;
Athirady Tamil News

எல்லையில் தொடர்ந்து பதற்றம்: சீன ராணுவத்தின் போர் தயார்!!

0

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 15-ந் தேதி கிழக்கு லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், சீன ராணுவத்தினர் கொடிய ஆயுதங்களுடன் வந்து, இந்தியப் படைவீரர்கள் மீது பயங்கர தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இந்தியப் படை வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தது நாடெங்கும் பெரும்கொந்தளிப்புகளை ஏற்படுத்தியது.

இந்த மோதலின்போது சீனப்படையினர் 40-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த மோதலைத் தொடர்ந்து, லடாக் எல்லையில் இரு தரப்பும் படைகளையும், தளவாடங்களையும் குவித்ததால் பதற்றம் தொடர்ந்தது. பதற்றத்தைத் தணிப்பதற்கு இருதரப்பு ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்தில் தொடர் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதுவரை 17 சுற்று பேச்சு வார்த்தைகள் நடந்துள்ளன. இதன் பலனாக மோதல் புள்ளிகளில் சிலவற்றில் இருந்து இரு தரப்பும் படைகளை விலக்கின. ஆனாலும் சீனா தொடர்ந்து வாலாட்டி வருகிறது.

சீனப்படையினர் அங்கு அத்துமீறி கட்டமைப்புகளை ஏற்படுத்த முயற்சிப்பதும், அவர்களை இந்தியப்படையினர் துரத்தியடிப்பதும் தொடர்கதையாக நீளுகிறது. இதனால் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில், சீன அதிபர் ஜின்பிங், பீஜிங்கில் உள்ள சீன ராணுவ தலைமையகத்தில் இருந்தவாறு, கிழக்கு லடாக்கில் இந்திய, சீன எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள தனது நாட்டுப்படையினரின் போர் தயார் நிலையை நேற்று காணொலிக்காட்சி வழியாக திடீரென ஆய்வு செய்தார். அப்போது எல்லை நிலைமை குறித்து அவர், சீனப்படையினருடன் கலந்துரையாடினார்.

அப்போது அவர் கடந்த சில ஆண்டுகளாக அந்தப் பகுதி தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பதைச் சுட்டிக்காட்டி, இது சீன ராணுவத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்து சீனப்படையினரிடம் விசாரித்தார். இதற்கு சீனப் படைவீரர் ஒருவர் பதில் அளிக்கையில், “நாங்கள் தற்போது 24 மணி நேரமும் எல்லையை தீவிரமாக கண்காணித்து வருகிறோம்” என தெரிவித்தார்.

அவர்களது அன்றாட பணி நிலைமை பற்றி ஜின்பிங் கேட்டதோடு, விருந்தோம்பல் தன்மையற்ற நிலப்பரப்பில் சாப்பாட்டுக்கு புதிய காய்கறிகள் கிடைக்கின்றனவா என பரிவுடன் விசாரித்து அறிந்தார். இதையொட்டி சீன அரசு தரப்பு ஊடகம் கூறுகையில், “எல்லையில் உள்ள படைவீரர்களிடம் அவர்கள் மேற்கொண்டு வருகிற ரோந்துப்பணிகள், நிர்வாகப்பணிகள் பற்றி அதிபர் ஜின்பிங் கேட்டறிந்தார்.

சீனப்படை வீரர்கள் எல்லைப் பாதுகாப்பின் மாதிரிகள் என பாராட்டியதுடன், அவர்கள் தொடர்ந்து தங்களது முயற்சிகளில் ஈடுபடவும், புதிய பங்களிப்புகளை வழங்கவும் ஊக்கம் அளித்தார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.