பெட்ரோல் – டீசல் வாங்கும் மக்களுக்கு கடுமையான எச்சரிக்கை: இலங்கையில் மீண்டும் QR முறை..!
எரிபொருளுக்கான QR முறையை மீண்டும் நடைமுறைப்படுத்தியதன் மூலம் எரிபொருள் இருப்பை முறையாக மேலாண்மை செய்திருக்க முடியும் என பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பதில் தலைவரும், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் பெட்ரோலிய ஆலோசகருமான சிறில் சுதுவெல்ல தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலையை அதிகரிப்பதற்குப் பதிலாக இந்த நடவடிக்கையை எடுத்திருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் விலை அதிகரிப்பு
ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியதுடன், மேலும் நாட்டில் எரிபொருள் விநியோகத்தில் ஈடுபடும் பல்தேசிய நிறுவனங்கள், விலை அதிகரிப்பின் மூலம் மேலதிக இலாபத்தைப் ஈட்ட முடிந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையில் 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நீண்ட வரிசைகள் ஏற்பட்டன. இதனை தொடர்ந்து இலங்கையில் எரிபொருள் QR முறை முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஒவ்வொரு வாகனத்திற்கும் (வாகனப் பதிவு எண் அடிப்படையில்) QR குறியீடு வழங்கப்பட்டது. இதனால் வரிசைகள் குறைந்தன, சட்டவிரோத பதுக்கல் தடுக்கப்பட்டது, எரிபொருள் இறக்குமதி செலவு குறைந்தது.
QR முறை
இந்த நிலையில் தற்போது பலரும் எரிபொருளுக்கான QR முறையை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இவ்வாறான சூழலில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் தெரிவிக்கையில், போதிய எரிபொருள் கையிருப்பு உள்ளதால் QR முறை தேவையில்லை எனவும், பெட்ரோல் மற்றும் டீசல் கையிருப்பானது போதுமான அளவில் உள்ளது எனவும் கூறியுள்ளனர்.
இதேவேளை அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் எரிசக்தி பிரதி அமைச்சர் முஹம்மது இல்யாஸ் முஹம்மது அர்கம் ஆகியோர் தெரிவிக்கையில், பொதுமக்கள் அதிகமாக எரிபொருள் சேமித்து பதுக்கினால் QR முறை மீண்டும் அறிமுகப்படுத்தப்படும் என எச்சரித்துள்ளனர்.
மேலும் எரிபொருளுக்கான QR முறை தற்போது அவசியம் இல்லை என்ற போதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டால் அல்லது பதுக்கல் கட்டுப்படுத்த முடியாவிட்டால் குறித்த நடைமுறையை கொண்டு வர தயாராக இருப்பதாக பெட்ரோலியக் கூட்டுத்தாபன அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.