடுத்து அவரை தலா ஒரு இலட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரபிணையில் செல்ல அனுமதித்து உத்தரவிட்டு, ஜனவரி மாதம் 20 ஆம் திகதி வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார்.
கடந்த 2023-10-23 திகதி ஊடகங்களுக்கு சுமணரட்ன தேரர் வழங்கிய செவ்வியின் போது வடக்கில் உள்ள தமிழ் மக்களையும் தெற்கில் உள்ள தமிழ் மக்களையும் வெட்டிக் கொல்ல வேண்டும்’ என தெரிவித்தார்.
இனங்களிடையே முறுகலை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களைத் தெரிவித்தமை தொடர்பில் மட்டக்களப்பு அம்பிட்டிய சுமண ரத்தன தேரரை கைது செய்வதற்கான பகிரங்க பிடியாணை நேற்று முன்தினம் (15) பிறப்பிக்கப்பட்டது.
அத்துடன் தேரருக்கு வெளிநாட்டு பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இந்தநிலையில் தேரருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் 26 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மட்டக்களப்பு நீதவான் நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி ஊடகங்களுக்கு கருத்துரைத்த மட்டக்களப்பு அம்பிட்டிய சுமண ரத்தன தேரர், இனங்களிடையே முறுகலை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்தார்.
வன்முறையை ஏற்படுத்தும் வகையில் கருத்துரைத்தமைக்கு எதிராக, சட்டத்தரணி தனுக்க ரனஞ்சக என்பவரால் முறைப்பாடு செய்யப்பட்டது.
அந்த முறைப்பாடு தொடர்பிலேயே சுமண ரத்தன தேரரை கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.