;
Athirady Tamil News

திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது – நாளை மறுநாள் வாக்குப்பதிவு!!

0

திரிபுராவில் நாளை மறுநாள் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான பிரச்சாரம் இன்று மாலை 4 மணியுடன் முடிவுக்கு வந்தது.

வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் மொத்தமுள்ள 60 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நாளை மறுநாள் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், 807 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

ஆளும் பாஜக மற்றும் திரிபுரா உள்ளூர் மக்கள் கட்சி ஆகியவை கூட்டணியாக தேர்தலை எதிர்கொள்கின்றன. முன்னாள் ஆளும் கட்சிகளான சிபிஎம்-மும், காங்கிரசும் கூட்டணி அமைத்துள்ளன. இவ்விரு கூட்டணிகளுக்கு இடையேதான் போட்டி இருக்கும் என்பதால், தேர்தல் முடிவுகள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன.

அதேநேரத்தில், ஏராளமான சுயேட்சைகளும் களத்தில் உள்ளனர். வேட்பாளர்கள் அனைவரும் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வந்த நிலையில், தற்போது பிரச்சாரம் முடிவுக்கு வந்துள்ளது.

தேர்தல் அமைதியாக நடைபெறுவதை உறுதிப்படுத்தும் நோக்கில் அங்கு நேற்றிரவு 10 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வரும் 17ம் தேதி காலை 6 மணி வரை இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தமுள்ள 60 தொகுதிகளுக்கு 56,000 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள டிசம்பருக்கு முன் 100 கம்பெனி மத்திய துணை ராணுவப் படைகள் திரிபுராவுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

இதையடுத்து மேலும் 100 கம்பெனி துணை ராணுவப் படைகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இவை மட்டுமின்றி, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசாரும் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள உள்ளனர். தேர்தலை அமைதியாக நடத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி கிரண் கிட்டி தெரிவித்துள்ளார். வரும் 16ம் தேதி வாக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதன் முடிவுகள் மார்ச் 2ம் தேதி வெளியிடப்பட உள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.