பாலஸ்தீன ஆதரவு போராட்டம்: கிரெட்டா தன்பர்க் மீது பாய்ந்த பயங்கரவாதச் சட்டம்! லண்டனில் கைது!
சுவீடன் நாட்டைச் சேர்ந்த உலகம் நன்கறிந்த இளம் வயது சமூக செயல்பாட்டாளரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான கிரெட்டா தன்பர்க் லண்டனில் கைது செய்யப்பட்டிருப்பதாக செவ்வாய்க்கிழமை(டிச. 23) தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டனில் பாலஸ்தீன ஆதரவுச் செயல்பாட்டு இயக்கத்துக்கு ஆதரவாக நடத்தப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டபோது அவரை லண்டன் மாநகர் போலீஸார் வலுக்கட்டாயமாகக் கைது செய்து போராட்டக் களத்திலிருந்து அழைத்துச் சென்றனர்.
தடை செய்யப்பட்டுள்ள பாலஸ்தீன செயல்பாட்டுக் குழுவுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாக கைது செய்யப்பட்டுள்ள போராட்டக்காரர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, போராட்டக்காரர்கள் அனைவரும் பயங்கரவாதச் செயல் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டிருப்பதாக பாலஸ்தீன ஆதரவு இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.