;
Athirady Tamil News

2050 இல் பசுமை பொருளாதாரத்தை உறுதி செய்ய செயற்திட்டத்தை ஆரம்பித்தது இலங்கை – ஜனாதிபதி!!

0

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் பசுமை பொருளாதாரத்தை ஸ்தாபிப்பதற்கான விசேட ஆற்றல் இலங்கைக்கு உண்டு என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

2050ஆம் ஆண்டளவில் உலகத்தை மிகச் சிறந்த நிலைக்கு மேம்படுத்துவதற்கும் பசுமை பொருளாதாரத்தை உறுதி செய்வதற்கும் என இயற்கைக்கேற்ப நம்மை தயார்ப்படுத்தும் திட்டம் மற்றும் தேசிய சுற்றுச்சூழல் செயற்திட்டம் ஆகியவற்றை இலங்கை அரசாங்கம் தயாரித்துள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

பசுமை வளர்ச்சிப் பாதையை நோக்கி இலங்கையின் மாற்றத்தை ஊக்குவிப்பதற்கான உத்திகள் மற்றும் வழிமுறைகள் தொடர்பிலான உயர்மட்ட நிகழ்வு நேற்று திங்கட்கிழமை (6) முற்பகல் கொழும்பு ஹில்டன் கிராண்ட் போல்ரூமில் நடைபெற்றது.

இந்நிகழ்வை சுற்றாடல் அமைச்சும் உலகளாவிய பசுமை வளர்ச்சிக்கான நிறுவனமும் (GGGI) ஏற்பாடு செய்திருந்தன.

காலநிலை மாற்றம் தொடர்பிலான புதிய சட்டமூலம் தயாரிக்கப்படவுள்ள அதேவேளை காடுகளை மறுசீரமைத்தல் மற்றும் மீட்டல் ஆகிய விடயங்களை உள்வாங்கும் வகையில் பழைய சுற்றுச்சூழல் சட்டத்தை ஈடு செய்யும் வகையிலான புதிய சட்டமூலமொன்று தயாரிக்கப்படவுள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும், இப்பிராந்தியத்தில் உள்ள தமது உடைமைகளை உயிரியல் கட்டமைப்புகளாக அடையாளம் கண்ட முதல் நாடாக இலங்கையே இருக்கும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நக்கிள்ஸ் மலைத்தொடர், ஹோர்ட்டன் சமவெளி, சிவனொளிபாத மலை, சிங்கராச வனம், மகாவலி ஆறு, ராமர் பாலம் என்பன அவ்வாறு அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது:

உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனத்துடன் நாளை ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதானது, பசுமை பொருளாதாரத்தை நிலை நிறுத்தல் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பிலான இலக்குகளை அடைதல் ஆகிய செயற்பாடுகளை நோக்கிய எமது நகர்வுகளின் முதற்படியாக அமையும்.

இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்காக இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் எட்டாவது செயலாளர் நாயகமும் பொதுச் சபையின் தலைவரும் உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவன (GGGI) சபையின் தலைவருமான பான் கி மூன் அவர்களை வரவேற்கின்றேன்.

இலங்கையில் முதல் தடவையாக நல்லிணக்கத்துக்கு வழிவகுத்த வரலாற்றுச் சிறப்புமிக்க இரண்டு ஒப்பந்தங்களில் பான் கி மூன் சம்பந்தப்பட்டுள்ளார்.

காலநிலை மாற்றம் மற்றும் அது தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நாம் கவலையடைந்துள்ளோம். இதுவரை நடந்தவை திருப்திகரமாக இல்லை. அத்துடன் கடந்த மாநாட்டில் நாங்கள் விரும்பிய முடிவுகள் எட்டப்படவில்லை.

குறைந்த வருமானம் பெறும் நாடுகளும் நடுத்தர வருமானம் பெறும் நாடுகளும் போதுமான நிதி வசதி இல்லாமையினால், வாழ்க்கைத் தரத்தை பராமரிக்க வேண்டிய அதேநேரம் பொருளாதார அபிவிருத்தியை முன்னெடுத்துச் செல்வதற்கும் முயற்சிக்கின்றன.

எனவே, அபிவிருத்தியடைந்த நாடுகள் தமது நிதியுதவியை இரட்டிப்பாக்குவதன் மூலம் தாம் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டுமென இத்தகைய நாடுகள் எதிர்பார்க்கின்றன.

இவ்வருடம் சில அபிவிருத்தியடைந்த நாடுகள் பொருளாதார நெருக்கடியை சந்தித்திருப்பதாக நான் அறிந்துள்ளேன்.

எவ்வாறாயினும், அதற்கான இலக்குகள் முன்னர் நிறைவேற்றப்பட்டிருக்கவில்லை.

எனவே, நாம் இந்த இலக்குகளை எவ்வாறு அடையப்போகிறோம் மற்றும் அதற்கு தேவையான உதவிகள் எவை என்பன தொடர்பிலும் நாம் முழுமையான அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.

அத்துடன் எமது நாட்டின் பொறுப்பில் இல்லாத காபன் உமிழ்வுகளுக்காகவும் அபிவிருத்தியடைந்த நாடுகள் நட்டஈடு வழங்க வேண்டும்.

மூன்றாவது விடயம், நாம் எவ்வாறு இழப்புகள் மற்றம் சேதங்களை அடையாளப்படுத்துவது என்பதாகும்.

அபிவிருத்தியடைந்த நாடுகளை அதிக பணம் செலவழிக்குமாறோ அல்லது மேலும் அபிவிருத்திகளை முன்னெடுக்குமாறோ கேட்கும் விடயம் இதுவல்ல.

நாம் ஒரு பட்டியலின் அடிப்படையில் பணியாற்றுவோம். அவசியமான பணத்தை கணக்கிட்டு, பின்னர் அதனை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பது குறித்து பார்ப்போம்.

அவர்களின் பங்களிப்பு இருக்க வேண்டும், அதேபோல நமது பங்களிப்பும் இருக்க வேண்டும். ஆனால், நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை ஒப்புக்கொள்வோம்.

கடந்த கோப் 26 கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்கள் இதுவரை நிறைவேற்றப்படாமை கவலையளிக்கிறது.

கிளாஸ்கோ மிகச் சிறந்த திருப்புமுனையாகும். பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜொன்சனினால் எடுக்கப்பட்ட முயற்சிகள் முக்கியமானவை. எனினும், அவை பின்தொடரப்படவில்லை. அந்த இலக்குகள் எட்டப்பட்டுள்ளதை நாம் உறுதி செய்ய வேண்டும். எமது இலக்குகள் மற்றும் கோரிக்கைகளை நாம் சுட்டிக்காட்ட வேண்டும்.

இலங்கையானது 2030ஆம் ஆண்டாகும்போது காபன் உமிழ்வை 14.5 சதவீதத்தாலும், அதன் பின்னர் அதனை விடவும் குறைப்பதற்கான செயன்முறையை பின்பற்றி வருகிறது.

காலநிலை மாற்றம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் ஒருங்கிணைப்பதற்காக நாம் ஜனாதிபதி செயலகத்தின் கீழ் காலநிலை மாற்றம் தொடர்பான அலுவலகமொன்றை உருவாக்கவுள்ளோம்.

பின்னர், இயற்கைக்கு ஏற்ப எம்மை தயார்ப்படுத்தும் திட்டம் மற்றும் தேசிய சுற்றுச்சூழல் செயற்திட்டம் ஆகியவற்றையும் தயாரித்துள்ளோம்.

2050க்குள் பசுமை பொருளாதாரம் மற்றும் சிறந்த உலகத்தை உறுதி செய்வதற்காக இவை அனைத்தும் எங்கள் அரசாங்கத்தால் முன்முயற்சியாக எடுக்கப்படுகின்றன.

காபன் நடுநிலைமையை பேணுவதற்காக 2050ஆம் ஆண்டாகும்போது காபன் உமிழ்வை சூனியமாக்குவதற்கான திட்டங்களையும் நாம் முன்னெடுத்து வருகிறோம்.

நிலக்கரி மூலமான ஆற்றலை நாம் மேலும் அதிகரிக்கப்போவதில்லை.

படிம எரிபொருள் மானியங்களை நாம் படிப்படியாக நீக்குவோம். ஏற்கனவே நாம் அதனை நடைமுறைப்படுத்தியுள்ளோம். இவ்வாறு அதனை படிப்படியாக நீக்குவதற்காக நாம் எதிர்தரப்பினரின் தாக்குதலுக்கும் ஆளாகியுள்ளோம்.

2030ஆம் ஆண்டளவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலமான 70 சதவீத மின் உற்பத்தியை நாம் இலக்கு வைத்துள்ளோம்.

இந்த காலகட்டத்துக்குள் நாம் பல முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றோம். முதலாவதாக, காலநிலை மாற்றம் தொடர்பிலான அலுவலகத்துடன் இணைந்து செயற்படக்கூடிய ஒரு புதிய காலநிலை மாற்றம் குறித்த சட்டம் உருவாக்கப்படும்.

அடுத்து, 1980ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட சுற்றுச்சூழல் சட்டத்துக்கு ஈடாக புதிய சட்டமொன்று உருவாக்கப்படும். இது காடுகளை மறுசீரமைப்பது மற்றும் மீட்பது ஆகிய விடயங்களை உள்ளடக்கியதாக இருக்கும்.

அதனை தொடர்ந்து எமது சில சொத்துக்களில் உள்ள உயிரியல் கட்டமைப்புகளை அடையாளம் காண்பது மற்றும் நக்கிள்ஸ் மலைத்தொடர், ஹோர்ட்டன் சமவெளி, சிவனொளிபாத மலை, சிங்கராஜ வனம், மகாவலி ஆறு, ராமர் பாலம் என்பன உயிரியல் கட்டமைப்புகளாக அடையாளம் காணப்படுவது போன்றவை இப்பிராந்தியத்திலேயே மேற்கொள்ளப்படும் முதலாவது விடயமாக அமையும்.

இறுதியாக, சர்வதேச காலநிலை மாற்றம் தொடர்பிலான பல்கலைக்கழகமொன்றினை நிறுவுவதை கூறலாம்.

இதனை நாம் பட்டப்பின் படிப்புக்கான பல்கலைக்கழகமாக நிறுவ வேண்டும். அதில், இந்து சமுத்திரத்தின் அனைத்து பிராந்தியங்களையும் சேர்ந்த அதிகாரிகளுக்கும், ஆபிரிக்காவை சேர்ந்தவர்களுக்கும் காலநிலை மாற்றம் தொடர்பிலான இலக்குகளை அடைவதற்கும் ஒரு புதிய காலநிலை மாற்றம் மற்றும் புதிய பசுமை பொருளாதாரம் ஆகிய விடயங்கள் குறித்த பயிற்சிகளை அளிப்பதன் மூலம் உலகை காலநிலைக்கேற்ப தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும்.

நாம் தற்போது பசுமை பொருளாதாரத்துக்காக போராடுகிறோம். அதனை நோக்கியே நாம் செல்ல வேண்டும்.

விசேடமாக, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொடர்பான திறன் எம்மிடம் இருப்பதை நாம் கண்டறிந்துள்ளோம்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் எம்மிடமுள்ள புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் பசுமை ஐதரசன் ஆகியவற்றை நாம் மதிப்பிட ஆரம்பித்துள்ளோம். எம்மிடம் 30 ஜிகா வாட் மேலதிக திறன் இருப்பதாக சிலர் கூறுகின்றனர். இன்னும் சிலர் 40 என்றும், 50 என்றும் கூறுகின்றனர்.

ஆனால், எம்மிடம் சரியான மதிப்பீட்டளவொன்று இருக்க வேண்டும். அதனையே ஆசிய அபிவிருத்தி வங்கி முன்னெடுத்து வருகிறது.

எனவே, இந்த பிராந்தியத்தில் முதலீடு செய்ய நாங்கள் ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளோம். இது நாம் முன்னேறக்கூடிய இன்னுமொரு பகுதியாகும்.

எமது பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு நாம் புதிய தொழில்நுட்பத்தை பார்க்கிறோம். எனினும், நிச்சயமாக நாம் படிம எரிபொருளுடன் தொடர்புகொள்ள மாட்டோம். அத்துடன் விவசாயத்தை நவீனமயமாக்க தொழில்நுட்ப கைத்தொழில் அடிப்படையிலான புதிய உற்பத்தி மற்றும் சேவைக் கைத்தொழில்களை பெற்றுக்கொள்வது தொடர்பிலும் நாம் கவனம் செலுத்தியுள்ளோம்.

இவற்றை அடிப்படையாகக் கொண்டே நாம் பசுமை பொருளாதாரத்தை நோக்கி நகர்கிறோம். இதில் நாம் சில சிக்கல்களை சந்திக்கப்போகிறோம். அதில் ஒன்றே திறன் குறைபாடு.

மேலும், சர்வதேச நிதியுதவிக்கான சிறந்த அணுகலும் எமக்கு தேவை. நாங்கள் கடனை நிதி ரீதியாகவும் வடிவமைக்க முடியும்.

பசுமை நிதிக் கருவியை பயன்படுத்துவதன் மூலம் தற்போதைய கடன் சுமையை குறைக்க முடியும். எமது உள்நாட்டுக் கொள்கை காலநிலை செழுமைத் திட்டத்துக்கு ஏற்றதாக இருக்கும்.

இலங்கை பின்பற்ற விரும்பும் பாதை இதுவாகும். அத்துடன் இதனை அடைய GGGI எமக்கு உதவும் என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை.

நாளை கைச்சாத்திடப்படும் ஒப்பந்தமே நாம் மேற்கொள்ளவுள்ள மேற்படி செயற்பாடுகளுக்கான முதற்படியாக அமையும் என ஜனாதிபதி ரணில் கூறினார்.

மேலும், இந்த நிகழ்வில் ஐ.நா.வின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கி மூன் கருத்துரையில்,

தனது இறுதி வருகைக்குப் பின்னர் கடந்த ஆறரை ஆண்டுகளுக்குள் இங்கு இடம்பெற்றுள்ள மாற்றங்களை தன்னால் உணர முடிந்துள்ளதாகவும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையின் கீழ் நாட்டில் ஜனநாயகம் மற்றும் நிலைபேண்தகு பொருளாதார அபிவிருத்தி ஆகியவற்றை அடைய முடியும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக கூறினார்.

மேலும், இந்நிகழ்வில் சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட், 2050ஆம் ஆண்டில் இலங்கை பசுமை பொருளாதாரம் தொடர்பில் அடையவுள்ள இலக்குகள் குறித்து கட்டம் கட்டமாக விளக்கமளித்தார்.

சுற்றாடல் அமைச்சின் செயலாளர் டொக்டர் அனில் ஜாசிங்க மற்றும் GGGIயின் நிகழ்ச்சித் தலைவரும் ஆசிய பிராந்தியத்தின் பணிப்பாளருமான கலாநிதி. அச்சலா அபேசிங்க ஆகியோரும் இந்நிகழ்வில் உரையாற்றினர்.

இலங்கைக்கான கொரிய தூதுவர் சந்துஷ் டபிள்யூ. ஜியொங், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, காலநிலை மாற்றம் தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜயவர்தன ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.