திருப்பதியில் ரூ.300 தரிசன டிக்கெட்டுகளை கூடுதலாக ரூ.21 ஆயிரத்துக்கு விற்ற 2 பேர் கைது!!
திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். பக்தர்கள் சிரமம் இன்றி காத்திருக்காமல் தரிசனம் செய்வதற்காக தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் ரூ.300 டிக்கெட்டுகள் ஆன்லைனில் மாதந்தோறும் வெளியிடப்பட்டு வருகிறது. தரிசன டிக்கெட்டுகள் பெற்ற பக்தர்கள் வரிசையில் காத்திருக்காமல் அவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு சென்று தரிசனம் செய்து வருகின்றனர்.
இதேபோல் இலவச தரிசனத்திலும் டைம் ஸ்லாட் முறை கொண்டுவரப்பட்டு பக்தர்களுக்கு டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. ரூ.300 மற்றும் இலவச டைம்ஸ் லாக் டிக்கெட்டுகள் பெறாமல் திருமலைக்கு வரும் பக்தர்கள் எப்படியாவது சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்பதற்காக அங்குள்ள புரோக்கர்களை நாடி செல்கின்றனர். இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் புரோக்கர்கள் தரிசன டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்கின்றனர்.
மேலும் சிலர் போலியான தரிசனம் டிக்கெட்டுகளை விற்று பக்தர்களை மோசடி செய்து வருகின்றனர். இதுபோன்ற போலியான நபர்களிடம் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம் என திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் பலமுறை பக்தர்களுக்கு அறிவுரை வழங்கியும் ஒரு சிலர் இதுபோன்று பணத்தை இழந்து வருகின்றனர். இந்த நிலையில் ஐதராபாத்தை சேர்ந்த சேஷா பட்டர் வசந்த் என்பவர் தனது குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் தரிசனத்திற்கு வந்திருந்தார்.
ஆனால் அவரிடம் தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் இல்லாததால் தேவஸ்தானத்தில் தனியார் செக்யூரிட்டியாக வேலை செய்யும் நாகபூஷணம் என்பவரை அணுகினார். அவர் கார் டிரைவர் நாகராஜிடம் இருந்து ரூ.300 தரிசன டிக்கெட்டுகளை 7-ஐ ரூ.21 ஆயிரத்துக்கு வாங்கிக் கொடுத்தார். இதுகுறித்து சேஷ பட்டர் வசந்த் தேவஸ்தான அதிகாரிகளிடம் புகார் செய்தார். விஜிலன்ஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்ட ஊழியர் ஒருவர் டிக்கெட்களை பெற்று தனியார் செக்யூரிட்டி ஊழியர் மூலம் டிக்கெட்டுகளை விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து திருமலை போலீசார் வழக்கு பதிவு செய்து நாகபூஷணம் மற்றும் கார் டிரைவர் நாகராஜ் ஆகியோரை கைது செய்தனர். இதேபோல் விஜயவாடாவை சேர்ந்த பிரபாகர் ராவ் என்பவர் தனது குடும்பத்தினருடன் தரிசனத்திற்கு வந்தார். அவரிடம் தரிசனத்திற்கு உண்டான டிக்கெட்டுகள் இல்லாததால் திருமலையில் உள்ள சிலரிடம் தரிசன டிக்கெட் கிடைக்குமா என விசாரித்தார். அப்போது அங்கிருந்த புரோக்கர் ஒருவர் வி.ஐ.பி. பிரேக் தரிசன டிக்கெட் உள்ளதாக கூறி 6 டிக்கெட்டுகளை ரூ.12 ஆயிரத்திற்கு விற்பனை செய்தார்.
பிரபாகர் ரெட்டி தரிசனத்திற்கு செல்லும்போது அவரது டிக்கெட்டை சோதனை செய்த அதிகாரிகள் போலி என்பதை கண்டறிந்தனர். இதையடுத்து தேவஸ்தான அதிகாரிகள் போலி தரிசன டிக்கெட்டுகளை விற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பதியில் நேற்று 74, 242 பேர் தரிசனம் செய்தனர். 25,862 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 4.08 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.