;
Athirady Tamil News

மாமல்லபுரத்திற்கு இன்று மாலை வருகை- ஜி20 பிரதிநிதிகளுக்கு 60 வகை உணவு!!

0

சென்னையில் ஜி20 மாநாடு கருத்தரங்கு நேற்று தொடங்கியது. நாளை வரை இது நடைபெறுகிறது. கருத்தரங்கில் கலந்துகொள்ளும் வெளிநாட்டு பிரதிநிதிகள் சுமார் 100 பேர் இன்று மாலை 3 மணிக்கு மாமல்லபுரம் செல்கிறார்கள். அவர்கள் அங்குள்ள புராதன சின்னங்களான ஐந்துரதம், அர்சுனன்தபசு, வெண்ணெய் உருண்டைக்கல் பாறை, கடற்கரை கோவில் பகுதிகளை பார்வையிட உள்ளனர்.

இதையொட்டி அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. மாமல்லபுரம் புராதன சின்னங்கள் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. சுமார் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜி20 பிரதிநிதிகள் வருகையை முன்னிட்டு இன்று சுற்றுலா பயணிகள் மாமல்லபுரம் உள்ளே நுழைய தடைவிதிக்கப்பட்டு உள்ளது. அங்குள்ள டோல்கேட் மூடப்பட்டது. சிறப்பு பாதுகாப்பு படை வீரர்கள், அதிரடிப்படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலை உள்ளிட்ட 7 இடங்களில் போலீஸ் சோதனை சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. நேற்று இரவு புராதன சின்னங்கள் ஜி20 லோ கோவுடன் மின்னொளியில் மின்னியது அனைவரையும் கவர்ந்தது. வடக்கு மண்டல ஐ.ஜி கண்ணன், டி.ஐ.ஜி பகலவன், செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப், மாமல்லபுரம் டி.எஸ்.பி ஜெகதீஸ்வரன் உள்ளிட்டோர் பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணித்து வருகிறார்கள். விடுதிகளில் தங்கியிருக்கும் வெளிநாட்டு பயணிகளை வெளியே அனுப்ப வேண்டாம் என்று விடுதி நிர்வாகத்தினருக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

மாலை 3 மணியளவில் மாமல்லபுரம் சிற்பங்களை பார்வையிடும் ஜி 20 பிரதி நிதிகளுக்கு வட நெம்மேலியில் உள்ள ஷெரட்டன் கடற்கரை விடுதியில் இரவு விருந்து அளிக்க அரசு ஏற்பாடு செய்து உள்ளது. வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு இந்திய மற்றும் சர்வதேச நாட்டு உணவுகளாக 50 முதல் 60 வகைகள் இடம் பெறுகின்றன. தற்போது சிறுதானிய ஆண்டு கடை பிடிக்கப்படுவதால் சாமை, தினை, வரகு உள்ளிட்ட சிறுதானிய உணவுகளும் அளிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். கடற்கரை விடுதியில் உணவு தயார் செய்யும் பகுதியில் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

வெளிநாட்டு பிரதிநிதிகள் தங்கி இருக்கும் ஷெரட்டன் விடுதியில் தமிழ் பாரம்பரிய சரித்திர நாடகம் நடத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது. 18-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்ட இந்தியாவின் முதல் பெண் விடுதலை போராட்ட வீராங்கனையான வீரமங்கை வேலுநாச்சியாரின் நாடகம் நடத்தப்பட இருக்கிறது. சுமார் 60 கலைஞர்கள் வேலு நாச்சியாரின் சரித்திர நிகழ்ச்சியை தத்ரூபமாக நடித்து காட்ட உள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீசார் கூறும்போது, புராதன சின்னங்கள் உள்ள சுற்றுலா பயணிகளுக்கு இன்று அனுமதி இல்லை. பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மாமல்லபுரத்தை சுற்றி 7 இடங்களில் வாகன சோதனை நடத்தப்படுகிறது என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.