;
Athirady Tamil News

இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு 275 மில்லியன் ஒதுக்கீடு!!

0

இலங்கையின் 75வது சுதந்திர தினம் 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4ம் தேதி கொண்டாடப்படவுள்ளது.

75வது சுதந்திர தினத்தை, கடந்த ஆண்டுகளை விடவும் பிரமாண்டமான முறையில் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதற்காக 275 மில்லியன் ரூபா நிதியை அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது.

வரலாற்றில் முதல் தடவையாக அரச ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை கூட, நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில் வழங்க முடியாத அளவிற்கு, நாடு பாதாளத்திற்கு வீழ்ந்துள்ள இந்த தருணத்தில், சுதந்திர தின நிகழ்வை மிக பிரமாண்டமான முறையில் கொண்டாட முடியுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

அரச ஊழியர்களுக்கு இரு சந்தர்ப்பங்களில் சம்பளம் செலுத்த தீர்மானம்

நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், அரச ஊழியர்களுக்கு உரிய தேதியில் சம்பளத்தை வழங்க முடியாத நிலைமை உருவாகியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.இலங்கை வரலாற்றில் முதல் தடவையாகவே இவ்வாறான ஒரு நிலைமை உருவாகியுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

இதன்படி, நிறைவேற்று அதிகாரத்தில் இல்லாத அரச ஊழியர்களுக்கு முதலில், உரிய தேதியில் சம்பளத்தை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

அதேபோன்று, அரசு தொழிலில் நிறைவேற்று அதிகாரத்திலுள்ள ஊழியர்களுக்கு சில தினங்கள் பிந்தியோ அல்லது ஒரு வாரம் கழித்தோ சம்பளத்தை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கை அரசாங்கத்தின் வருமானம், 141 பில்லியன் ரூபா எனவும், அந்த மாதத்தின் செலவீனம் 154 பில்லியன் ரூபா எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கடந்த டிசம்பர் மாதத்தின் செலவீனங்களை அமைச்சர் பந்துல குணவர்தன பட்டியலிட்டு காண்பித்தார். இதன்படி, 88 பில்லியன் ரூபா சம்பளத்திற்காக செலவிடப்பட்டுள்ளதாகவும், 30 பில்லியன் ரூபா சமுர்த்தி நிவாரணம் மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவிற்காக செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

மேலும், 8.7 பில்லியன் ரூபா மருந்து கொள்வனவு உள்ளிட்ட சுகாதார தேவைகளுக்கும், 6.5 பில்லியன் ரூபா உரக் கொள்வனவிற்காகவும் செலவிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், அரச கடன்களுக்கான வட்டிகளை செலுத்துவதற்காக 182 பில்லியன் ரூபா அச்சிடப்பட்டதாக அமைச்சர் பந்துல குணவர்தன கூறுகின்றார். இந்த நிலையில், பணம் அச்சிடுவதை அரசாங்கம் கொள்கை அடிப்படையில் தற்போது இடைநிறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சம்பளம் மற்றும் ஓய்வூதிய செலவீனங்கள் 633 வீதத்தினால் உயர்வு

2000ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரையான காலப் பகுதியில் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்கான செலவீனங்கள் 633 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கின்றார். இலங்கை அரச ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவுகளுக்காக 2000ம் ஆண்டு 152 பில்லியன் ரூபா மாத்திரமே அரசாங்கத்தினால் செலவிடப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவுகளுக்காக 2005ம் ஆண்டு, 185 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும், 2010ம் ஆண்டு அரச ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவுகளுக்காக 478 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் பந்துல குணவர்தன குறிப்பிடுகின்றார்.

2000ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரையான காலப் பகுதியில் அரச ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவுகளுக்காக 500 பில்லியன் ரூபாவிற்கும் குறைவான தொகையே செலவிடப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.2015ம் ஆண்டாகும் போது, அந்த செலவீனமானது, 716 பில்லியன் ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. 2020ம் ஆண்டாகும் போது 1051 பில்லியன் ரூபாவாகவும், 2021ம் ஆண்டு 1115 பில்லியன் ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதன்படி, 2000ம் ஆண்டு 152 பில்லியனாக காணப்பட்ட அரச ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவுகளுக்கான செலவீனம், 2021ம் ஆண்டு 1115 பில்லியன் வரை அதாவது, 633 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கின்றார்.

தொடர்ச்சியாக அரச ஊழியர்களை, அரச பணிகளில் இணைத்துக்கொண்டமையே, இந்த நிலைமைக்கான காரணம் என அவர் குறிப்பிடுகின்றார்.

”அரச ஊழியர்களுக்கான சம்பளம், ஓய்வூதிய கொடுப்பனவுகளை கூட உரிய தேதியில் செலுத்த முடியாத நிலைமைக்கு திறைசேரி தள்ளப்பட்டுள்ளது. நிதி அமைச்சு அந்த நிலைமையை எதிர்நோக்கியுள்ளது. இது குறுகிய காலத்திற்கான நிலைமை கிடையாது. கடந்த காலங்களில் அரச பணிகளுக்கு தொடர்ச்சியாக ஆட் சேர்ப்பு இடம்பெற்றது. அரச ஊழியர்களுக்கான சம்பளம் பாரிய விகிதாசாரத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் அதிகரிக்கப்பட்டது,” என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கின்றார்.

இந்த சந்தர்ப்பத்தில் கடன்களை பெற்றுக்கொள்வதற்கோ அல்லது நிதி அச்சிடுவதற்கோ இயலுமை தமக்கு கிடையாது என அவர் கூறுகின்றார். கட்டாயம் செலுத்த வேண்டிய கொடுப்பனவுகளை செலுத்துவதற்கு கூட, இலங்கை அரசாங்கத்திடம் பணம் கிடையாது என்கின்றார் பந்துல குணவர்தன.

இதற்கு முன்னரான காலத்தில், கடன்களை பெற்றேனும், பணத்தை அச்சிட்டேனும் சம்பளம் உள்ளிட்ட கொடுப்பனவுகளை செலுத்தியதாக அவர் குறிப்பிடுகின்றார். எனினும், இன்று அவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாது என அவர் கூறுகின்றார்.

“இந்த செலவுகளை குறைக்க முடியாது. சம்பளம் கொடுப்பதை நிறுத்த முடியாது. ஓய்வூதியம் கொடுப்பதை நிறுத்த முடியாது. கட்டாய கொடுப்பனவுகளை செலுத்த இலங்கை அரசுக்கு வருமானம் இல்லை.” எவ்வாறேனும், இந்த கொடுப்பனவுகளை செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.

”யாரும் எந்தவிதத்திலும் சந்தேகத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை கிடையாது. சம்பளத்தை வழங்குவோம். ஓய்வூதியத்தை வழங்குவோம். மருந்து வகைகளுக்கும், உரத்திற்கும் எவ்வாறேனும் பணத்தை செலுத்துவோம்” என அவர் குறிப்பிடுகின்றார்.
அமைச்சுக்களின் செலவீனங்கள் 6 வீதத்தால் குறைப்பு

அனைத்து அமைச்சுக்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள முழு நிதித் தொகையில் 6 வீதத்தை மீளப் பெற்றுக்கொள்வதற்கு அமைச்சர் அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கின்றார்.

2023ம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக ஒதுக்கீடு செய்யப்பட்ட முழுத் தொகையில் 5 வீதத்தை மீளப் பெற்றுக்கொள்ளும் யோசனையை ஜனாதிபதி, நிதி அமைச்சர் என்ற விதத்தில் முன்வைத்துள்ளார்.

இந்த நிலையில், அத்தியாவசிய மருந்து கொள்வனவுக்காக சுகாதார அமைச்சு 10 பில்லியன் ரூபாவை கோரியுள்ளது. இதையடுத்து, அமைச்சுக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியில் மேலும் ஒரு வீதத்தை மீளப் பெற்றுக்கொள்ள அமைச்சரவைக்கு யோசனையொன்று முன்வைக்கப்பட்டது.

இதன்படி, அமைச்சுக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள முழுத் தொகையில் 6 வீதத்தை மீளப் பெற்றுக்கொள்ள அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது. அமைச்சுக்களின் எண்ணிக்கைகளை குறைத்து, செலவீனங்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் குறிப்பிடுகின்றார்.
பிரமாண்டமான சுதந்திர தின நிகழ்வு கொண்டாடப்பட வேண்டுமா ?

இந்த சுதந்திர தின நிகழ்வுகளை கொண்டாடுவதற்கு செலவிடப்படும் பணத்திற்கு பதிலாக, மின்சார வெட்டை தவிர்ப்பதற்கு அந்த பணத்தை பயன்படுத்த முடியும் என சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த விடயம் தொடர்பில், அமைச்சர் பந்துல குணவர்தனவிடம், ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

”எந்தவொரு நாட்டிலும் சுதந்திர தின நிகழ்வுகளை நடத்துவார்கள். நாடொன்றினால் நடத்த முடியுமான பிரமாண்டத்திற்கு நடத்துவார்கள். தூதரகங்களில் கொண்டாடுவார்கள். வெளிநாட்டு தூதரகங்கள், அவ்வாறே சர்வதேச தொடர்புகளை பேணும்” என அவர் கூறுகின்றார்.

”நாடொன்று தொடர்பில் உலகம் அவதானம் செலுத்தும் தினமாக சுதந்திர தினம் காணப்படுகின்றது” என அமைச்சரவை பேச்சாளர் குறிப்பிடுகின்றார்.

”சுதந்திர தின நிகழ்வுக்காக 275 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாளொன்றில் மின்வெட்டை தவிர்ப்பதற்காக 357 மில்லியன் ரூபா செலவிடப்படுகின்றது. இவ்வாறான விடயங்களை அரசியல் ரீதியாக பார்க்க வேண்டாம். சுதந்திரம் கிடைத்து 75 வருடங்களை, சாதாரண நிகழ்வுகளுக்கு அப்பாற் சென்று, பிரமாண்டமாக கொண்டாட வேண்டும்” என பந்துல குணவர்தன தெரிவிக்கின்றார்.
75வது சுதந்திர தினம், எதிர்காலத்திற்கான முதலீடு – ரணில் விக்ரமசிங்க

இலங்கையின் 75வது சுதந்தர தினமானது, எதிர்காலத்திற்கான முதலீடு என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.75வது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் போது, மக்களை பட்டினியால் வைத்திருக்க முடியாது எனவும் அவர் கூறுகின்றார்.

”75வது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் போது, மக்களை பட்டினியால் வைக்க முடியாது. அதற்காக முடியுமானளவு பணத்தை ஒதுக்குவோம். 75வது சுதந்திர தினத்தில் எதிர்கட்சியிடம் ஒன்றை கேட்டுக்கொள்கின்றேன். எமது அரசியல் முறையை மாற்றியமைப்போம் என கேட்டுக்கொள்கின்றேன். இந்த சந்தர்ப்பத்தில் மக்களுக்கு நிவாரணங்களை பெற்றுக்கொடுப்பதற்காக ஒன்றிணைந்து வேலை செய்வோம். மக்களை இந்த துன்பத்திலிருந்து மீட்டெடுக்க வேண்டும். இதற்காக பொறுப்பு அரச தரப்பிற்கும், எதிர்கட்சிக்கும் எதிராக கை நீட்டிக் கொள்வது கிடையாது. நாம் ஒன்றிணைந்து வேலை செய்வோம். கடன் மறுசீரமைப்பு தொடர்பிலான இந்தியா மற்றும் சீனாவுடனான பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்துள்ளன” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.