;
Athirady Tamil News

வன்முறைகளை நிறுத்தக் கோரி விழிப்புணர்வு போராட்டம்!!

0

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் நடைபெறும் வன்முறைகளை நிறுத்தக் கோரி ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் சமூக மட்ட அமைப்புக்கள் மற்றும் ஆலயங்கள் உள்ளிட்ட பொதுமக்களினால் இன்று (03) ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் முன்பாக விழிப்புணர்வு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அலையடிவேம்பு பிரதேசத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் குற்ற செயல்களும் வன்முறைகளும் பாடசாலை மாணவர்கள் நோக்கியதான போதைப் பொருள் விற்பனையும் பொதுமக்களாகிய தமது பாதுகாப்பையும் அடிப்படை உரிமைகளையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக தெரிவித்தே இப்போராட்டம் இடம்பெற்றது.

பிரதேச செயலகம் முன்பாக ஒன்று கூடிய மக்கள் பல்வேறு சுலோக அட்டைகளை ஏந்திவாறு போதைப்பொருள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை முன்னிறுத்தி குரல் எழுப்பியவாறு தமது எதிர்ப்பினை தெரிவித்தனர்.

அண்மைக்காலமாக ஆலையடிவேம்பு பிரதேசத்தில் பல கொள்ளைச் சம்பவங்கள் சட்ட விரோத செயற்பாடுகள் அதிகரித்த வண்ணமுள்ளதாகவும் குறிப்பாக ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வாழும் நீதிபதி ஒருவரது வீட்டில் இடம் பெற்ற கொள்ளைச் சம்பவம், நீதிமன்ற ஆவணங்களை அழிக்கும் போக்கில் பதிவேட்டறையை தீ வைத்தமை, எமது பிரதேச செயலாளருக்கு நேரடியாக விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தல், பாடசாலை ஆசிரியர்கள் மீதான கொலை அச்சுறுத்தல், சூதாட்ட விடுதிகள் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்ட முடியும் எனவும் கருத்து வெளியிட்டனர்.

இவ்வாறான தொடர் சம்பவங்களினால் பிரதேசத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாகவும் இதனை தடுக்க பொலிசார் ஆக்க பூர்வமான நடவடிக்கை எடுக்காமை, புலன் விசாரணையினை மேற்கொண்டு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களை கைது செய்யாமை, அவ்வாறானவர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யாமை போன்ற செயற்பாடுகள் பொலிஸார் மீது அவநம்பிக்கையினை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளதுடன் மறைமுக ஆதரவை பொலிசார் இவர்களுக்கு வழங்குகின்றனரா? எனும் சந்தேகமும் உருவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

பிரதேசத்தில் சூதாட்ட மையங்கள் இயங்கிவருவது தொடர்பான தகவல்களை மக்களால் வழங்கப்படுகின்றபோதும் பொலிசார் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பது சட்டவிரோத செயற்பாடுகளை இப்பிரதேசத்தில் ஊக்குவிப்பது போன்ற தோற்றப்பாட்டை உருவாக்கியுள்ளதாகவும் கூறுகின்றனர்.

ஆகவே பொலிஸ் உயர் அதிகாரிகள் அக்கறை கொண்டு அக்கரைப்பற்று பொலிசாரை இவ்விடயத்தில் கவனம் செலுத்தி சட்டவிரோத செயற்பாடுகளை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க பணிக்குமாறும் குற்றச் செயல்களுடன் நெருங்கிய தொடர்புடைய உறவை பேணும் பொலிசாரை உடனடியாக இடமாற்றம் செய்ய கோரிக்கை விடுப்பதாகவும் தமது ஆதங்கத்தை வெளியிட்டனர்.

இவ்விடயங்களை உள்ளடக்கியதான மகஜர் ஒன்றினை தயாரித்து ஜனாதிபதி மற்றும் சம்மந்தப்பட்ட அமைச்சர்கள் ஆணைக்குழுக்கள் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட உயர் மட்டத்தினருக்கு கையளிக்குமாறு வேண்டி ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரனிடம் பொதுமக்கள் கையளித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.