;
Athirady Tamil News

மக்கள் விரோத அரசாங்கத்தின் இயல்பு இப்போது வெளிப்படுத்தப்படுகிறது – சஜித் பிரேமதாச!!

0

மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கியமான உயர்தரப் பரீட்சையின் போது கூட மின்சாரத்தை வழங்க முடியாத அரசாங்கம் எந்தளவு மக்கள் விரோத அரசாங்கமாக உள்ளது என்பதை புரிந்து கொள்ள முடியும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நடைபெறும் ஆரம்ப நாளிலும் மின்சாரத்தை துண்டிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அரசாங்கத்தின் இயல்பை நாம் புரிந்து கொண்டதன் காரணமாகவே அதன் தன்னிச்சையான மற்றும் இரக்கமற்ற தீர்மானங்களைக் கண்டு நாம்ஆச்சரியப்படவில்லை.

தடையின்றி மின்சாரத்தை வழங்குவதற்கு மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். இது தனது பொறுப்பைத் தட்டிக்கழிப்பதற்கான காரணமாகும்.

3 இலட்சம் மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கியமான உயர்தரப் பரீட்சையின் போது கூட மின்சாரத்தை வழங்க முடியாத அரசாங்கம் எந்தளவு மக்கள் விரோத அரசாங்கமாக உள்ளது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

2009 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின் 30 ஆம் பிரிவின் பிரகாரம், இலங்கை மின்சார சபை (விநியோக உரிமதாரர்) 2022 ஆம் ஆண்டிற்கான 82 வீத கட்டண அதிகரிப்புக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஒப்புதலை கோரியது. இத்துடன் நின்றுவிடாது பல முறை மின் கட்டணம் பெருமளவு அதிகரிக்கப்பட்டது.

வாழ்வின் ஆயிரமாயிரம் சிரமங்களுக்கு மத்தியிலும்,வாழ்க்கைப் போக்கை பற்றிக்கொண்டிருக்கும் நாட்டு மக்களின் மூச்சை இறுக்காமல், சலுகை முறையொன்றைத் தயாரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும், இது குறித்து அரசாங்கம் அக்கறை கொள்வதாக இல்லை.

மின்சக்தியை விற்கும் அரசாங்கத்தின் மறைமுக நிகழ்ச்சி நிரலின் பிரகாரம், அரசாங்கத்தின் கூட்டு நாடகம் வெளிவருவது மீண்டும் மீண்டும் நிரூபணமாகிறது. உயர்தரப் பரீட்சையின் போதும் மின்சாரத்தை துண்டித்து அரசாங்கம் எதிர்பார்ப்பது அதன் நோக்கிலாகவும் இருக்கலாம்.

வாழ்வாதார நெருக்கடியில் மூழ்கிக் கிடக்கும் மக்களுக்கு மின் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளதோடு, உயர்தரப் பரீட்சைக்கு முகம்கொடுக்கும் பிள்ளைகளின் எதிர்காலத்தை இருளில் மூழ்கடிக்கும் வகையில்பரீட்சை நாட்களிலும் மின்சாரத்தை துண்டிக்க தீர்மானம் எடுக்கப்படுவதில் நாட்டின் எதிர்காலம் இருளில் மூழ்கியுள்ளது.

எனவே இந்த வெட்கக்கேடான முடிவை அரசாங்கம் உடனடியாக மீளப் பெற்று, தொடர்ச்சியாக மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். அது அவ்வாறு இடம் பெறாவிட்டால் இதற்கு எதிரான மக்கள் சாபத்தில் இருந்து அரசாங்கம் தப்ப முடியாது என்பதையும் சுட்டிக்காட்டுகிறோம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.