;
Athirady Tamil News

ஏ.வி.எம் கால்வாய் சீரமைப்பு -மத்திய அமைச்சரை சந்தித்து விஜய் வசந்த் எம்.பி. வேண்டுகோள்!!

0

மத்திய கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்தா சோனாவாலை, கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் இன்று சந்தித்தார். அப்போது, ஏ.வி.எம் கால்வாயை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கேட்டுக்கொண்டார். 19வது நூற்றாண்டில் அன்றைய திருவிதாங்கூர் மஹாராஜாவால் திருவனந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு, மக்கள் மற்றும் சரக்கு போக்குவரத்திற்காக ஏவிஎம் கால்வாய் பணி துவங்கப்பட்டது.

ஆனால் பல்வேறு காரணங்களால் அந்த பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. ஆனால் இப்போது அந்த கால்வாய் முழு அளவில் இல்லாமல் அரை குறையாக உள்ளது. மேலும் இந்த தடம் மண் மற்றும் கழிவு பொருட்களால் மூடப்பட்டு வருகிறது.

இந்த கால்வாய் பணியை மத்திய அரசு ஏற்றெடுத்து முடித்தால் மக்கள் பயணம் செய்வதற்கும், சரக்கு போக்குவரத்திற்கும் உபயோகம் உள்ள நீர்வழி போக்குவரத்தாக மாறும். இதனால் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க இயலும். திருவனந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரி என்பதை பிற்காலத்தில் கேரள மாநிலம் கொல்லம் வரையிலும், தமிழ்நாட்டின் தூத்துக்குடி வரையில் நீட்டிக்க முடியும்.

மேலும் இந்த கால்வாய் மூலம் நிலத்தடி நீர் உயர்ந்து கடல் நீர் நிலத்திற்குள் புகுவதை தடுத்து, மண்ணை வளம் பெறவும் செய்யும். கன்னியாகுமரியின் சுற்றுலாவை மேம்படுத்தவும் இது உதவும். ஆகையால் ஏவிஎம் கால்வாயை சீரமைக்க சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து, இந்த திட்டத்தை தங்கள் துறையின் கவுரவமாக கருதி அதை சீரமைக்க தேவையான நிதியை ஒதுக்க வேண்டும், என விஜய் வசந்த் எம்.பி. கேட்டுக்கொண்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.