;
Athirady Tamil News

தீண்டாமை கொடுமையால் மாணவிகள் தற்கொலைக்கு முயன்ற விவகாரம்- முதன்மை கல்வி அலுவலர் பள்ளியில் விசாரணை!!

0

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகே தொப்பம்பட்டி கிராமம் உள்ளது. இப்பகுதியை சேர்ந்த 2 மாணவிகள் சின்னாளபட்டியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்கள் தினமும் பள்ளி சார்பில் இயக்கப்பட்டு வந்த பஸ்சில் பள்ளிக்கு வருகின்றனர். அவ்வாறு வரும்போது அதேபகுதியை சேர்ந்த ஒருசில மாணவிகள் அவர்களிடம் சாதிய பாகுபாடு காட்டி இருக்கையில் அமரவிடாமல் நின்றபடியே வருமாறு மிரட்டியுள்ளனர்.

மேலும் அவர்கள் சமூகத்தை சொல்லியும் திட்டி வந்துள்ளனர். நேற்று காலை பள்ளிக்கு வந்தபோதும் அந்த மாணவிகளுக்கும், மற்றொரு தரப்பு மாணவிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மனஉளைச்சலில் இருந்த அந்த 2 மாணவிகளும் நடந்த விபரங்களை தங்கள் வகுப்பு ஆசிரியரிடம் கூறியுள்ளனர். ஆனால் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தாமல் பாதிக்கப்பட்ட மாணவிகளையே வகுப்பு ஆசிரியர் கண்டித்து அமர வைத்துள்ளார். இதனால் வேதனையடைந்த அந்த மாணவிகள் பள்ளி முடிந்த பிறகு மீண்டும் பஸ்சில் சென்றால் அதேமாணவிகள் தங்களை தரக்குறைவாக நடத்துவார்கள் என்று பயந்தனர்.

இதனால் மாலையில் பள்ளி முடிந்ததும் அந்த 2 மாணவிகளும் கழிவறையில் இருந்த பினாயிலை குடித்து மயங்கி விழுந்தனர். இதைபார்த்த சக மாணவிகள் ஆசிரியரிடம் தெரிவித்தனர். உடனே மாணவிகளை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்பு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். மாணவிகள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து அறிந்ததும் அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆஸ்பத்திரியில் குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

இதனையடுத்து சம்பவம் நடந்த பள்ளிக்கு இன்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நசுருதீன் தலைமையில் வத்தலக்குண்டு வட்டார கல்வி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் மாணவிகளின் வகுப்பு ஆசிரியர், தலைமை ஆசிரியர் மற்றும் மிரட்டல் விடுத்த மாணவிகளிடமும் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். இதன் அறிக்கையை பள்ளிகல்வித்துறைக்கும், மாவட்ட கலெக்டருக்கும் அளிக்க உள்ளதாகவும், அதன்பிறகு ஆசிரியர்கள் மீதான நடவடிக்கை இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட மாணவிகள் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் இன்று 2-வது நாளாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் மாணவிகளின் பெற்றோர், கிராம மக்கள் சின்னாளபட்டி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். பள்ளி மாணவிகளுக்கு தீண்டாமை கொடுமை விடுத்த மாணவிகள் மற்றும் உரிய நடவடிக்கை எடுக்காத ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பதட்டமான சூழல் உருவானது. சம்பவ இடத்திற்கு மாவட்ட எஸ்.பி பாஸ்கரன், டி.எஸ்.பி கோகுலகிருஷ்ணன் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.

இச்சம்பவம் குறித்து மனிதஉரிமைகள் ஆணையம், எஸ்.இ.எஸ்.டி பிரிவு நீதிபதி தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தி இனிவரும் நாட்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்து கொள்ளவேண்டும் என்று தெரிவித்தனர். தேர்வு நெருங்கிவரும் நிலையில் மாணவிகளுக்கு இதுபோன்ற பிரச்சினை ஏற்பட்டுள்ளதால் மற்றமாணவிகளின் பெற்றோர்களும் அச்சமடைந்துள்ளனர். இதனால் சம்பந்தப்பட்ட பள்ளி முன்பும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.