;
Athirady Tamil News

ராஜஸ்தான் மாணவியின் கிரிக்கெட் கனவு நனவாகிறது- சமூக வலைதளங்களில் வீடியோ வெளியானதால் பலரும் உதவி!!

0

சமூக வலைதளங்களில் வெளியான காட்சிகளால் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஒரு கிராமத்து மாணவியின் வாழ்க்கை பாதை ஒரே நாளில் மாறி உள்ளது. இதன்மூலம் அவரது கிரிக்கெட் கனவும் நனவாக இருக்கிறது. ராஜஸ்தான் பார்மர் மாவட்டம் கனசார் கிராமத்தை சேர்ந்தவர் முமல் மெகர். 14 வயது சிறுமியான இவர் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். ஏழை விவசாய குடும்பத்தை சேர்ந்த இவருக்கு கிரிக்கெட் மீது தீராத காதல் இருந்தது. இதனால் கிரிக்கெட்டில் எப்படியும் சாதிக்க வேண்டும் என்ற வெறியுடன் அவர் தினமும் பள்ளிக்கு சென்று வந்ததும் மாலை நேரத்தில் கிராமத்து சிறுவர்களுடன் விளையாட தொடங்கினார். அவர் வசித்து வந்த கிராமம் பாலைவன பகுதி ஆகும். அவருக்கு ஷீ வாங்க வசதி இல்லாததால் அவர் பாலைவன மணல் திட்டில் எதுவும் அணியாமல் வெறுங்காலுடன் கிரிக்கெட் பயிற்சி பெற்று வந்தார்.

அவரது கிரிக்கெட் பக்தியை கண்ட பள்ளி ஆசரியர் ரோசன்கான் அவருக்கு தினமும் பயிற்சி கொடுத்தார். இதன் மூலம் அவர் உள்ளூரில் நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்புகள் கிடைத்தது. இந்த போட்டிகளில் அவர் பவுண்டரி,சிக்சர் என விளாசி கிரிக்கெட் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தான் வெறுங்காலுடன் பாலைவன மணலில் கிராமத்து சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடும் காட்சியை முமல் மெகர் தனது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.

இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அவர், பவுண்டரி, சிக்சர் அடிப்பதை பார்த்த பலரும் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்தனர். இதற்கு அதிக லைக்குகளும் கிடைத்தது. கிரிக்கெட் முன்னாள் வீரர் தெண்டுல்கரும் அந்த மாணவிக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். பெண்கள் பிரிமீயர் லீக் போட்டிக்கான ஏலம் நடைபெற்ற நிலையில் மாணவி முமல் மெகர் கிரிக்கெட் விளையாடும் காட்சி சமூக வலைதளங்களில் பரவியது அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. அம்மாநில பாரதிய ஜனதா தலைவர் சதீஷ் பூனியா அந்த மாணவிக்கு உதவ முன்வந்தார்.

மாணவி விளையாடுவதற்கு தேவையான கிரிக்கெட் பேட், கையுறைகள் மற்றும் உடைகள் என அவருக்கு தேவையான அனைத்தையும் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். இதே போல பலரும் அவரது திறமையை பார்த்து உதவ முன்வந்துள்ளனர். இது அவரை நெகிழ வைத்துள்ளது. தனது கிரிக்கெட் கனவு விரைவில் நனவாக இருப்பதாக அவர் பூரிப்பு அடைந்து உள்ளார். கிரிக்கெட் ஷூ மற்றும் அதற்கான உடை அணிந்து முன்பை விட அவர் கிரிக்கெட்டில் தீவிர பயிற்சி எடுத்து வருகிறார். அவரது திறமைக்கு வாய்ப்பு அளிக்க பல கிரிக்கெட் அணிகள் முடிவு செய்துள்ளன.

இதனால் எதிர்காலத்தில் முமல் மெகர் கிரிக்கெட் விளையாட்டில் ஜொலிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. முமல் மெகருக்கு உடன் பிறந்த சகோதரிகள் 7 பேரும், சகோதரர்கள் 2 பேரும் உள்ளனர். இதில் மூத்த சகோதரி அனிஷா தான் சிறுவயதில் முமலின் அசாத்திய திறமையை கண்டு அவரை ஊக்கப்படுத்தி இந்த அளவுக்கு வளர வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளங்களில் வெளியாகும் வீடியோக்கள் சிலரது வாழ்க்கையை மாற்றி விடும் என்பதற்கு முமல் மெகர் ஒரு எடுத்துக்காட்டாக உள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.